|
வங்காளத்தைச் சேர்ந்த சரத்சந்திரரும், சரத் பண்டிதரும் பிரபல எழுத்தாளர்கள். இவர்களில் சரத் சந்திரரே வயதில் பெரியவர். ஒருநாள், சரத்பண்டிதர் தன் நண்பரின் வீட்டிற்கு சென்றார். அங்கு பலரும் வந்தனர். அவர்களுடன் இலக்கியம் பற்றி பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் தற்செயலாக சரத்சந்திரரும் வந்தார். அப்போது ஒரு நண்பர் விளையாட்டாக, உங்கள் இருவரில் யார் பெரியவர் என்பதைச் சொல்லுங்கள்...பார்க்கலாம், என்றார் சிரித்தபடியே! இருவருக்கும் தர்ம சங்கடமாக போய் விட்டது. இருந்தாலும், சரத் சந்திரர் தன் வயதை மட்டும் கணக்கில் கொண்டு, நான் தான் பெரியவன் என்று பதில் அளித்தார். உடனே சரத் பண்டிதர் விருட்டென எழுந்தார். யார் சொன்னது? நான் தான் பெரியவன், என்று சத்தமாகச் சொன்னார் . எல்லாரும் அவர் அடுத்து என்ன சொல்லப் போகிறார் என ஆவலுடன் கவனித்துக் கொண்டிருந்தனர். உண்மையைத் தான் சொல்கிறேன். வயதில் வேண்டுமானால், சரத் சந்திரர் பெரியவராக இருக்கலாம். ஆனால், மற்ற எல்லோரையும் விட அவர் சின்னவர் என்னும் உண்மையை சொல்லாமல் என்னால் இருக்க முடியாது... என்றவர் சற்று நிறுத்தினார் தொடர்ந்து, ஒரு பொருளை மற்றொரு பொருளுக்குள் வைக்க வேண்டும் என்றால், வைக்கப்படும் பொருள் சின்னதாகவும், வைக்கும் பொருள் பெரியதாகவும் இருந்தால் தானே முடியும்! சரத் சந்திரரோ, நம் போன்ற இலக்கிய ரசிகர்களின் இதயத்தில் வாழும் மன்னவர் என்பது உண்மையானால், அவர் நம் எல்லோரையும் விட சிறியவர் என்பது தானே உண்மை! என்று விளக்கம் அளித்தார். பண்டிதரின் சாமர்த்தியான பதில் கேட்டு அனைவரும் மகிழ்ந்தது மட்டுமல்ல! மூச்சும் விட்டனர். |
|
|
|