|
கண்ணனும், பலராமனும் மாடுகளை ஓட்டிக் கொண்டு மேய்ச்சலுக்குப் புறப்பட்டனர். அவர்களது நண்பன் ஸ்ரீதாமா உள்ளிட்டவர்கள் உடன் சென்றனர். செல்லும் வழியில் ஸ்ரீதாமா கண்ணனிடம், கண்ணா! இதோ தெரியும் பனந்தோப்பில் கிடைக்கும் பழத்தின் சுவை அபாரமாக இருக்கும். ஆனால், இங்கே அவ்வளவு எளிதில் யாரும் நுழைந்து விட முடியாது! இதனுள், தேனுகாசுரன் என்னும் கொடியவன்இருக்கிறான். அவன் மனிதர்களை அப்படியே விழுங்கி விடுவான். அதேநேரம், நீ மனது வைத்தால் நண்பர்களாகிய எங்களுக்கு பழம் சாப்பிடும் ஆசை நிறைவேறும், என்றான். கண்ணனும், பலராமனும் தோட்டத்துக்குள் நுழைந்து, பழங்களைப் பறித்துப் போட்டனர். பனை மரங்களில் உண்டானசலசலப்பு ஒலி அசுரனின் காதில் விழுந்தது. கோபத்துடன் ஓடி வந்தான். கழுதை வடிவில் தன்னை உருமாற்றி, கால்களால் உதைக்க வந்தான். ஆனால், கிருஷ்ண பலராமர், அதன் பின்னங்கால்களைச் சுழற்றி மரத்தில் மோதச் செய்து கொன்றனர். பின், அசுரனின் உறவினர்கள் அனைவரும் கழுதைகளாக உருவெடுத்து அவர்களைத் தாக்க வந்தனர். அத்தனை கழுதைகளையும் அவர்கள் கொன்று குவித்தனர். நண்பர்களோடு சேர்ந்து கண்ணனும், பலராமனும்பழங்களைச் சாப்பிட்டனர். நம்பியவர்களின் விருப்பத்தை நிறைவேற்றுவது தன் கடமை என்பதை கண்ணன் இதன் மூலம் நிரூபித்தான்.
|
|
|
|