|
ராமன் அயோத்தி மன்னராக இருந்தபோது, ஒரு வயோதிகர் பசியால் வருந்தியபடி தெருவில் நடந்து கொண்டிருந்தார். உணவு கிடைக்காத கோபத்தில், தெருவோரம் நின்ற நாயைத் தன்னிடமிருந்த கோலால் அடித்தார். வலி தாங்க முடியாமல் நாய் கத்தியது. இருந்தாலும், அடிப்பதை கைவிடவில்லை. கை ஓய்ந்ததும் கோபமும் தணிந்தது. வேதனையுடன் நாய், அடப்பாவி! நான் என்ன பாவம் செய்தேன்? எதற்காக என்னை அடித்தாய்? இதற்கு ராஜா ராமனிடம் போய் நியாயம் கேட்கிறேன்! என்று அரண்மனைக்கு ஓடியது. வாசலில் இருந்த ஆராய்ச்சிமணியின் கயிற்றை இழுத்தது. மணி ஒலித்த சத்தம் கேட்டு, யாரோ நீதி கேட்க வந்ததை அறிந்த லட்சுமணன் ஓடி வந்து பார்த்தார். வாசலில் காயத்துடன் நாய் நின்றததைக் கண்டார். நடந்ததை நாய் விவரிக்க, சேவகர்கள்வயோதிகரை அழைத்து வந்தனர். ராமனும் வயோதிகரிடம் விசாரிக்க, பசித்துன்பம் தாங்க முடியாததால் கோபம் உண்டானதையும், அதை தீர்த்துக் கொள்ள நாயைத் துன்புறுத்தியதையும் ஒப்புக் கொண்டார். ராமரோ, இந்த விஷயத்தில் நான் தீர்ப்பு சொல்வதை விட, நாயான நீயே தீர்ப்பு சொல்வது தான் சரி என்று தோன்றுகிறது, என்று தெரிவித்தார்.
ராமா! இப்போதே இவரைப் பெரும்செல்வந்தராக வாழச் செய்யுங்கள் என்று தீர்ப்பு அளித்தது நாய்.நாயின் பெருந்தன்மையை லட்சுமணன் வியந்து பாராட்டினான்.அப்போது ராமர் லட்சுமணனிடம்,லட்சுமணா! அவசரப்பட்டு பாராட்டாதே! நீ உண்மையை அறியாமல் பேசுகிறாய். முற்பிறவியில் இந்த நாய் பெரும் பணக்காரனாக வாழ்ந்த போது பாவச்செயல்களில் ஈடுபட்டது. அந்த தீவினையின் பயனாக நாயாகப் பிறந்து அல்லல்படுகிறது. தன்னைப் போலவே, இந்த வயோதிகரும் நாய்ப்பிறவி எடுக்க வேண்டும் என்று எண்ணியே செல்வவளத்தை வழங்கும்படி தீர்ப்பு கூறியுள்ளது என்றார்.தன் மனதில் இருப்பதை அப்படியே ராமர் சொல்வதைக் கேட்டதும், நாய் தலை குனிந்து அவரிடம் மன்னிப்பு கேட்டது. ஆனால், ராமர் தப்பு செய்தவனுக்கு தண்டனை கொடுப்பது தான் நீதி என்று சொல்லி, நாயை அடித்தவரை தண்டித்ததோடு, இனி இப்படி யாருக்கும் தீங்கு செய்யக் கூடாது என்றும்அறிவுறுத்தினார். நாய்க்கும் நல்வாழ்வு வழங்கி, மோட்சகதி தந்தார். |
|
|
|