|
ஒரு குடும்பஸ்தர் நாற்பது வயதைத் தாண்டி விட்டார். பேர் சொல்ல பிள்ளையும் இல்லை! குடியிருக்க சொந்த வீடும் இல்லை. இதெல்லாம் வேண்டுமென, அவரது மனைவி ஏகாதசி விரதம், புரட்டாசி சனி விரதம் என அனுஷ்டித்துக் கொண்டிருந்தார். ஒரு விரத நாளன்று அவர்களின் வீட்டுக்கு துறவி ஒருவர் வந்தார். குடும்பஸ்தர் தன் பிரச்னையை அவரிடம் சொன்னார். சுவாமி! எந்த மனிதனுக்கும் அடிப்படையான விஷயம் இரண்டு. ஒன்று பிள்ளை. குடியிருக்க வீடு. இந்த இரண்டையும் கடவுளிடம் கேட்பது பேராசை இல்லை என்றே நினைக்கிறேன்! ஆனால், இதைக் கூட எனக்கு பெருமாள் தரவில்லை. அவரைக் கும்பிட்டு என்ன பயன்? என்று விரக்தியோடு கேட்டார். துறவி சிரித்தார்.உனக்கு தொழில் நல்ல விதமாக நடக்கிறதா? ஆரோக்கியமும் அப்படித் தானே!பெருமாள் புண்ணியத்தில் இரண்டும் இருக்கிறது. ஆனால், எனக்குத் தேவைப்படுவது கிடைக்கவில்லையே!...குடும்பஸ்தர் தன் ஆதங்கத்தைக் கொட்டினார்.துறவி அவரிடம்,அப்பனே! சிலர் கோடீஸ்வரராக இருப்பர். அவர்களுக்கு பிள்ளை இருக்காது! அவர்கள் உன்னைப் போல ஏங்குவர். சிலர் ஏழையாக இருப்பர். ஆனால்,ஏழெட்டு பிள்ளைகளை வைத்துக் கொண்டு, ஐயையோ! இதுகளை வளர்க்கிறதுக்குள்ளே போதும் போதுமினு ஆயிடுதே! என்று குறைபடுகிறார்கள். வீட்டுக்கு வீடு வாசப்படி என்பது போல, அவரவர் மட்டுக்கு ஏதாவது பிரச்னை, குறை இருக்கத் தான் செய்யும். ஆரோக்கியமான உடல், லாபமான தொழில் வாய்த்திருப்பதே கடவுளின் அருள் தான். இருப்பதைக் கொண்டு சந்தோஷத்துடன் இரு. பெருமாளை தொடர்ந்து மனதார வணங்கு. உன் கோரிக்கை நிறைவேறும், என்றார். குடும்பஸ்தர் ஆறுதலடைந்தார். |
|
|
|