|
ஒரு பெருமாள் பக்தனும், மற்றொருவனும் நண்பர்கள். நண்பனுக்கு கடவுள் பெயர் சொன்னாலே கோபம் வந்து விடும். பக்தியில் மட்டுமே இருவருக்கும் இந்த முரண்பாடு. மற்றபடி அவர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவி செய்து நட்பாய் வாழ்ந்தனர். பக்தன் ஏகாதசி விரதமிருக்க தவற மாட்டான். கோயில், குளம் என்று அடிக்கடி குடும்பத்தோடு சென்று வருவான். நண்பனோ, நாத்திக வாதம் பேசி வம்புக்கு இழுப்பான். இருவருக்குமே முதுமை வந்து, வாழ்வு முடிந்தது. இருவருமே சொர்க்கம் சென்றார்கள். பக்தனுக்கோ ஆச்சர்யம் தாங்கவில்லை.பெருமாளே! எப்போதும் நீயே கதி என்று கிடந்தவன் நான். அவனோ, உன்னைத் திட்டித் தீர்த்தவன். இருவருக்கும் எப்படி சொர்க்கம் தந்தாய்? என்றான். பெருமாளுக்கு சிரிப்பு வந்து விட்டது. பக்தனே! ஒருவன் நாத்திக வாதம் பேசுவதால் நான் அழியப் போவதுமில்லை. ஆஸ்திகனாக, என்னைப் புகழ்வதால் நான் உண்டாவதுமில்லை. நாத்திகனும், தான் வாழும் காலம் வரையிலும் என் நாமத்தை உச்சரித்தான். உண்மையில், உன்னை விட அவனே அதிகம் என் பெயரை உச்சரித்தவன். அழைத்தவர் யாராக இருந்தாலும், அடைக்கலம் அளிப்பது என் கடன். அதனால், அவனையும் ஆட்கொண்டேன், என்றார். பக்தன் மகிழ்ந்தான். நாத்திகனும் கடவுளின் அருளை உணர்ந்தான். |
|
|
|