|
மன்னர் பிம்பிசாரர், ஆடு ஒன்றை வேள்வியில் பலியிடும் நோக்கில் யாகசாலையில் கட்டி வைத்திருந்தார். இதைக் கேள்விப்பட்ட புத்தர் யாக சாலைக்கு வந்தார். உன்னைப் படைத்த கடவுளே இந்த ஆட்டையும் படைத்தார் என்பதை நீ ஒத்துக் கொள்கிறாய் அல்லவா? அவரது படைப்பை, அவருக்காகவே கொன்றால் அவருக்கு திருப்தி உண்டாகுமா? என்று கேட்டார். பிம்பிசாரரால் பதிலேதும் சொல்ல முடியவில்லை. புத்தரே! என் அமைச்சரைக் கேளுங்கள். அவர் சொல்லித் தான் நான் இந்த யாகத்திற்கு ஏற்பாடு செய்தேன் என்றார் பிம்பிசாரர். அமைச்சரை நோக்கி ,யாகத்தில் ஏன் ஆட்டை பலியிட வேண்டும்? என்று கேட்டார் புத்தர். என்றாவது ஒருநாள் ஆடு சாகத்தான் போகிறது. ஆனால், அப்போது அதற்கு ஒருபயனும் உண்டாகப் போவதில்லை. ஆனால், இப்போது இந்த யாகத்தீயில் பலி கொடுப்பதால் மோட்சகதியை அடையும்! என்றார்.இதைக் கேட்ட புத்தர், உங்களுடைய தகப்பனார் எங்கிருக்கிறார்? என்று கேட்டார்.அமைச்சரும், அவர் வீட்டில் சுகமாக இருக்கிறாரே! என்று பதில் கொடுத்தார்.அவரும் மோட்சகதியை அடைந்தால் உங்களுக்கு சந்தோஷம் தானே! சாதாரணமாக உயிர் பிரிந்தால், அவருக்கு மோட்சத்தில் இடம் கிடைக்கப் போவதில்லை. அவரை முதலில் யாகத்தில் பலி கொடுக்க ஏற்பாடு செய்யுங்கள்! என்றார் புத்தர். பதில் சொல்ல முடியாமல் விழித்தார் அமைச்சர். இதைக் கண்ட பிம்பிசாரர், பலி கொடுப்பது தவறு என்பதை உணர்ந்து, ஆட்டை அவிழ்த்து விடும்படி உத்தரவிட்டார். விடுதலை பெற்ற மகிழ்ச்சியில் ஆடும் துள்ளியபடி புத்தர் அருகில் வந்தது. அவரும் தன்கைகளால் தடவிய படி அன்பை வெளிப்படுத்தினார்.
|
|
|
|