|
ஒரு தந்தை ஏராளமான சொத்துக்கள் வைத்திருந்தார். தன் பணத்தை ஏழை எளிய மக்களுக்கு தொழில் செய்வதற்கு தானமாக வழங்கினார். அவரது தானத்தால் மகிழ்ந்த மக்கள் அவரை வாழ்த்தினர். தொழில் பெருகி ஊரே செழித்தது. ஒருநாள், அவர் இறந்து போனார். சொத்து முழுவதும் அவரது மகனுக்குச் சேர்ந்தது. அப்பாவுக்கு கொஞ்சம் கூட பொருத்தமில்லாத குணம் கொண்ட அந்த கருமி மகன், யாருக்கும் எதுவும் கொடுக்காமல், ஊதாரித்தனமாக பணத்தைச் செலவழித்தான். குடி, பெண் சகவாசம் என அத்தனையையும் தொலைத்தான். வறுமையில் ஆழ்ந்õன். இதை பிதுர்லோகத்தில் இருந்து கவனித்த தந்தை வருத்தப்பட்டார். தேவதைகளிடம் அனுமதி பெற்று பூலோகம் வந்த அவர், தன் மகனிடம் ஒரு அட்சய பாத்திரத்தைக் கொடுத்தார். மகனே! இது கேட்டதையெல்லாம் தரும். இதில் கிடைக்கும் செல்வத்தை பயனுள்ள வழியில் செலவழி. உன் கஷ்டமும் தீரும். பிறர் கஷ்டமும் தொலையும், என்று புத்திமதி சொல்லி விட்டு போய்விட்டார். சரியென தலையாட்டிய அவன், பாத்திரத்தைப் பெற்ற அடுத்த நிமிடமே, பாத்திரமே! எனக்கு நிறைய மதுவைக் கொடு, என பிரார்த்தித்தான். மதுவைக் குடித்தான். அதிலிருந்து கிடைத்த பொற்காசுகளைக் கொண்டு மீண்டும் சுகம் தேட ஆரம்பித்தான். ஒருநாள், போதையில் அந்த பாத்திரத்தை கீழே போட அது நொறுங்கிப் போனது. நல்லவர்களிடம் சேரும் பணமே என்றும் நிலைக்கும். கெட்டவர்களுக்கு அந்தப் பணமே பாடம் கற்றுத்தந்து விடும்.
|
|
|
|