|
அரசன் விக்கிரமாதித்தனும், அவனது அமைச்சர் பட்டியும் உஜ்ஜயினியிலுள்ள ஒரு ஆலமரத்தடியில் தங்கினர். அங்கிருந்த கல்வெட்டில், இங்குள்ள ஐந்து உறிகளையும் ஒரே வீச்சில் வெட்டியெறிந்து, அருகிலுள்ள திரிசூலத்தில் எவன் ஒருவன் பாய்கிறானோ, அவனுக்கு உஜ்ஜயினி மாகாளி (தமிழகத்தில் உச்சினி மாகாளி) காட்சியளிப்பாள் என்று எழுதப்பட்டிருந்தது.பட்டியின் ஆலோசனைப்படி, அந்த உறிகளை ஒன்றாகச் சேர்த்துக்கட்டி வாளால் வெட்டிய விக்கிரமாதித்தன், திரிசூலத்தில் பாய்ந்தான். உடனே காளிதோன்றி, அவனைத் தாங்கிப் பிடித்தாள். தைரியசாலியான நீ, ஆயிரம் ஆண்டுகள் அரசாள்வாய், என்று வரமளித்தாள்.தனக்கும் அதே ஆயுள் வேண்டுமென வேண்டிய பட்டியும் சூலாயுதத்தில் பாய முயன்றான். அவனுக்கு இரண்டாயிரம் ஆண்டு வாழ வரமளித்தாள் காளி. இதனால், இருவரும் சமகாலம் வாழ என்ன செய்வதென ஆலோசித்து புத்திசாலித்தனமாக முடிவெடுத்தனர். விக்கிரமாதித்தான் காடாறு மாதம், நாடாறு மாதம் இருந்தால், காளியின் வாக்குப்படி இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ முடியும் என்றுமுடிவெடுக்கப்பட்டது. (ஒரு ஆண்டில் 6 மாதம் விதம் இரண்டாயிரம் ஆண்டு ஆண்டால், ஆயிரம் ஆண்டு தொடர்ச்சியாக ஆண்ட கணக்கு வருமல்லவா!) இதன்படி, அவர்கள் இரண்டாயிரம் ஆண்டுகள் வாழ்ந்தனர். தெய்வத்தின் அருளை புத்திசாலிகள் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சரி தானே! |
|
|
|