|
ஒரு மடத்தில் நிறைய துறவிகள் இருந்தனர். தினமும் பிட்சைக்காக வெளியே புறப்பட்டுப் போய் பின்னர் மடத்துக்குத் திரும்புவார்கள். ஒரு நாள் ஒரு துறவி பிட்சைக்காக சாலையில் சென்று கொண்டிருந்தபோது அங்கே ஒருவனை கோபாவேசமாக அடித்துக் கொண்டிருந்தார் ஜமீன்தார் ஒருவர். கருணை நிரம்பிய அந்த துறவி, ஜமீன்தாரிடம் சென்று, அவனை அடிக்க வேண்டாம். விட்டுவிடுங்கள் என்று வேண்டிக் கொண்டார். ஜமீன்தாருக்குக் கோபம் இன்னும் அதிகமானது. துறவியைப் போட்டுத் துவைக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் சுய நினைவை இழந்து தரையில் சரிந்தார் துறவி. விஷயம் கேள்விப்பட்டு மடத்தில் இருந்து நாலைந்து துறவிகள் ஓடோடி வந்து அடிபட்ட துறவியைத் துõக்கிக் கொண்டு போனார்கள். முதலுதவி செய்தார்கள். ஆனால், துறவி கண் திறக்கவில்லை. லேசாக அவருக்கு விசிறி விட்டு, வாயில் சிறிதளவு பாலைக் கொடுத்தனர். அதன்பின் கண் திறந்தார் அடிபட்ட துறவி.
இழந்த நினைவை இவர் திரும்பப் பெற்று விட்டாரா என்பதை அறிந்து கொள்வதற்காக ஒரு துறவி, சுவாமி... உங்களுக்குப் பால் புகட்டும் இவர் யார் என்று அடையாளம் தெரிகிறதா? என்று கேட்டார். பால் புகட்டியவரைத் திரும்பிப் பார்த்த அடிபட்ட துறவி, சகோதரா.... என்னை யார் அடித்தாரோ அவர்தான் எனக்கு இப்போது பால் ஊட்டுகிறார் என்றார். முற்றும் துறந்த ஒரு துறவியின் பார்வையில் - தன்னை அடித்தவனுக்கும் பால் கொடுத்து நினைவை வரவழைத்தவனுக்கும் வித்தியாசம் இல்லை. எனவே, நடக்கின்ற எந்த ஒரு செயலுக்கும் எந்த ஒரு தனிப்பட்ட நபரும் காரணம் இல்லை. இயக்கம் எங்கேயோ இருக்கிறது. இதில் நல்லவர், கெட்டவர் என்கிற பாகுபாடு எங்கிருந்து வந்தது? இறை வழிபாட்டில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் இத்தகைய மன நிலையைப் பெறலாம். |
|
|
|