|
ராமசாமி தீட்சிதர் சங்கீதத்தில் கைதேர்ந்தவர். வித்யா உபாசனையில் ஈடுபட்ட கொண்ட அவருக்கு வயது நாற்பதைத் தொட்டது. நீண்டநாளாகப் பிள்ளை இல்லையே என்ற கவலையுடன் மனைவியை அழைத்துக் கொண்டு வைத்தீஸ்வரன் கோயில் புறப்பட்டார். அங்குள்ள முத்துக்குமார சுவாமி சந்நிதியில் ஒரு மண்டலம் தங்கி விரதம் மேற்கொண்டார்.ஒருநாள், தீட்சிதரின்மனைவிக்கு தெய்வீக கனவு ஒன்று வந்தது. அவரின் மடியில் யாரோ சுவாமியின் பிரசாதமான தேங்காய், பழத்தை கட்டிவிடுவது போல தோன்றியது. பிள்ளை வரம் தருவதற்காக முருகனே கனவில் வந்து அருள்புரிந்ததை உணர்ந்த மனைவி, கணவரிடம் சொல்லி சந்தோஷப்பட்டார். அதற் கேற்ப அவரும் கருவுற்றார். பங்குனி மாதம் கிருத்திகை நாளில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. முத்துசுவாமி என வைத்தீஸ்வரன் கோயில் முருகன் பெயரையே குழந்தைக்கு வைத்து மகிழ்ந்தனர். முத்துசுவாமியும் பக்தியில் சிறந்தவராக வளர்ந்தார்.தன்னுடைய குருநாதருடன் காசிக்குச் சென்று தங்கியிருந்தார். அங்கேயே வாழ்வு முடியப் போவதை அறிந்த குருநாதர்,சீடரான முத்துசாமியைத்தென்னகத்திற்கு திரும்பி திருத்தணி முருகனைத் தரிசித்தால் பிறவிப்பயனைப் பெற முடியும் என அருள் வாக்கு அளித்தார். முத்துசாமி தீட்சிதரும் திருத்தணிக்குப் புறப்பட்டு வந்தார். குளத்தில் நீராடி விட்டு மலைப்படியில் ஏறத் தொடங்கினார். அப்போது முருகப்பெருமானே ஒரு கிழவராகத் தோன்றி, முத்துசாமி என அருகில் அழைத்தார். அவரின் வாயில் கற்கண்டு கட்டியை போட்டு விட்டு மறைந்தார்.வந்தவர் முருகனே என்பதை உணர்ந்த முத்துசாமி தீட்சிதருக்கு இசை ஞானம் பெருக்கெடுத்து முருகனை வணங்கி நின்றார்.
|
|
|
|