|
மரவேலை செய்து வந்த கந்தனுக்கு, பெரும் பொருள் சம்பாதிக்கும் ஆசை இருந்தது. அவன் உள்ளூரில் இருக்கும் முருகன் கோயிலுக்கு அடிக்கடி செல்வதுண்டு. அன்று மாலை கோயிலுக்குச் சென்று, முருகா! என்னை மட்டும் ஏன் பணக்காரனாகப் படைக்கவில்லை. உனக்கு என் மீது கருணைஇல்லையா? என்று வருந்திச் சொன்னான். அன்றிரவு, அவன் ஒரு கனவு கண்டான். முருகப்பெருமான் அவன் கனவில் தோன்றினார். அவனை ஒரு பட்டறைக்கு அழைத்துச் சென்றார். அங்கு பல மயில்கள் செய்யப்பட்டு இருந்தன. இம்மயில்களில் உனக்குப் பிடித்தமானதை எடுத்துக் கொண்டு, மலைமீதுள்ள முருகன் கோயிலுக்குச் செல் என்றார். கந்தன், வர்ணம் பூசப்பட்ட தோகையுடன் இருந்த அழகுமயிலை எடுக்கச் சென்றான். ஆனால், உலோகத்தால் ஆன அதை அவனால் துõக்க முடியவில்லை. மரத்தாலான மற்றொரு மயில் துõக்குவதற்கு சுலபமாக இருந்தது. அதை தலையில் சுமந்து கொண்டு மலைக்கோயிலுக்குக் சென்றான். முருகப்பெருமான் அவனைக் கண்டு சிரித்தார். உலோகத்தால் ஆன மயிலை ஏன் கொண்டு வரவில்லை. நீ மரவேலை செய்பவன் என்பதால் மர மயிலைக் கொண்டு வந்தாயா? என்று கேட்டார். அதை துõக்க முடியவில்லை என்றும், மரமயில் எடை குறைவாக இருந்ததால், மலை மேல் ஏறிவர சவுகரியமாக இருக்குமே என்று அதைத் துõக்கி வந்ததாகவும் கந்தன் சொன்னான். நீ சொல்வது சரிதான். நீ கனமான மயிலைக் கொண்டு வர நினைத்திருந்தால் நிச்சயம் மலையேற முடியாமல் போயிருக்கும். அது போலத்தான் உலகில் கோடீஸ்வரனாக வாழ வேண்டும் என்றால் பொறுப்புகளும் அதிகமாகும். அதுமட்டுமில்லாமல், கடுமையான உழைப்பைத் தர வேண்டும். அதன் காரணமாக பல சுமைகளைத் தாங்க வேண்டும். பல வழிகளில் பாவங்களைச் செய்யவும் வாய்ப்புகள் ஏற்பட்டு விடும். நீ உன் நிலையிலிருந்தே முன்னேறுவதற்கான வழியைப் பார். இருக்கும் நிலையிலேயே நிம்மதியைத் தேடு. இப்போது வாழ்கின்ற வாழ்க்கையை ரசிக்க கற்றுக்கொள். சுமையைக் குறைத்தால் சுகம் பெறுவாய், என்று கூறிவிட்டு மறைந்தார். கனவில் இருந்து விழித்த கந்தன், தன் அறிவுக்கண்களைத் திறந்த முருகப்பெருமான் சொன்ன பாதையில் நடக்க உறுதியெடுத்தான். |
|
|
|