|
ஒருசமயம் அசுரர்கள் பிரம்மாவைச் சந்தித்து,ஐயனே! நீங்கள் தான் எங்களையும் படைத்தீர்கள்! தேவர்களையும் படைத்தீர்கள்! ஆனால், எங்களைச் சரிவர கவனிக்காமல், தேவர்களின் முன்னேற்றத்திலேயே கவனம் செலுத்துகிறீர்கள். இது பாரபட்சமானது இல்லையா? என்றனர்.பிரம்மா அவர்களிடம்,நான் எல்லாரையும் ஒன்று போல் தான் படைக்கிறேன். ஒருரவது முன்னேற்றம் என்பது அவரது முயற்சி, ஒற்றுமையைப் பொறுத்து தான் இருக்கிறது, என்றார்.அசுரர்கள் அதை நம்ப மறுக்கவே, இதை நிரூபிப்பதாக வாக்களித்தார்.ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்த பிரம்மா, தேவர்களையும், அசுரர்களையும் வரவழைத்தார். பெரிய பெரிய லட்டுகள் தயாராக இருந்தன. அசுரர்களை அழைத்து,நீங்கள் எல்லாரும் இந்த லட்டைச் சாப்பிடலாம். ஆனால், முழங்கையை மடக்காமல் சாப்பிட வேண்டும், என்று நிபந்தனை விதித்தார். அசுரர்கள் எவ்வளவோ முயற்சித்தும், அப்படி சாப்பிட முடியவில்லை. லட்டெல்லாம் கீழே விழுந்து நொறுங்கியது தான் மிச்சம்.தேவர்களை அழைத்து அவர்களையும் அதே முறையில் சாப்பிடச் சொன்னார். அவர்கள் லட்டை எடுத்தார்கள். நீட்டிய கையை மடக்காமல், எதிரே இருந்தவர் வாயில் ஒருவருக்கொருவர் ஊட்டிக் கொண்டார்கள். நிம்மதியாகசாப்பிட்டு முடித்தார்கள்.இப்போது, பிரம்மா அசுரர்களை அழைத்தார்.பார்த்தீர்களா! மற்றவர்களுக்கு உதவும் குணமும், புத்திசாலித்தனமுமே தேவர்களின் வயிறு நிறைய காரணமாக இருந்தது. நீங்கள் சுயநலவாதிகளாகவும், முட்டாள்களாகவும் இருந்ததால் எதுவுமே கிடைக்கவில்லை. சுயநலத்தை விட்டு பிறர் நலம் காப்பவர்களுக்கே இறைவனின் அருள் கிடைக்கும், என்றார். |
|
|
|