|
தன் வாழ்வையே கண்ணனுக்கு அர்ப்பணித்தவள் மீரா. அவளது
அழகில் மோகம் கொண்ட கயவன் ஒருவன் பக்தனைப் போல அவளுடன் பழகி வந்தான். அவள்
செல்லும் இடம் எல்லாம்பின் தொடர்ந்தான். மீராவைப் பார்த்து விட்டால்
கிருஷ்ணா! கிருஷ்ணா!என்று ஜெபிக்கத் தொடங்கினான். கள்ளம் இல்லாத மீராவும்,
அவனுடன் பழகி வந்தாள். ஒருநாள் அவள் தனித்திருந்த வேளையில், மீரா! உன் மீது
எனக்கு கொள்ளை ஆசை. நீயும் என்னை இப்போதே ஏற்றுக் கொள்வாயா?என்று சொல்லி
அவளை நெருங்க முயன்றான்.அதே நேரம் கோபத்தில் மீரா கூச்சல் போட்டு விடுவாளோ
என்ற பயம் ஒருபுறம், எண்ணத்தைச் சொல்லி விட்டோமே என்ற சந்தோஷம் மறுபுறம்
அவனுக்குள் உண்டானது. ஆனால், மீராவோ, பூ.... இவ்வளவு தானா! இதற்காகவா
இத்தனை நாள் என்னைச் சுற்றி சுற்றி வந்தீர்கள்? முன்பே சொல்லி இருக்கக்
கூடாதா?இப்போதும் ஒன்றும் கெட்டுப் போகவில்லை. நாளை மாலை வாருங்கள், என்று
சொல்லி அனுப்பி வைத்தாள்.மீரா இவ்வளவு சீக்கிரம் தனக்கு கிடைப்பாள் என்று
அவன் நினைக்கவே இல்லை. இரவெல்லாம் துõக்கம் வராமல் படுக்கையில் கிடந்தான்.
மறுநாள் புதிய பட்டாடைகளைப் புனைந்து கொண்டு மீராவைக் காணப் புறப்பட்டான்.
அப்போது மீரா நாலைந்து பெண்களுடன் கிருஷ்ண பஜனையில் ஈடுபட்டிருந்தாள்.
அவனைக் கண்டும் காணாதது போல கண்களை மூடிக் கொண்டாள். பொறுமை இழந்த
அவன்,நேற்று என்னை வரச் சொல்லி விட்டு, இப்படி பாடிக் கொண்டிருந்தால்
எப்படி? என்றான்.மீராவோ, அவன் பேச்சைக் காதில் வாங்கிக் கொள்ளவே இல்லை.
தாடர்ந்து பாடிக் கொண்டிருந்தாள். ஏதும்புரியாத மற்ற பெண்கள், அவன் அங்கு
வந்தது பற்றி மீராவிடம் கேட்டனர்.
மீரா அவர்களிடம் நடந்ததை
மறைக்காமல் அப்படியே சொல்லி விட்டு, அன்பரே! நானும் தயாராக இருக்கிறேன்.
நீங்களும் தயார் தானே! என்று கேட்டு அவனைப் பார்த்தாள். இப்படி மற்றவர்கள்
முன்னால் இந்த விஷயத்தைப் பேசுமளவு நாணம் இல்லாதவளாக இருக்கிறாளே! மற்றவர்
என்ன நினைப்பார்கள் என்று கூட எண்ணாத இவளும் ஒரு பெண் தானா? என்று
திகைத்தான் அவன்.அதற்கு மீரா, இத்தனை பேருக்கு மத்தியில் பேசுவதற்கே
கூசுகிறீர்களே! நான் சொன்னால் இவர்கள் சென்று விடுவார்கள். ஆனால்,
உங்களுக்குள்ளும் எனக்குள்ளும் அந்தர்யாமியாக (மறைந்து) இருக்கிறானே கிரிதர
கோபாலன், அவனை எங்கே போகச் சொல்வது? அவன் பார்வையில் இருந்து நாம் யாரும்
தப்ப முடியாது, என்றாள்.இதைக் கேட்ட அவன் கூனிக் குறுகி விட்டான். தான்
செய்த தவறை எண்ணி வருந்தி, மீராவின் கால்களில் விழுந்து அழுதான்.அம்மா!
தாயே! பரிசுத்தமான உன் முன்னால் நான் பெரும் பாவியாகி விட்டேன். என்னை
மன்னிக்க வேண்டும் என்றான். மீராவோ, கிருஷ்ண நாமத்தை பக்தியுடன் யார்
ஜெபித்தாலும், தீயிலிட்டதுõசு போல பாவம் பறந்தோடி விடும் என்று சொல்லி
விட்டு, பஜனையைத் தொடந்தாள். |
|
|
|