|
அன்றாடம் ஆயிரக்கணக்கானோர் வந்து தரிசிக்கும் காசி விஸ்வநாதர் கோயிலில், அன்று திடீரென்று ஒரு தங்கத் தாம்பாளம் காணப்பட்டது. அதில்.... என்னிடம் யார் மிகவும் பிரியமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு காசி விஸ்வநாதரான என்னுடைய பரிசு இது. பிரியமான அந்த மனிதரிடம், இந்தத் தங்கத் தாம்பாளம் தானாகவே போய்ச் சேரும் என எழுதப்பட்டிருந்தது. தகவல் அறிந்து அவரவர்களும் காசி விஸ்வநாதர் கோயிலுக்கு வந்து கைகளை நீட்டியபடி@ய தாம்பாளத்தைச் சுற்றி சுற்றி வந்தார்கள். ஊஹும்! அசையவில்லை தாம்பாளம். ஹும்! இதற்கு உரியவன் யாரோ? அவன் எங்கு இருக்கிறானோ? என்று புலம்பிப் பெருமூச்சு விட்டபடியே வந்தவரெல்லாம் திரும்பினார்கள். சிவராத்திரி நாள்..... வழக்கத்தை விட அதிகமாகவே காசி விஸ்வநாதர் சந்நிதியில் கும்பல் இருந்தது. கல்விமான்கள், ஞானவான்கள், பணக்காரர்கள் என ஏராளமானோர் வந்திருந்தார்கள். அநேகர் பார்வை தங்கத் தாம்பாளத்தில் இருந்தது. ஆனால், அது நகரவே இல்லை. அந்த சமயத்தில்.... விவசாயி ஒருவர், இன்னிக்கி சிவராத்திரி. கங்கையில போயி ஒரு முழுக்குப் போட்டுட்டு அப்படியே விஸ்வநாதர் தலையில ரெண்டு வில்வத்தையும் போட்டுட்டு வரலாம், என்று காசிக்கு வந்தார். வந்தவர் கங்கையில் நீராடிவிட்டு கோயிலுக்குள் நுழையும் வேளையில்..... கோயிலுக்கு வெளியில் குஷ்டரோகி ஒருவர் படுத்திருந்தார். கண்ணீர் சிந்தியவராக வேதனையுடன் இருந்த அவரைக் கண்ட அனைவரும் முகம் சுளித்தபடி சென்று கொண்டிருந்தனர். விவசாயி அவர் அருகே சென்று,ஐயா! அழாதீர்கள்! உங்களைப் பிடித்திருக்கும் இந்த துயரம், சீக்கிரம் நீங்கிப் போய் விடும். சுவாமி தரிசனம் செய்து விட்டு உங்களை என் வீட்டுக்கு அழைத்துப் போகிறேன், என்று சொல்லி விட்டு கோயிலுக்குள் நுழைந்தார். அவர் உள்ளே போனதும் விலை மதிக்க முடியாத அந்த தங்க தாம்பாளம் அவர் கைக்கு வந்து சேர்ந்தது. கூடவே, இவன் தான் மனிதன் என்று அசரீரி ஒலித்தது. தங்க மனசு படைத்த அந்த விவசாயியை போல நம்மால் நடக்க இயலாவிட்டாலும், பெற்று ஆளாக்கிய பெற்றோர் மீது அன்பு காட்டுவோம். சக மனிதர்களை மதித்து நடப்போம். அப்போது தெய்வம் நம்மைத் தங்க தாம்பாளத்தில் வைத்து தாங்கும்.
|
|
|
|