|
காளியின் அருளால் மகாகவியாக விளங்கியவர் காளிதாசர். அவர் போஜராஜனின் அவைப் புலவராக இருந்த போது, தண்டி, பவபூதி என்ற புகழ் மிக்க புலவர்களும் இருந்தனர். வடமொழியில் மூவருமே கைதேர்ந்தவர்கள். ஒரு சமயம், மூவரில் யார் உயர்ந்தவர் என்ற வாக்குவாதம் எழுந்தது. போஜராஜன் காளியிடம் சென்று முறையிட முடிவெடுத்தான். போஜராஜன் தலைமையில் மூவரும் காளிசந்நிதிக்கு வந்தனர். மன்னர் காளிதேவியிடம் மூவரில் சிறந்தவர் யார் என்று பதில் அளிக்கும்படி வேண்டினார். போஜனே! தண்டியிடம் கவிதை ரசனை மிக்கது! பவபூதியின் பாடலோ அறிவுப்பூர்வமானது என்று அசரீரியாக குரல் கொடுத்தாள். காளிதாசனைப் பற்றி அவள் ஒன்றும் சொல்லவில்லை. உடனே காளிதாசன் கோபத்துடன் அப்படியானால் நான் திறமையற்றவனா? பதில் சொல்லடி? என்று ஒருமையில் தேவியைத் திட்டி விட்டார். மகனே காளிதாசா! உன்னைப் பற்றியும் சொல்லி விடுகிறேன் தெரிந்து கொள்! த்வமேவாஹம் த்வமேவாஹம் த்வமேவாஹம் ந ஸம்சய என்றாள் அசரீரியாக. இதைக் கேட்டு காளிதாசர் அழுதுவிட்டார். ஏன் தெரியுமா? நீ தானே நான், நீ தானே நான், நீ தானே நான் சந்தேகமில்லாமல் என்பது பொருள். நீயும், நானும் ஒன்றான பிறகு உனக்கு மிஞ்சிய புலவர் ஒருவர் இனியேது என்பதே அதன் உள்ளர்த்தம்.
|
|
|
|