|
கல்வியே மனிதனுக்கு ஒளி தருவது. நாம் கல்விக்காக சரஸ்வதியை வணங்குவது போல, வடமாநிலங்களில் காளியை வணங்குவார்கள்.உஜ்ஜைனி நகரில் வசதியான குடும்பத்தில் பிறந்த ஒருவன், படிப்பறிவற்ற காரணத்தால் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டான். அவ்வூரில் இருந்த ஆசிரியர் ஒருவரிடம், அந்த நாட்டு இளவரசி கல்வி கற்று வந்தாள். இளவரசி என்ற இறுமாப்பினால், அவள் ஆசிரியரை மதிக்கவில்லை. ஆத்திரமடைந்த ஆசிரியர், அவளுக்கு தக்க பாடம் கற்பிக்க முடிவெடுத்தார். தந்திரமாக ஆடு மேய்க்கும் இளைஞனுக்கு இளவரசியை மணம் முடிக்க ஏற்பாடு செய்து விட்டார்.திருமணத்திற்குப் பின், இளவரசிக்கு உண்மை தெரிந்து விட்டது. ஆனாலும், அவள் கலங்கவில்லை. அவள் ஆணவம் மிக்கவள் தான்! என்றாலும், அவளுக்கு காளி மீது அபார பக்தி இருந்தது. தன் கணவன் சிறந்த அறிவாளியாக விளங்க வேண்டும் என வேண்டி விரதமிருந்தாள். காளியின் மூல மந்திரத்தை ஜெபித்து வரும்படி கணவனிடம் கூறினாள். அவனும் மந்திரத்தை தொடர்ந்து ஜெபித்து வந்தான். அவனது ஆழமான பக்தி கண்ட காளி உள்ளம் மகிழ்ந்தாள். நேரில் அவனுக்கு காட்சியளித்ததோடு, தன் திரிசூலத்தால் அவனுடைய நாவில் எழுதி அருள்புரிந்தாள். ஏதும் அறியாத அந்த ஆடு மேய்ப்பவன் எல்லாம் அறிந்தவனாகி, உலகம் போற்றும் மகாகவி காளிதாசராக மாறினார். போஜராஜனின் அரசவையில் தலைசிறந்த புலவராக விளங்கினார். தீபங்கள் ஏற்றும் கார்த்திகை நன்னாளில், அம்பாளையும் வணங்கி கல்வியென்னும் ஒளிவிளக்கைப் பெறுவோம். |
|
|
|