|
கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திர நாளில் சோழநாட்டில் திருவாலி திருநகரி அருகிலுள்ள திருக்குறையலுõரில் அவதரித்தவர் திருமங்கையாழ்வார். திருமாலின் சார்ங்கம் என்னும் வில்லின் அம்சமாகப் பிறந்தவர் இவர். கரிய நிறம் கொண்டவராக இருந்ததால் நீலன் என பெற்றோர் பெயரிட்டனர். போரிடுவதில் எதிரிக்கு எமனாக இருந்ததால் பரகாலன் எனப் போற்றப்பட்டார். திருமங்கை நாட்டிற்கு மன்னராக இருந்ததால் திருமங்கைமன்னன் என்று பெயர் பெற்றார்.திருவெள்ளக்குளத்தில் பிறந்த குமுதவல்லியை மணந்தார். திருநறையூர் நம்பியிடம் தீட்சை பெற்றார். மனைவியின் விருப்பத்திற்காக ஓராண்டு காலம் தினமும் 1008 அடியார்களுக்கு உணவிட்டார். தன் செல்வம் முழுவதையும் இழந்த பின், வழிப்பறியில் ஈடுபட்டு தொண்டு செய்தார். திருமாலே நேரில் வந்து எட்டெழுத்து மந்திரத்தை உபதேசித்து அருள்புரிந்தார். ஆசுகவி, மதுரகவி, சித்ரகவி, விஸ்தாரகவி என்னும் நான்கு கவியும் பாடுவதில் வல்லவர் என்பதால் நாலுகவிப்பெருமாள் எனப்பட்டார். சம்பந்தருடன் வாதம் செய்து அவரிடம் வேலினை பரிசாகப் பெற்றதால் கொற்றவேல் பரகாலன் என்று பெயர் பெற்றார்.
ஸ்ரீரங்கம் கோயிலில் பல திருப்பணிகளைச் செய்தார். 108ல் 87 திவ்யதேசங்கள் பற்றி பாசுரம் பாடியுள்ளார். இவர் ஆராதனை செய்த நரசிம்மர் திருவாலி திருநகரியில் இப்போதும் உள்ளார். ஆண்டுதோறும் நம்மாழ்வார் விக்ரஹத்தை ஆழ்வார்திருநகரியில் இருந்து ஸ்ரீரங்கத்திற்கு கொண்டு வந்து மார்கழி அத்யயன உற்ஸவம் நடத்தினார். திருக்குறுங்குடியில் இறுதிக் காலத்தைக் கழித்து திருநாட்டுக்கு எழுந்தருளினார்.திருப்பாணாழ்வார்: கார்த்திகை மாதம் ரோகிணி நட்சத்திரநாளில் ஸ்ரீரங்கம் அருகிலுள்ள உறையூரில் பிறந்தவர் திருப்பாணாழ்வார். திருமாலின் மார்பிலுள்ள ஸ்ரீவத்சம் என்னும் மருவின் அம்சமாகப் பிறந்தவர் இவர். யாழ் வாசிக்கும் பாணர் குலத்தில் பிறந்ததால், பாணாழ்வார் என்றே பெயர் பெற்றார். காவிரியாற்றின் தென்கரையில் இருந்தபடி ரங்கநாதரை வழிபட்டு வந்தார்.
ஒருநாள் லோக சாரங்கர் என்னும் முனிவர் காவிரியில் நீராடி வழிபாட்டுக்கு காவிரி நீரை எடுக்க பொற்குடத்துடன் வந்தார். பக்தியில் தன்னை மறந்து நின்ற ஆழ்வார் முனிவரைக் கவனிக்கவில்லை. இதனால் கோபம் கொண்ட முனிவர் ஒரு கல்லை எடுத்து ஆழ்வார் மீது வீசினார். அது நெற்றியில் பட்டதும் ரத்தம் கொப்பளித்தது. பிராட்டியார் பெருமாளிடம், பல காலமாக பாடி வழிபடும் இந்த பாணரை கோயிலுக்கு உள்ளே வராமல் நிற்க வைப்பது சரிதானா? என்று கேட்டாள். அன்றிரவே லோகசாரங்கரின் கனவில் தோன்றிய பெருமாள், என் பக்தனாகிய பாணரை உம் தோள் மீது எழுந்தருளச் செய்து எம் திருமுன்னர் கொண்டு வருவாயாக என்று கட்டளையிட்டார். முனிவரும் பாணரிடம் சென்று வணங்கி, உம்மை கோயிலுக்கு அழைத்து வரும் படி நம்பெருமாள் அடியேனுக்கு கட்டளைஇட்டிருக்கிறார், என்று கூறினார். தயங்கியபடி பாணரும் முனிவரின் தோளில் ஏறிக் கொண்டார். ரங்கநாதரின் சந்நிதியை நேரில் தரிசித்த பாணர் அமலனாதிபிரான் என்னும் பத்து பாசுரங்களைப் பாடி நம்பெருமாளின் திருவடியில் இரண்டறக் கலந்தார். |
|
|
|