|
பதில் சொல்ல முடியாத கேள்விகள் பல உண்டு. அவற்றில் இதுவும் ஒன்று.தந்தையின் மனைவியைத் தாயார் என்று அழைக்கலாம். தாயின் மனைவியை என்ன பெயர் சொல்லி அழைப்பது?1554ம் ஆண்டு சிவ அவதாரமாகவே போற்றப்பட்ட ஸ்ரீ அப்பைய தீட்சிதருடன், சோழ தேசத்து மன்னர் நரசிம்மபூபாலன், ஒரு சாஸ்தா கோயிலுக்குப் போனார். அவர்களுடன் கல்வியில் சிறந்த பண்டிதர் ஒருவரும் உடன் சென்றார். அனைவரும் கோயிலை அடைந்தார்கள். அங்கே சாஸ்தா விக்ரஹம் ஒன்று மூக்கில் விரலை வைத்தபடி இருந்தது. அதைப் பார்த்த அரசர் ஆச்சரியப்பட்டார். அங்கிருந்தவர்களை அழைத்து, ஏன் இப்படி? என்று கேட்டார். அதற்கு, ஞானி ஒருவர் வருவார். அதற்கான காரணத்தை அவர் சொல்லக் கேட்டவுடன் இந்த விக்ரஹம் தன் மூக்கில் இருக்கும் விரலை எடுத்து விடும் என்று பதில் சொன்னார்கள்.அதைக் கேட்ட அரசர் மேலும் ஆச்சரியப் பட்டார். தன்னுடன் வந்த பண்டிதரிடம்,இதற்கான காரணத்தை வைத்து ஒரு கவி பாடுங்கள் என்றார்.
பண்டிதர் கர்வத்துடன்,விஷ்ணுவின் பிள்ளை நான். ஏற்கனவே, விஷ்ணுவின் பிள்ளையாக இருக்கும் பிரம்ம தேவருக்குச் சமமான என்னைத் தேவர்கள் எல்லாம் பூஜை செய்வார்கள். என்ன தான் இருந்தாலும், பூத கணங்களுக்குத் தலைவனான சிவனுக்கும் நான் பிள்ளையாக இருக்கிறேன் அல்லவா? அதனால் தான் என்னைச் சுற்றிப் பூதகணங்கள் இருக்க, என்னைப் பூதநாதா என்கிறார்களோ என்னவோ? என்னும் கருத்து அமைந்த பாடலைப் பாடினார்.ஊஹூம்! விக்ரஹம் அப்படியே தான் இருந்தது. அதன் விரல் அசையவே இல்லை. அடுத்து.....அரசர் தீட்சிதரின் பக்கம் பார்வையைத் திருப்பினார்.சுவாமி! நீங்கள் பாடுங்கள் என்று வேண்டினார்.தீட்சிதர் பாடத் தொடங்கினார்.கவுரியை (பார்வதி)நான் அம்மா என்று கூப்பிடுவேன். அப்பாவின் மனைவிகள் அனைவரும் எனக்கு அம்மா அல்லவா? அதனால் கவுரியை நான் அம்மா என அழைக்கலாம். ஆனால், லட்சுமி தேவியை நான் என்ன பெயர் சொல்லி அழைப்பேன்? விஷ்ணு மோகினியாக வந்தபோது அவருக்கும் சிவனுக்கும் மகனாக நான் பிறந்தேன். அதனால், மோகினியாக வந்த விஷ்ணுவை அம்மா என அழைக்கலாம். ஆனால்...விஷ்ணுவின் மனைவி லட்சுமியைஎன்ன சொல்லி அழைப்பேன்? என்ற கருத்தில் பாடல் பாடினார். இதைக் கேட்டு சாஸ்தா மூக்கில் இருந்த விரல் அகன்றது.அதைக் கண்ட அனைவரும்ஆச்சரியப்பட்டனர். கர்வம் கொண்ட பண்டிதரின் தலை தரையைப் பார்த்தது.அப்பைய தீட்சிதர் கண்ணீர் மல்க சாஸ்தாவை வணங்கினார். |
|
|
|