|
ஒரு கிராமத்தில், ஆஞ்சநேயரின் பரம பக்தனான விவசாயி ஒருவன் இருந்தான். உழுவது முதல் விதைப்பது, அறுவடை செய்வது வரை எந்த வேலையைச் செய்தாலும் அதைத் தொடங்குவதற்கு முன் அனுமனை நினைத்துவிட்டே ஆரம்பிப்பான். தனக்கு மாருதியின் அருள் பரிபூரணமாக இருப்பதால்தான் எல்லாம் நல்லவிதமாக முடிகிறது என்று அவன் நம்பினான். வாழ்க்கை சீராகச் சென்று கொண்டு இருந்தது. ஒருநாள் அதிகாலையில், வண்டியில் விளைபொருட்களை ஏற்றிக் கொண்டு பக்கத்து ஊருக்குச் சென்று கொண்டிருந்தபோது அவன் மனதில் ஒரு சந்தேகம் எழுந்தது. உண்மையிலேயே நமக்கு அனுமன்தான் அருள்கிறாரா? அல்லது, தனது உழைப்புக்குத்தான் பலன் கிடைக்கிறதா? இந்த சந்தேகத்தோடே வண்டியை ஓட்டியவன் வழியில் இருந்த பள்ளத்தை கவனிக்கத் தவறியதால், வண்டிச்சக்கரம் அதில் சிக்கிக் கொண்டது. விவசாயிக்கு ஒரு யோசனை தோன்றியது. நிஜமாகவே ஆஞ்சநேயர்தான் தனக்கு உதவுகிறார் என்றால், இப்போது அவரே வந்து பள்ளத்தில் இருந்து வண்டியை நகர்த்தித் தரட்டும். அப்போது தெரிந்துவிடும்! என்று பேசாமல் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டான்.
நேரம் அதிகரிக்க அதிரிக்க, அவனது பொறுமை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து, காலை, மதியம் எல்லாம் நகர்ந்து, மாலை தொடங்கி இரவை சந்திக்க விரைந்தது. இனி அனுமனை நம்பி பயனில்லை. நடப்பதெல்லாம் தன்னுடைய உழைப்புக்குப் பலன்தான் என்று நினைத்தவன், வண்டியை வெளியே எடுக்கும் முயற்சியைத் தொடங்கினான். அவன் மிகவும் சிரமப்பட்டபோது, அந்த வழியாக வந்த ஒரு பெரியவர், அவனுக்கு உதவினார். வண்டி எளிதாக வெளியே வந்தது. ஐயா, நான் தெய்வத்தை நம்பினேன். அது எனக்கு உதவவில்லை. முன்பின் தெரியாத நீங்கள் உதவினீர்கள்... நன்றி! என்று சொல்லிவிட்டு நகர முயன்ற அவனை, கொஞ்சம் நில்! என்றார் முதியவர். அப்பனே, கொஞ்சமும் முயற்சிக்காமல் நீ இருந்தால் தெய்வம் ஒருபோதும் உதவாது. உன் உழைப்புக்கு உரிய பலனை முழுமையாக கிடைக்கச் செய்வதுதான் தெய்வம் உனக்குச் செய்யும் அனுகிரகம். உன் முயற்சியை எப்போது நீ தொடங்கினாயோ, அப்போதே உனக்கு உதவ நான் வந்துவிட்டேன், புரிகிறதா? சொன்ன பெரியவர், சட்டென்று மறைந்து போனார். வந்தவர், வாயுமகனே என்பதை உணர்ந்து வணங்கிவிட்டு பயணத்தைத் தொடர்ந்தான் விவசாயி. உங்கள் முயற்சி முழுமையாக இருந்தால், அதன் பலன் முழுமையாகக் கிடைக்க தெய்வம் உங்களுக்குத் துணை நிற்கும். |
|
|
|