|
இன்றைக்கு நாம் ஒரு உயில் எழுதும்போது, யாராவது இந்த உயிலுக்கு பவர்’ என்று குறிப்பிடுகிறோம் அல்லவா? அதுபோல் அந்த நாட்களில் ஏதேனும் ஒரு நிவந்தத்தையோ (கோவிலுக்குரிய உபயம்), மானியத்தையோ எழுதும்போது, சூரிய சந்திரர்கள் உள்ள வரை இது செல்லும்’ என்று குறிப்பிடுவார்கள். இந்த உலகில் எது அழிந்தாலும், சூரிய சந்திரர்கள் மட்டும் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களுக்கு அழிவே கிடையாது. ஆதிசங்கரர் நமக்கு அளித்த ஆறு விதமான வழிபாடுகளில் சூரியனைப் பிரதானப்படுத்தும் சவுரம்’ என்னும் வழிபாடும் ஒன்று. சூரியவழிபாடு பண்டைய நாட்களில் இருந்தே தொடர்ந்து வருகிறது. பண்டைய நுõலான சிலப்பதிகாரம், ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும்’ என்று சூரியனைப் போற்றுகிறது. உலகில் இருக்கின்ற அனைத்து உயிர்களுக்கும் ஆதாரம் சூரியன். விவசாயத்துக்கு மிகப் பெரிய நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் சூரிய பகவானுக்கு நாமெல்லாம் நன்றி கூறும் திருவிழாவாகத்தான் தை ஒன்றாம் தேதி மகர சங்கராந்தி’யைக் கொண்டாடி வருகிறோம். உத்தராயணத்தின் முதல் தினத்தை, அதாவது தை முதல் தேதியை மகர சங்கராந்தி’ என்று பிற மாநிலங்களிலும், தைப்பொங்கல்’ என்று தமிழ்நாட்டிலும் கொண்டாடி வருகிறோம். மகர சங்கராந்தி’ திருவிழா இந்தியா மட்டுமல்லாமல், இலங்கை, இந்தோனேஷியா, தாய்லாந்து, நேபாளம், மியான்மர் (பர்மா) போன்ற பல ஆசிய நாடுகளிலும் வெகு சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது.
நவக்கிரகங்களில் முதன்மையானவர் சூரிய பகவான். ராஜ கிரகம்’ என்று சொல்வார்கள் ஜோதிடர்கள். ஆதித்யன், ரவி, பாஸ்கரன், பிரபாகரன், அர்க்கன், கதிரவன், கமல நாயகன், கனலி, ஞாயிறு, தினகரன், பகலவன், பரிதி, பானு, மார்த்தாண்டன், வெய்யோன் என்று சூரியனுக்கு எண்ணற்ற திருநாமங்கள் உண்டு. சூரிய பகவான் கம்பீரமாக அமர்ந்து வரும் தேருக்கு ஒரே ஒரு சக்கரம். அந்தத் தேரை ஏழு குதிரைகள் இழுக்கின்றன. ஏழு குதிரைகளும் வெவ்வேறு நிறம் கொண்டவை. இந்தத் தேரை ஓட்டுகிற சாரதியின் பெயர் அருணன்! இந்த சாரதிக்குப் பெருமை சேர்க்கும் விதத்தில் சூரிய உதயத்தை அருணோதயம்’ என்றும் சொல்வதுண்டு. சூரிய நமஸ்காரம் உடலுக்கும் உள்ளத்துக்கும் பலம் சேர்க்கக் கூடிய ஒரு வழிபாடு. இதன் பலன் வேதத்திலும், உபநிஷத்திலும் சொல்லப்பட்டிருக்கிறது. நோய் நொடி நம்மைத் தாக்காமல் இருக்க சூரிய வழிபாடு பயன்படுகிறது. தினமும் காலை வெறும் கண்களால், சூரியனைத் தரிசிப்பதன் மூலம், நம் கண்களுக்கும், தேகத்துக்கும் ஆரோக்கியம் கிடைக்கிறது. சூரிய நமஸ்காரத்தின் மூலம் நம் உடலில் ஏற்படும் நோய்கள் மட்டுமன்றி, மனநோயும் அகலும். தவிர எதிரிகள் அழிவார்கள். வெற்றி நம் வசமாகும்’ என்கிறது ஆதித்ய ஹ்ருதயம்.
அகத்தியரால் ராமபிரானுக்கு உபதேசிக்கப்பட்ட ஆதித்ய ஹ்ருதயம். இருபது தோள்கள் வலிமை கொண்ட ராவணனை எப்படி அழித்தொழிப்பது என்று யுத்த களத்திலே யோசித்துக் கொண்டிருக்கிறார் ராமபிரான். புராண முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் போரை எண்ணற்ற தேவர்கள், கந்தர்வர்கள், ரிஷிகள் ஆகியோரோடு உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார் அகத்தியர். ராமனின் வெற்றிக்கு வித்திட வேண்டியும், ராவணன் அழிய வேண்டியும் ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகத்தை ராமனுக்கு உபதேசித்து, அதன் பெருமைகளைக் கூற ஆரம்பிக்கிறார். ராமா... என்றைக்கும் அழியாத ஒரு ரகசியத்தை உனக்கு சொல்கின்றேன். தற்போது நான் சொல்லப்போகிற ஆதித்ய ஹ்ருதயம் என்கிற ஸ்லோகம் நிரந்தரமான, பாதுகாப்பான, புனிதமான, சகல பாவங்களையும் அழிக்க வல்லது. எதிரிகளையும் நிர்மூலமாக்க வல்லது. மனக்குழப்பம், மனக்கலக்கம், துன்பம் ஆகிய அனைத்தையும் வேரோடு அழிக்க வல்லது. தவிர, பூரண ஆயுள் வழங்க வல்லது. தேவர்களாலும், அசுரர்களாலும் வணங்கப்படுபவனும் இந்த உலகுக்கே பூரண ஒளியைத் தருபவனுமாகிய உன் குலதெய்வமான சூரியனைப் பற்றிய ஸ்லோகம் இது. இஷ்வாகு குலத்தில் அவதரித்தவன் அல்லவா நீ? சூரியன்தான் பிரம்மன். சிவபெருமான். விஷ்ணு (உதய நேரத்தில் பிரம்ம ரூபத்திலும், உச்சிப்பொழுதில் சிவ ரூபத்திலும், அஸ்தமன வேளையில் விஷ்ணு ரூபத்திலும் சூரியன் நம்மைக் காத்து வருவதாக ஐதீகம். உலக ஜீவராசிகள் மட்டுமல்ல... வானுலக தேவர்களையும் காப்பாற்றி வருபவர் சூரிய பகவானே. வருணனும் இவரே. வாயுவும் இவரே.
இந்திரனும் இவரே. எமதர்மனும் இவரே. ப்ரஜாபதி, குபேரன், சோமன், அஷ்டவசுக்கள், அக்னி என எல்லாமுமாக இருப்பவரும் சூரியன்தான். பித்ருக்களும் அவரே. பருவ நிலைகளின் மாற்றத்துக்குக் காரணமானவரும் அவரே. இந்த உலகையே வாழ வைத்துக் கொண்டிருக்கும் ஒளியின் உறைவிடம் அவரே. இந்த உலகின் மூச்சுக் காற்றும் அவரே...’’ என்றெல்லாம் ஆரம்பித்து சூரிய பகவானின் பெருமைகளையும் சிறப்புகளையும் போற்றும் ஸ்லோகங்களை ராமபிரானுக்கு உபதேசித்தார் அகத்தியர். இந்த ஸ்லோகங்கள் அனைத்தையும் செவி மடுத்துக் கேட்டார் ராமபிரான். உபதேசம் பூர்த்தி ஆன பின் ராமபிரானைப் பார்த்து அகத்தியர் சொன்னார்: ஆதித்ய ஹ்ருதயம் ஸ்லோகங்களை ஜபிக்கிற ஒருவனுக்கு துன்பம் வருவதில்லை. சோதனையான காலகட்டங்களில் பயம் ஏற்படுவதில்லை. கஷ்டப்படுகிற நேரம் அவனுக்கு வருவதே இல்லை. சூரிய பகவானை ஒருமித்த சிந்தனையுடன் போற்றி வழிபடுபவன் யுத்த களத்தில் வெற்றியை மட்டுமே காண்பான். உனக்கும் போரில் வெற்றி ஏற்பட, சூரிய பகவானை நீயும் வணங்கு,’’ என்றார். இதன் பின் ராமபிரான் நித்தமும் ஆதித்ய ஹ்ருதயம் ஜபித்து, போர்க்களத்தில் ராவணனை வென்றதாக ராமாயணம் சொல்லும். மந்திரங்களில் சிறப்பானது காயத்ரி மந்திரமாகும். இது சூரிய பகவானைப் போற்றுகிற மந்திரம். தியானத்தின் மூலம் பலரும் வழிபடும் சூரிய பகவானுடைய பிரகாசமான ஒளி, எங்கள் உள்ளத்துள் புகுந்து நற்சிந்தனைகளையும் நல்லெண்ணங்களையும் துõண்டி விடுவதாக அமையட்டும்’ என்பதே அந்த மந்திரத்தின் சாராம்சம். ஆலயங்கள் சென்று தெய்வங்களை வணங்க இயலாத கிராமத்தவர்கள், சூரிய பகவானை வழிபட்டாலே போதும்... எல்லா பலன்களும் கிடைத்து விடும்’ என்று அருளி இருக்கிறார் நடமாடும் தெய்வமான காஞ்சி மகா பெரியவர்.
|
|
|
|