|
பகவான் கிருஷ்ணர், தன்னை உபமானமாகக் கொண்டு, வாழ்வின் இருமை அனுபவங்களாகிய இன்பத்தையும் துன்பத்தையும் ஸமமாகக் காணும் யோகியானவர் மேன்மை பொருந்தியவர் என்று கூறியருளினார். தொடர்ந்து, அர்ஜுனன் பகவானிடம் கீழ்க்காணும் கேள்வியைக் கேட்கிறான்.
அர்ஜுந உவாச
யோயம் யோகஸ்த்வயா ப்ரோக்த: ஸாம்யேந மதுஸுதந ஏதஸ்யாஹம் ந பஸ்யாமி சஞ்சலத்வாத்ஸ்திதிம் ஸ்திராம் (ஸ்ரீமத் பகவத்கீதை 6-33)
மதுஸூதனரே! மனதின் அலைபாயும் தன்மை காரணமாக, தங்களால் உபதேசிக்கப்பட்ட, எங்கும் ஸமமான மெய்ப்பொருளைக் காணும் யோகத்தை என்னால் உணர முடியவில்லை. இனி, தியானத்துக்கு ஏற்படக்கூடிய தடைகளைப் பற்றிப் பேசப்படுகிறது. பொதுவாக, சாஸ்த்ரங்களில் தியானத்துக்கு நான்கு விதமான தடைகள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. லயம், விக்ஷேபம், கஷாயம், ரஸாஸ்வாதம் ஆகியவை அவை. லயம் என்றால் மனம் ஒடுங்கி, உறக்கத்தில் ஆழ்ந்து விடுதல். தியானம் செய்வதற்கு அமர்ந்து, பல நேரங்களில் அது உறக்கத்தில் முடிவது பெரும்பாலும் பலருக்கும் நிகழக்கூடிய ஒன்று. விக்ஷேபம் என்பது மனம், நாலாப்பக்கமும் சுற்றி அலைதல். தியானத்தில் அமர்ந்து எதைப் பற்றி எண்ண வேண்டும் என்று விழைகிறோமோ, அதைத் தவிர, பிற விஷயங்களில் மனம் அலைபாய்ந்து கொண்டிருத்தல்.
மூன்றாவது தடை, கஷாயம். இதில் மனம் உறங்குவதுமில்லை, அலைபாய்வதுமில்லை, செய்வதறியாது திகைப்பில் ஆழ்ந்து ஸ்தம்பித்து விடுகின்ற நிலைக்கு, கஷாயம் என்று பெயர். அதாவது, மிக உச்சக்கட்ட மகிழ்ச்சி அல்லது துயரத்தில், அப்படியே உறைந்து விடுதல். எதிர்பாராத விபத்து ஒன்று நடக்கும்போது, உடனடியாக வலி கூட உணரப்படுவதில்லை. தற்காலிகமாக மூளை தனது செயல்பாட்டை நிறுத்தி விடுகிறது. நெருங்கிய உறவினர் இறக்கும்போது, அழக்கூட முடியாத நிலை சிலருக்கு ஏற்படும். அவர்கள் அழாமல் இருப்பதற்குக் காரணம் ஞானமல்ல. மனம் திகைப்பிலிருந்து விடுபடாமல் இருப்பதே ஆகும். அவ்வாறு, உணர்ச்சிகளை வெளிப்படுத்தாமல் இருப்பது மனதுக்குத் தீங்கு விளைவிக்கும் என்று கூறுவதுண்டு.
மிக அதிகமான மகிழ்ச்சியிலும் கூட அவ்வாறு மனம் செயலிழந்து விடுவதுண்டு. இது உறக்கமுமல்ல, அலைபாய்தலும் அல்ல. மனம் தியானத்துக்குத் தயாராக இல்லாமல், ஸ்தம்பித்திருத்தல். இது தியானத்துக்கு ஒரு தடை. தியானத்துக்கு மற்றொரு தடை ரஸாஸ்வாதம். தியானம் செய்ய அமர்ந்து பழகி விட்டால், மனம் அமைதியை உணரும். அதில் ஓர் இன்பம் ஏற்படும். மன அமைதியால் ஏற்படும் அத்தகைய இன்பமும் தியானத்துக்கு ஒரு தடையே ஆகும். தியானம் செய்கின்ற நேரத்தில் மட்டும் மனம் அமைதியில் ஆழ்வதும், உலக செயல்பாடுகளில் ஈடுபடும்போது எரிச்சல் அடைவதும் ஜீவன்முக்தரின் இலக்கணமல்ல. செயல்புரிவதற்கிடையில், நான் செயல்புரியாதவன் என்ற ஞானத்தில் நிலைத்திருப்பவரே ஜீவன் முக்தர். எனவே, தியான இன்பத்துக்கு அடிமையாவதும் கூட ஒரு தடையாகவே கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு வகைத் தடையையும் வெல்ல உதவும் வழிமுறைகளும் சாஸ்த்ரங்களில் உபதேசிக்கப்பட்டிருக்கின்றன. தியானத்தில் உறக்கமாகிய லயத்தைத் தவிர்க்க, அதில் உணவைத் தவிர்க்க வேண்டும். மந்தத் தன்மையிலிருந்து விடுபட முயல வேண்டும். பிறகு, உடலுக்குத் தேவையான உறக்கத்தைத் தந்துவிட வேண்டும். அதற்குத் தேவையான உறக்கத்தைத் தரவில்லையென்றால், தியானத்தில் மனம் உறங்கிவிடக்கூடும்.
விக்ஷேபத்திலிருந்து விடுபட தொடர்ந்து தியானத்தில் அமர்ந்து பழக வேண்டும். கஷாயத்திலிருந்து விடுபட ஆழ்மனதில் தேக்கி வைத்துள்ள உணர்ச்சிகளை வெளிப்படுத்தி, மனதை தியானத்துக்கு அனுகூலமாக இருக்குமாறு செய்ய வேண்டும். ரஸாஸ்வாதத்திலிருந்து விடுபட, மனதில் தெளிந்த பகுத்தறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும். ரஸாஸ்வாதத்தில் ஏற்படுவது நிபந்தனைகளோடு கூடிய ஆனந்தம். எங்கும், எப்பொழுதும் தடையற்ற, நிபந்தனைகளற்ற இருப்பு - உணர்வு-பேரின்ப வடிவமே நான் என்ற மெய்யறிவை உள்ளத்தில் நிலை நிறுத்த வேண்டும். அர்ஜுனன் தன்னுடைய பிரச்சனையை விக்ஷேபம் - அலைபாயும் தன்மை என்று கூறியிருக்கிறான். |
|
|
|