|
அபிமன்யுவின் மனைவி உத்தரைக்கு முனிவர் ஒருவர் மாயக்கண்ணாடி ஒன்றைப் பரிசாகக் கொடுத்தார். அந்தக் கண்ணாடி முன் ஒருவர் நின்றால் அவர் மனத்தில் இருப்பவர் அதில் தெரிவார். உத்தரையே முதலில் அதனை சோதித்தாள். திருமணமான நாள் முதல் அவள் கணவன் அபிமன்யுவைத்தவிர, அவளது உள்ளத்தில் யாரும் இல்லை. எனவே, அபிமன்யுவே அதில் தெரிந்தான். அவ்விதமே, அபிமன்யு கண்ணாடி முன் நிற்க உத்தரையே தெரிந்தாள்.
அச்சமயம் மாயக்கண்ணன் அங்கு வந்தார். அவர் மனத்திற்குள் யார் இருக்கிறார் என அறிய எல்லோருக்கும் ஆசை. தருமர், அர்ச்சுனன், பீமன், நகுல, சகாதேவன் யாவரும் தாம்தான் கண்ணன் மனத்தில் இருக்கக்கூடும் என்று எண்ணினர். ஏன்? குந்திக்குக்கூட அவ்வித எண்ணமே இருந்தது. கண்ணனை வலுக்கட்டாயமாக இழுத்து கண்ணாடி முன் நிறுத்தினர். என்ன ஆச்சர்யம்! யாருக்குக் கண்ணனை அறவே பிடிக்காதோ அந்த சகுனிதான் மாயக்கண்ணாடியில் தெரிந்தான். கண்ணா! என்ன மாயம்? எனக் கேட்க கண்ணன், தூக்கத்தில் கூட என்னை எப்படிக் கொல்வது என்பதையே சிந்தித்துக் கொண்டிருக்கிறான் சகுனி! எப்படி நினைக்கிறார்கள் என்பது முக்கியமல்ல! என்னை மறவாதவர் என் இதயத்தில் இருப்பவர்கள் என்றார். |
|
|
|