|
அக்பர் சக்கரவர்த்தியின் அவையில் அமைச்சர் பீர்பால் ஒருநாள், திருமாலின் பத்து அவதாரங்களும், அவன் உயிர்களின் மேல் கருணை கொண்டு பூமிக்கு வந்து உதவிய அருளையே குறிக்கும் எனக் கூறினார். இதைக் கேட்ட பாதுஷா, பெருங்கருணை படைத்த இறைவன் மிகவும் ஆற்றல் வாய்ந்தவன்! அவன் நினைத்த மாத்திரத்தில் மக்களைக் காப்பாற்றலாமே? ஏன் தன் பரிவாரங்களை அனுப்பியும் உதவலாமே? அவ்வளவு பெரியவன், வல்லவன் ஒரு யானையையும், பக்தர்களையும் காப்பாற்ற அவனே நேரில் வர வேண்டும்? இதனை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் என்றார். பீர்பாலும் அதைக் கேட்டு பேசாது இருந்து விட்டார். பின்னர், ஒரு நாள் பாதுஷா தம் மனைவி மற்றும் கைக்குழந்தையுடன் யமுனை நதியில் அலங்கரிக்கப்பட்ட படகில் ஏறி உல்லாசப் பயணம் சென்றார். நட்ட நடு ஆற்றில் ஆழமான பகுதி வழியே அப்படகு சென்றது. அரச பரிவாரங்களும் அவர் பின்னே படகுகளில் சென்றன. அக்பர் தம் கைக்குழந்தையை கொஞ்சியபடி அமர்ந்திருந்தார்.
அமைச்சர் பீர்பால் தாமும் அக்குழந்தையை கையில் வைத்துக் கொண்டு கொஞ்சினார். அப்போது திடீரென்று அந்தக் குழந்தை தாவி, ஆற்றில் விழுந்து விட்டது. பாதுஷா பதறினார். தமது ஒரே வாரிசான இளவரசன் ஆற்றில் விழுந்ததைக் கண்டதும் தன்னை மறந்தார். வேகமாகத் தானும் ஆற்றில் குதித்து, குழந்தையைப் பாய்ந்து எடுக்க முயன்றார். அவரையும் முந்திக் கொண்டு பாய்ந்த வீரன் ஒருவன், குழந்தையைக் காப்பாற்றி, அரசரையும் கரை சேர்த்து படகில் ஏற்றினான். அரசர் மிகுந்த கோபத்துடன் பீர்பாலை பார்த்தார். எனது அருமைச் செல்வம், எனது கண்ணெதிரிலேயே ஆற்றில் விழுந்து இறக்கவிருந்ததே, இதில் ஏதேனும் நீங்கள் சதி வேலை செய்தீரா? என சீறினார். பீர்பால், அமைதியாக அரசரைப் பார்த்து சிரித்தார். என்ன சிரிப்பு! என சினந்தார் அரசர். பீர்பால், அரசே, கோபம் வேண்டாம். நான்தான் குழந்தையை வேண்டுமென்றே தவற விட்டேன் என்றார். அரசரின் கோபம் கட்டுக்கடங்காது போயிற்று. யாரங்கே, இளவரசரைக் கொல்ல முயன்ற குற்றத்துக்காக பீர்பாலைக் கைது செய்து, சிறையில் அடைக்க உத்தர விடுகிறேன் என்றார். அப்போது பீர்பால் விடாமல் சிரித்துக்கொண்டே இருந்தார். பின்பு, அரசே, உங்கள் குழந்தை தண்ணீரில் விழுவதைப் பார்த்த நீங்கள், அரசர் என்ற முறையில், இருந்த இடத்திலேயே இருந்து, நம்மைச் சுற்றியுள்ள வீரர்களை அழைத்து, உடனே குழந்தையைக் காப்பாற்றுங்கள்! நீரில் குதியுங்கள்! என்று ஆணையிட்டு இருக்கலாமே! அவ்வாறு நீங்கள் ஆணையிட்டிருந்தால் எல்லோருமே நீரில் குதித்து குழந்தையைக் காப்பாற்றி இருப்பார்களே? ஏன் நீங்களே நீரில் பாய்ந்தீர்கள்? என்று கேட்டார்.
ஆ... அது என் குழந்தை! அதைக் காப்பாற்ற நானே அவசரமாக நீரில் குதிக்காமல், மற்றவரை ஏவி விட்டுக் காத்திருக்கலாமா? என்றார். இப்போது புரிகிறதா? என்றார் பீர்பால். அமைச்சரே, என்ன சொல்கிறீர்கள்? என்றார் பாதுஷா புரியாமல். உடனே பீர்பால், எங்கள் இறைவனும் உங்களைப் போலத்தான்! உங்கள் குழந்தையைக் காப்பாற்ற வேண்டுமே என்ற அவசரத்தில் நீங்களே நீரில் குதித்ததைப் போலவே, உலகின் தந்தையாகிய இறைவனும் தம் குழந்தைகளைக் காப்பாற்றுவதற்காக, யாரையும் ஏவாமல், தாமே அவதாரம் செய்தார்! என்றார். அத்துடன் இந்தக் குழந்தையை ஆற்றில் போடப் போகிறேன் என்று அந்த வீரனிடம் சொல்லி, உடனே குழந்தையைக் காப்பாற்றவும் ஏற்பாடு செய்து விட்டேன். அதற்குள் நீங்களும் நீரில் குதித்து உங்கள் மைந்தன் மேல் நீங்கள் கொண்ட பாசத்தைக் காட்டி விட்டீர்கள். எங்கள் தெய்வமும் உலகத்து உயிர்கள் பால் கொண்ட பாசமாகிய கருøணியினால் தாமே அவதாரம் செய்தார் என்பதை உணர்த்தவே இவ்வாறு செய்தேன். அதற்காக என்னை மன்னிக்க வேண்டுகிறேன் என்றார். ஆண்டவன் எடுக்கும் தசாவதாரத்தின் நோக்கத்தினை நுட்பமாகிப் புரிய வைத்த பீர்பாலை போற்றினார் மன்னர் பாதுஷா. |
|
|
|