|
ஒரு பெரியவருக்கு இரண்டு மகன்கள் இருந்தனர். அவர் இறக்கும் தருவாயில், தன் சொத்துக்களை சமமாக எழுதி வைத்தார். இளைய மகன், கிடைத்த சொத்தை நல்ல முறையில் பயன்படுத்தி, ஒன்றுக்கு பத்தாகப் பெருக்கினான். ஏழைகளுக்கு தர்மமும் செய்தான். மூத்தவன் இவனுக்கு நேர் எதிர். சொத்துக்களை சுகமாக அனுபவிக்க ஆரம்பித்தான். உலகத்திலுள்ள அத்தனை கெட்ட பழக்கங்களும் அவனை ஆட்கொண்டன. அவனிடமிருந்த பணத்தை அனுபவிக்க நண்பர்கள் வட்டமடித்தனர். அறிவே இல்லாத அவனை ‘உன்னிலும் சிறந்த அறிவாளி உலகில் இல்லை’ என்று பாராட்டினர். காலப்போக்கில் சொத்து கரைந்தது. நண்பர்கள் அவனைப் பார்ப்பது கூட இல்லை. ஒரு பெரியவர் அவனிடம், ‘‘உன் தம்பி அவனுக்கு கிடைத்த சொத்தை பல மடங்கு பெருக்கிவிட்டான். அழகான மனைவி, அன்பான குழந்தைகள் இருக்கிறார்கள். ஏழைப்பிள்ளைகளை படிக்க வைக்கிறான். நீ ஆடம்பரத்தால் அத்தனையும் இழந்தாயே!’’ என்று திட்டினார். அவன் அழுதான். கெட்ட பழக்கங்களால் நோயும் துரத்தியது. சாகும் நிலையில் சாலையில் கிடந்த அவன் மீது இரக்கப்பட்ட தம்பி மருத்துவமனையில் சேர்த்து குணமாக்கினான். மேலும், தன் சொத்தில் ஒரு பகுதியைக் கொடுத்து திருந்த வாழச் சொன்னான். சொத்து கிடைத்ததும், திரும்பவும் கூத்தடித்த அண்ணன் நோயில் சிக்கி இறந்து போனான். பணம் வாழவும் வைக்கும்... தாழவும் வைக்கும். அதைக் கையாளும் முறையைப் பொறுத்தே நம் வாழ்வு சுழலும். |
|
|
|