|
குரு வழிபாடு, தெய்வ வழிபாடு இரண்டுமே இன்றைக்கு அவசியம் என்பதை அனைத்து ஆன்மிக நுõல்களும் வலியுறுத்துகின்றன. ஆனால் மேலே சொன்ன இந்த இரண்டை விட மேலான வழிபாடு ஒன்று உள்ளது. அந்த வழிபாட்டை நாம் முறையாகச் செய்து வந்தாலே, குருவையும் தெய்வத்தையும் வணங்கியவர்கள் ஆகி விடுவோம். அப்படி என்ன ஒரு சிறப்பான வழிபாடு? அதுதான் பித்ருக்கள் வழிபாடு! ‘பித்ருக்கள்’ என்று சொல்லப்படும் இறந்த முன்னோர்களுக்கு மேற்கொள்ள வேண்டிய வழிபாடுகளைச் செய்யாமல் போனால் பித்ரு தோஷம், பித்ரு சாபம் பீடித்து விடும். ‘பித்ருக்களை முறையான வழியில் ஆராதிக்காமல் எத்தனை குருமார்களின் சன்னிதிக்குப் போய் தரிசித்தாலும் சரி... எத்தனை தெய்வ ஆலயங்களுக்குப் போய் வழிபாடு செய்தாலும் சரி... பலன் கிடைக்காது’ என்று கருட புராணம் சொல்கிறது.
பித்ருக்களை அன்றாடம் நாம் வணங்க வேண்டும் என்றாலும், இதற்கு உகந்த நாள் அமாவாசை. இறந்த முன்னோர்களை மனதில் நினைத்து அன்றைய தினத்தில் அவர்களுக்கு நாம் வழங்கக் கூடிய எள்ளும் நீரும் அவர்களை சந்தோஷமடைய வைக்கும். இந்த வழிபாடு, நம் சந்ததியையே வாழ வைக்கும். பித்ருக்களை நினைத்து அமாவாசை அன்று செய்யக்கூடிய சாதாரண தானம் பெரும் புண்ணியத்தைத் தரும். சாதாரண அமாவாசைக்கே இத்தனை சிறப்பு என்றால் தை அமாவாசை, ஆடி அமாவாசை மற்றும் புரட்டாசி அமாவாசைக்கு (மகாளய அமாவாசை) எத்தனை விசேஷம் இருக்கும்...! மாதா மாதம் வருகிற அமாவாசை தினங்களில் தர்ப்பணம் போன்றவற்றை சூழ்நிலை கருதி செய்ய முடியாவிட்டாலும், மேலே சொன்ன மூன்று அமாவாசைகளில் தர்ப்பணம் செய்தாலே வருடம் முழுக்க தர்ப்பணம் செய்த பலனைப் பெற்றுத் தந்து விடும். இந்த மூன்று அமாவாசைகளில் தை அமாவாசை கூடுதல் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
தை அமாவாசையின் போது தான் தங்கள் சந்ததியினர் மற்றும் சொந்த பந்தங்களைப் பார்த்து வருவதற்காக, பித்ருக்களை பூலோகம் செல்ல அனுமதிப்பாராம் எமதர்மராஜன். தங்களது பிள்ளைகள் மற்றும் ரத்த பந்த சொந்தங்களைப் பார்க்க பாசத்தோடும், பசியோடும் அவர்கள் இறங்கி வருவார்களாம். ஆசையோடும், ஏக்கத்தோடும் பூலோகம் வருபவர்களை வரவேற்று அவர்களுக்கு எள்ளும் நீரும் இறைத்து, தர்ப்பணம் செய்து திருப்திப்படுத்த வேண்டும். அப்படி நாம் எதுவும் செய்யாமல் இருந்து விட்டால், ஏமாற்றத்தின் காரணமாக மோசமான சாபத்தை வழங்கி விட்டுச் சென்று விடுவார்களாம். பித்ருக்களை ழிபடாதவர்களின் குடும்பங்களில் திருமணம் போன்ற சுப காரியங்கள் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கும். நல்ல சம்பவங்கள் நடைபெறாது. துர்சம்பவங்களை சந்தித்துக் கொண்டே இருக்க நேரிடும். தை அமாவாசை தினத்தில் புனித நீர்நிலைகளில் நீராடி, முன்னோர்களுக்குப் பித்ரு தர்ப்பணம் செய்தால், அவர்கள் மிகவும் மனம் மகிழ்ந்து நம்மை ஆசிர்வதிப்பார்கள். வாழ்வில் எண்ணற்ற வளங்களை அடையலாம். இந்நாளில் கன்னியாகுமரி, வேதாரண்யம், கோடியக்கரை, திருப்புல்லாணி, ஏரல் (திருச்செந்துõர் அருகிலுள்ளது), திருச்செந்துõர், பூம்புகார், நாகப்பட்டினம் போன்ற இடங்களில் கடலில் நீராடி விட்டு, கடற்கரையிலேயே தர்ப்பணம் செய்வதற்குப் பல்லாயிரக்கணக்கானோர் கூடுவர். கடல் ஸ்நானம் தை அமாவாசைக்கு விசேஷம் என்று சொல்லப்பட்டாலும், இவற்றுள் சிறப்பானது சேது ஸ்நானம்.
அதாவது ராமேஸ்வரம் அக்னி தீர்த்த நீராடல்! பித்ரு தோஷ நிவர்த்தி தலமாக எண்ணற்ற ஆன்மிக நுõல்களால் பரிந்துரைக்கப்படுகின்ற ஊர் ராமேஸ்வரம்! ராமேஸ்வரம் அக்னி தீர்த்தக் கடலில் நீராடி பித்ரு தர்ப்பணம் செய்வதற்காக, தை அமாவாசைக்கு முதல் நாளில் இருந்தே பக்தர்கள் கூட ஆரம்பிப்பார்கள். உலகின் பல பாகங்களில் இருந்தும், பக்தர்கள் ராமேஸ்வரத்தை நோக்கி படையெடுப்பார்கள். தை அமாவாசை தினத்தன்று அதிகாலை 2:30 மணிக்கு ராமநாத சுவாமி ஆலயத்தின் நடை திறக்கப்படும் (சாதாரண நாட்களில் அதிகாலை 4 மணிக்குத் திறக்கப்படும்). நித்தமும் அதிகாலை நடக்கும் ஸ்படிக லிங்க பூஜை இத்யாதிகள் முடிந்த பிறகு, காலை 7:00 மணிக்கு உற்ஸவர் திருமேனிகள் அக்னி தீர்த்தத்க்குப் புறப்பட்டுச் சென்று தீர்த்தவாரி நடக்கும். இந்த தீர்த்தவாரிக்காக சிவன், அம்பாள், சண்டேஸ்வர மூர்த்தி, விநாயகர், முருகன் ஆகிய பஞ்ச மூர்த்திகள், ராமர், சீதை, லட்சுமணர் போன்றோர் வாத்திய கோஷத்துடன் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு கடற்கரைக்கு எழுந்தருளுவர். இவர்களுக்கு விசேஷ வழிபாடு நடக்கும். இந்த உற்ஸவர் திருமேனிகள் அக்னி தீர்த்தக் கடலில் மூழ்குகின்ற வேளையில் கடலில் நின்று கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கடலில் நீராடுவார்கள். உற்ஸவர்கள் கோவிலுக்கு திரும்பும் போது, பக்தர்களும் உடன் வந்து அங்குள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடுவார்கள்.
அன்றைய தினம் நான்கு ரத வீதிகளையும் சுற்றி நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்துக் கொண்டிருப்பார்கள். லட்சக்கணக்கில் ராமேஸ்வரத்தில் கூடும் பக்தர்களைக் கருத்தில் கொண்டு அன்றைய தினம் மதியம் கோவில் நடை அடைக்கமாட்டார்கள். தரிசனமும், புனித நீராடலும் நடந்து கொண்டே இருக்கும். இரவு பத்து மணிக்குத் தான் நடை சாத்தப்படும். அதிகாலை முதலே அக்னி தீர்த்தக் கடலில் நீராடத் துவங்கும் பக்தர்கள் அங்கேயே தர்ப்பணம் செய்து, தானம் வழங்குவார்கள். அன்னம், ஆடை, அரிசி, காய்கறி, குடை, செருப்பு, ஊன்றுகோல் போன்ற தானங்களை அன்றைய தினம் செய்தால் புண்ணியம். நதிக்கரையிலும் அன்றைய தினம் பித்ரு காரியங்கள் செய்வது விசேஷம் என்பதால் கங்கை பாயும் காசி, கயா, அலகாபாத், ரிஷிகேஷ், ஹரித்துவார் போன்ற இடங்களில் கூட்டம் அலைமோதும். தென் தமிழகத்தில் பாபநாசம் (திருநெல்வேலி), குற்றாலம் மற்றும் காவிரி பாயும் பவானி, கொடுமுடி, முக்கொம்பு, ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம், திருவையாறு போன்ற இடங்களில் தர்ப்பணம் செய்வதற்கு பக்தர்கள் கூடுவர். கும்பகோணம் மகாமகக் குளம், செதலபதி (திலதர்ப்பணபுரி) திருவெண்காடு உள்ளிட்ட முக்கிய க்ஷேத்திரங்களில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடும். தை அமாவாசையன்று திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் லட்ச தீபம் ஏற்றுவார்கள். பக்தர்கள் மாலை ஐந்து மணிக்கே ஆலயத்துக்கு வந்து தீபம் ஏற்றத் துவங்குவார்கள். தை அமாவாசையில் பித்ரு காரியம் செய்து, முன்னோர்களின் ஆசிகளைப் பெறுவோம்.
|
|
|
|