|
நான், நாரதராக இருக்கிறேன்... என்று, கண்ணனாலேயே பாராட்டப்பட்ட நாரத பகவானே வரம் தந்தும், பேராசையின் காரணமாக, விசித்திரமான வரம் பெற்ற மன்னனின் கதை இது. ஒரு சமயம், மன்னர் சிருஞ்சயனின் அரண்மனைக்கு வந்தார், நாரத முனி. அவரை மிகுந்த பணிவோடும், பக்தியோடும் வரவேற்று, உபசரித்தார், மன்னர். ஆனாலும், அவர் மனதில் ஏதோ குறை இருப்பதை முகம் வெளிப்படுத்த, மன்னா... உன் மனதில் உள்ள வருத்தம் என்ன... என்று கேட்டார், நாரதர். மாமுனியே... மகன் இல்லா குறை மனதை வாட்டுகிறது; தாங்கள் தான் என் குறை தீர வரம் அருள வேண்டும்... என வேண்டினார் மன்னர். சிருஞ்சயா... எப்படிப்பட்ட பிள்ளையை எதிர்பார்க்கிறாய்... என்று கேட்டார் நாரதர். உடனே, பரபரப்படைந்த மன்னர், சுவாமி... அழகும், ஆரோக்கியமும் நிறைந்த குழந்தை வேண்டும்; அத்துடன், அவன் உடலில் இருந்து வெளியேறும் கழிவுகள் அனைத்தும் தங்கமாக வெளிப்பட வேண்டும்... என்றார்.
அவ்வாறே நாரதர் வரமளிக்க, சிருஞ்சயனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. மேலும், அக்குழந்தையின் உடற் கழிவுகள் தங்கமாக மாற, மகிழ்ந்து, குழந்தைக்கு, ஸ்வர்ணஷ்டீவி என்று பெயரிட்டார், மன்னர். ஸ்வர்ணஷ்டீவியின் உபயத்தால், அரண்மனையின் பொக்கிஷம் நிரம்பி வழிந்தது; அரண்மனை சுவர்கள் உட்பட அனைத்தும், தங்கத்தால் ஜொலித்தன. இவ்விஷயத்தை அறிந்த கொள்ளை கும்பல் ஒன்று, அரசகுமாரன் அழுதால் கூட தங்கமாக மாறுகிறதாம்; அவனை திருடி வந்தால், நாம் பெரும் செல்வந்தர்கள் ஆகி விடுவோம்... என எண்ணி, அரசகுமாரனை, கடத்தி வந்தனர். பின், அரசகுமாரனிடம் இருந்து வெளிப்படும் தங்கத்தை பங்கு போட்டுக் கொள்வதில் அவர்களுக்குள் அபிப்ராய பேதம் ஏற்பட்டது. இந்நிலையில், அரசகுமாரனை தேடி காவலர்கள் வரும் தகவல் வர, இவனை நீண்ட நாட்களுக்கு மறைத்து வைக்க முடியாது; விவரம் தெரிந்தால், அரசன், நம் தலையை கொய்து விடுவான். ஆகையால், தங்கத்தை வெளியிடும் இக்குழந்தையைக் கொன்று இவன் உடம்பிற்குள் உள்ள தங்கத்தை, நாம் அனைவரும் பங்கிட்டுக் கொள்ளலாம்... என்று தீர்மானித்த கொள்ளையர், அரசகுமாரனை கொன்று, உடம்பிற்குள் தங்கத்தை தேடினர். ரத்தமும், சதையும் தான் இருந்தனவே தவிர, தங்கம் இல்லை. அதேசமயம், அரசகுமாரனை தேடி வந்த காவலர்கள், கொள்ளைக்கார கும்பலை கண்டு, இழுத்துச் சென்றனர். பேராசையால், மன்னர் மகனையும், கொள்ளைக்காரர்கள் உயிரையும் இழந்தனர். மகாபாரதத்தில், வியாசர் சொன்ன கதை இது! எனவே, பேராசை படாமல், கிடைத்ததைக் கொண்டு, திருப்தி அடைவோம்; கடவுளின் அருளையும் பெறுவோம்!
|
|
|
|