Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » உழவு!
 
பக்தி கதைகள்
உழவு!

சீக்கிரம் தரிசனத்தை முடிச்சுட்டு கிளம்பிடணும்... என நினைத்து, கோவிலுக்குள் நுழைந்த பாரதி, வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தை பார்த்ததும், மலைத்துப் போனான். தம்பி, ஏன் தயங்குறீங்க... இன்னிக்கு நிறைஞ்ச பவுர்ணமி; இந்த நாள்ல, அம்மனை தரிசிச்சா, நினைச்சதெல்லாம் நடக்கும். இன்னைக்கு ஞாயிற்றுக்கிழமை இல்லயா... அதான், இவ்வளவு கூட்டம். வாப்பா... வந்து, வரிசையில் நில்லு; கோவிலுக்குள்ள வந்துட்டு, சாமியை பாக்காம போகலாமா... வரிசையில் நின்றிருந்த பெரியவர் ஒருவர், பாரதியை அழைத்து, அருகில், நிற்க வைத்தார். தன் பெற்றோரின் மனசு மாறி, தான் நினைத்தது, நிறைவேற வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்தவனுக்கு, அப்பெரியவரின் சொற்கள், அருள்வாக்காய் இருந்தன. நெடிய உயரமும், அழகான மிரட்டும் மீசையும், கம்பீரமான கிராமத்து மிடுக்கும் ஒருங்கே அமைந்த அப்பெரியவர், அவனை, ஏதோ ஒரு விதத்தில் கவர்ந்தார். தம்பிக்கு எந்த ஊரு? விழுப்புரம் பக்கத்துல, அகரம் கிராமம்; என் பேரு பாரதி.
நல்ல பெயர்; காணி நிலம் வேண்டும்ன்னு பாடின, பாரதியோட பெயர். அப்புறம் என்ன வேலை பாக்கறீங்க... நான் விவசாய குடும்பத்தை சேர்ந்தவன்ங்கய்யா... எங்கப்பா எப்படியோ கஷ்டப்பட்டு என்னை படிக்க வச்சுட்டாரு. அவரது கஷ்டம் வீண் போகல. இப்ப, பழனியில ஆசிரியர் வேலை கிடைச்சிருக்கு; நாளைக்கு தான் வேலையில சேர போறேன். அதான், சமயபுரத்து அம்மனை தரிசிச்சுட்டு போகலாம்ன்னு வந்தேன், என்றான்.

அப்போது, வரிசையில் நின்றிருந்த ஒரு வயசான பெண், விவசாய குடும்பத்துல பொறந்துட்டு, கஷ்டப்படுறோம்ன்னு சொல்றீயே தம்பி... விவசாயி மகனா பொறந்ததுக்கு பெருமைப்படுப்பா... என்றாள். சொல்றதுக்கு நல்லா தான் இருக்கு பாட்டி... ஆனா, என்னோட அப்பா, நிலத்துல கஷ்டப்படும் போதும், அதற்கேற்ற பலன் கிடைக்காதப்ப அவர் வருத்தப்படும் போதெல்லாம், அவரோட சேர்ந்து, நானும், எத்தனையோ முறை அழுதிருக்கேன். ஏதோ, எனக்கு ஆசிரியர் வேலை கிடைச்சிடுச்சு... இல்லன்னா, நானும், அவரோட சேர்ந்து, நிலத்துல கஷ்டப்பட வேண்டியதுதான், என்றான். பின், பெரியவரிடம், ஐயா... உங்கள பத்திச் சொல்லுங்க... இந்த வயசுலயும் திடகாத்திரமா, மிடுக்கா இருக்கீங்க; உங்கள பாக்கவே மனசுல மகிழ்ச்சி ஏற்படுது, என்று சொன்னதும், பெரியவரின் முகத்தில் லேசான சிரிப்பு. சிவகிரிப்பட்டி நடேசன்னாலே, பழனி மலை அடிவாரத்தை சுற்றியுள்ள அத்தனை கிராமத்து ஜனங்களுக்கும், நல்லா தெரியும். சின்ன வயசுல, எல்லா பழக்கமும் இருந்துச்சு; ஆனா, எப்ப கல்யாணம் செய்துக்கிட்டேனோ, அப்பவே எல்லாத்தையும் விட்டுட்டேன். அதுக்கப்புறம், என் மனைவியும், நிலமும் தான், என்னோட வாழ்க்கையாயிடுச்சு. இயற்கை விவசாயம் செஞ்சுக்கிட்டு, இப்போ நிம்மதியா இருக்கேன், என்றார். வேகமாக வரிசை நகர, இருவரும் சாமி தரிசனம் முடித்து, கோவில் பிரகாரத்தை வலம் வந்தனர். அப்போது, தம்பி... பழனிக்கு போற வழியில் தான், நம்ம வீடு இருக்கு; வந்தீங்கன்னா, சாப்பிட்டுட்டு, அவங்களையும் பாத்துட்டு போகலாமே, என்றார். அவர், தன் மனைவியை அவங்க, இவங்க என்று சொல்வது புரிந்ததும், அவர் மீது மதிப்பு கூடியது. அத்துடன், பண்பான அவரது அழைப்பை, அவனால் தட்ட முடியவில்லை.

விடுமுறை நாள் என்பதால், பேருந்துக்காக காத்திருப்போரின் எண்ணிக்கை, அதிகமாகவே இருந்தது. ஒருவழியாக, பழனி செல்லும் அரசுப் பேருந்தில் இருவரும் ஏறினர். ஜன்னல் ஓரத்தில் அமர்ந்தான் பாரதி. அப்பேருந்தில் பயணம் செய்த பெரும்பாலானோர், கிராமத்து மக்களாகவே இருந்தனர். கண்டக்டர், கூட்டத்தில் நீந்தி அருகில் வந்ததும், டிக்கெட் எடுக்க பணத்தை எடுத்தான் பாரதி. தம்பி... நீங்க பணத்தை பையில் வையுங்க. கண்டக்டர் ஐயா... சிவகிரிப்பட்டிக்கு ரெண்டு டிக்கெட் கொடுங்க... என்றவர், ஏன் தம்பி இப்படி கஷ்டப்பட்டு ஒடுங்கி உட்கார்ந்திருக்கீங்க; நல்லா தாராளமா உட்காருங்க, என்றார். புதிய ஊர், அதிகம் அறிமுகமில்லாத மனிதருடனான பயணம் என வித்தியாசமான மனநிலையில் இருந்தான், பாரதி. ஜன்னலுக்கு வெளியே எட்டிப் பார்த்தான்; பழனி 143 கி.மீ., என்று பச்சை நிறப் பலகை, பறைசாற்றியது.
வெளியே வேடிக்கை பார்த்த பாரதி, இரு நாட்களுக்கு முன், வீட்டில் நடந்ததை அசை போட்டான். அப்பா... இப்பத் தான் எனக்கு வேலை கிடைச்சுடுச்சுல்ல... இன்னமும் நீங்க நிலத்துல கஷ்டப்படணுமா... பேசாம நிலத்தை நல்ல விலைக்கு ரியல் எஸ்டேட்காரங்களுக்கு வித்துட்டு, நீங்களும், அம்மாவும் என்னோட வந்துடுங்க...என்றான், பாரதி. டேய் என்ன பேசற நீ... வேலைன்னு ஒண்ணு உறுதியாயிட்ட உடனே, உனக்கு விவசாயம் கேவலமா போச்சா... பசி இருக்கற வரைக்கும், உணவுன்னு ஒண்ணு வேணும்; உணவு வேணும்ன்னா, விவசாயம் செய்யணும். ஏண்டா... உன்னைப் போல ஒவ்வொருத்தரும் விளையற நிலத்தையெல்லாம் பிளாட் போட்டு வித்துட்டா, எதிர்கால சந்ததியென்ன கல்லையும், மண்ணையுமா காய்ச்சி குடிப்பாங்க... இதோட, நிலத்தை விக்கணும்ங்கிற பேச்சை நிறுத்திக்கோ... அம்மா இவ்வளவு கோபப்பட்டு, அவன் பார்த்ததேயில்லை. கொஞ்ச நாளில், எப்படியும் நம்ம முடிவுக்கு வருவாங்க என்ற நம்பிக்கையில் பழனிக்கு புறப்பட்டவன் தான், சமயபுரத்தம்மனிடம் வேண்டுதலை வைத்து, இப்போது, நடேசனோடு பேருந்தினுள் பயணித்துக் கொண்டிருக்கிறான்.

பச்சைப் பசேலென இருபுறமும் இருக்கும் வயல்வெளிகளில் இருந்து அடித்த சில்லென்ற காற்று, முகத்தில் மோத, அப்படியே தூங்கி விட்டான், பாரதி. திடீரென கண் விழித்தவன், நடேசனின் தோளில் சாய்ந்திருந்ததை உணர்ந்து, மன்னிச் சிடுங்கய்யா... அசதியா இருந்ததால, உங்க தோள்ல சாஞ்சது கூட தெரியாம, நல்லாத் தூங்கிட்டேன், என்றான். என்ன தம்பி... இதுக்கெல்லாம் போயி மன்னிப்பு கேட்டுக்கிட்டு... நான், ரெண்டாவது வரைக்கும் தான் படிச்சிருக்கேன். நீங்க நல்லா படிச்சவங்க... அதுவும் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி தரப் போற குரு... உங்கள என் தோளில் தாங்குறது, எவ்வளவு பெரிய புண்ணியம்... என்றார். இன்னும் ஒரு நாள் கூட பணிக்கு சென்றிராத பாரதிக்கு, அவரது பேச்சு, நல்ல ஆசிரியராக விளங்க வேண்டும் என்ற உறுதியை ஏற்படுத்தியது. பேருந்தில் இருந்து நடேசனுடன் இறங்கினான், பாரதி. பழனி மலையையொட்டி, பச்சைப்பசேலென காட்சியளித்தது, சிவகிரி கிராமம். சிறிது தூரம் நடந்ததும், ஒரு பெரிய தோப்புக்குள், பாரதியை அழைத்துச் சென்றார், நடேசன். அங்கு, தோட்டத்தோடு கூடிய, சிறிய வீடு இருந்தது. வயதான பெண் ஒருவர், மாடுகளுக்கு தண்ணீரும், அங்கு மேய்ந்த கோழிகளுக்கு, தீனியும் போட்டுக் கொண்டிருந்தார். அனேகமாக, அவர் தான், நடேசனின் மனைவியாக இருக்க வேண்டும். ஆங்காங்கே வாத்துகள் மேய்ந்தன.  வைகளுக்கு நடுவே, வேட்டை நாய் ஒன்று கம்பீரமாகப் படுத்திருந்தது; இருவரையும் பார்த்ததும், வேகமாக ஓடி வந்து, நடேசனின் அருகே, வாலை ஆட்டி நின்றது, அந்த நாய். கடும் உச்சி வெயிலில், கோவணத்தோடு ஒருவர், பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். ஐயா... உங்க வீடும், அது அமைஞ்சிருக்கிற சூழலும், பாக்கிறதுக்கு ரொம்ப அழகா இருக்கு. அதோட, பாருங்க... மணி, 2:00 ஆகப்போகுது, இந்த நேரத்திலயும் ஒருத்தர் வரிஞ்சி கட்டி வேலை செய்றார். எங்க ஊர்ல எல்லாம், கூலியாளுங்க, காலை, 5:30க்கு வயல்ல இறங்கினாங்கன்னா, 9:00 மணிக்குள்ள, வேலையை எடுத்துக் கட்டிட்டு, கிளம்பிடுவாங்க... என்றான்.

பதில் சொல்லாமல், வெறுமனே புன்முறுவல் செய்தார், நடேசன். பாரதியை உள்ளே அழைத்துச் சென்று, மனைவிக்கு அறிமுகப்படுத்தி, சாப்பிட, வாழை இலை அறுத்து வர, தோட்டத்துக்கு சென்றார். அம்மா... உங்க கிட்ட ஒண்ணு கேட்கலாமா... ஐயா ஏன், இந்த காலத்திலும் நிலத்த வச்சிக்கிட்டு கஷ்டப்படறார்; இதுல, என்ன பெருசா லாபம் கிடைச்சுடப் போகுது...என்றான். தம்பி... அப்படிச் சொல்லாதே... சுத்து வட்டாரத்துல, எல்லாரும் நிலத்த பிரிச்சு, பிளாட் போட்டு வித்துட்டாங்க; ஆனா, நாங்க மட்டும் அந்த தப்ப செய்யல. ஏன்னா, விவசாயம்ன்னா, எங்களுக்கு உசுரு. பணத்த காட்டி எங்கள வளைக்கப் பாத்தாங்க; நாங்க பிடிகொடுக்கல. பணம் மட்டுமே வாழ்க்கைன்னு நினைக்கிறவங்க, நிம்மதிய இழந்துடறாங்க. வாழ்க்கையில சந்தோஷத்த மட்டுமே தேடுனா, நிம்மதி கிடைக்காது. நிம்மதி வேணும்ன்னு நினைச்சு வாழ ஆரம்பிச்சா, சந்தோஷம் தானாவே வரும். இதுதாம்பா நாங்க கத்துக்கிட்ட வாழ்க்கைப் பாடம். எங்களுக்கு நிலமும், விவசாயமும் நிம்மதியை தருது; அதனால, சந்தோஷமா வாழறோம், என்றாள் அமைதியாக! எவ்வளவு பெரிய வாழ்க்கை தத்துவத்தை, சாதாரணமாக சொல்லிவிட்டாள், இந்தக் கிராமத்து பெண்மணி என்று ஆச்சரியத்துடன் பார்த்தான் பாரதி. வாழை இலையுடன், உள்ளே நுழைந்த நடேசன், ஏம்மா... தம்பிக்கு சாப்பாடு போடு... என்றார்.

ஐயா... அந்த வேலையாளையும் சாப்பிடக் கூப்பிடுங்களேன்... பாவம், சாப்பாட்டு நேரத்திலயும் பசியுடன் வேலை பாக்கறாரு... நீங்க கொடுத்து வச்சவங்க; நல்ல வேலையாள் கிடைச்சிருக்கு, என்றான். ஆமாம் தம்பி... நாங்க கொடுத்து வச்சவங்க தான்... என்று இருவரும் சேர்ந்தார்ப்போல சொன்னதும், அதன் பொருள் விளங்காமல், சாப்பிட ஆரம்பித்தான்; அவர்களின் உபசரிப்பு, அவனது பெற்றோரை மிஞ்சுமளவுக்கு இருந்ததால், நெகிழ்ந்து போனான். பின், அவர்களிடமிருந்து விடைபெறும் போது, தம்பி... நேரம் கிடைக்கும் போது, அவசியம் வாங்க; இது, உங்க வீடு போல! என்றார் நடேசன். அதுவரை மனதில் இருந்த குழப்பத்திற்கு விடை கிடைத்தது போல், புத்துணர்ச்சியோடு கிளம்பினான், பாரதி. மறுநாள் காலை - தலைமை ஆசிரியர் அறைக்கு சென்ற பாரதி, தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்திருந்த நபரைப் பார்த்ததும், அதிர்ச்சியுடன், ஆச்சரியம் அடைந்தான். நடேச. சுப்பிரமணியம், தலைமை ஆசிரியர்... என்ற பெயர் பலகைக்கு பின் உட்கார்ந்திருந்தவர், நேற்று, நடேசனின் தோட்டத்தில் வேலை செய்த அதே மனிதர் தான்; அவர், நடேசனின் மகன் என்பதையறிந்து வெட்கப்பட்டான்.

பின், தன்னை அறிமுகம் செய்து, பணிச்சேர்தல் கடிதத்தை, அவரிடம் கொடுத்து, மகிழ்வோடு, கால அட்டவணையை பெற்று வெளியேறியவன், தன் அம்மாவை மொபைல்போனில் அழைத்து, அம்மா... நான் வேலையில சேர்ந்துட்டேன்; வார விடுமுறை, சனி, ஞாயிற்றுக் கிழமைகள்ல ஊருக்கு வந்துடுவேன்; அப்பாகிட்ட சொல்லி, நிலத்த சரி செய்ய சொல்லுங்க. பக்கத்துல, ஏதாவது நிலம் இருந்தாலும், புரோக்கர் கிட்ட பேசி, விலைக்கு வாங்க ஏற்பாடு செய்யுங்க. அடுத்த வருஷம், அறுவடைய அசத்திடலாம், என்று கூறி, மகிழ்வுடன் வகுப்பறைக்குள் நுழைந்தான். அப்போது, அவன் பார்வையில், சுழன்றுஏர்ப் பின்னது உலகம் அதனால் உழந்தும் உழவே தலை! என்ற திருக்குறள் பட்டது. அன்பு மாணவச் செல்வங்களே... நான், இப்பள்ளியில் புதிதாகப் பணியேறிருக்கும் தமிழ் ஆசிரியர், பாரதி. கரும்பலகையில் உள்ள குறளின் விளக்கம் என்ன தெரியுமா... உலகம் பல தொழில் செய்து சுழன்றாலும், ஏர்த்தொழிலை பின்பற்றியே நிற்கும். அதனால், எவ்வளவு துன்பமானாலும், உழவே சிறந்த தொழிலாகக் கருதப்படும், என்று விளக்கியவன் இப்புவியில், பிறந்ததன், பயனை அடைந்து விட்ட மகிழ்வோடு, பாடத்தை தொடர ஆரம்பித்தான்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar