|
ஒருமுறை சிவனும், பார்வதியும் கங்கைக்கரைக்கு வந்தனர். ஏராளமான மக்கள் நீராடிக் கொண்டிருந்தனர். அப்போது பார்வதி சிவனிடம், ஐயனே! இங்கே இவ்வளவு மக்கள் குளிக்கிறார்கள். கங்கையில் குளித்தால் சொர்க்கம் என்கிறீர்கள். ஆனால் சொர்க்கம் நிரம்பவே இல்லையே! என்ன காரணம்? என்றாள். சிவன் உடனே முதியவராக மாறி, பார்வதியையும் முதியவள் ஆக்கினார். பார்வதி! நான் கங்கையில் மூழ்குவது போல் நடிக்கிறேன். பாவம் செய்யாத யாராவது என் கணவரைக் காப்பாற்றுங்களேன் என நீ சத்தம் போடு. நடப்பதை வேடிக்கை பார், என்றார். சொன்னபடி கங்கையில் மூழ்குவது போல நடித்தார். கரையில் நின்றவர்கள் நீரில் பாய முயன்றதும், பார்வதி அவர்களிடம், உங்களில் பாவம் செய்யாதவர் மட்டுமே, என் கணவரைக் காப்பாற்ற வேண்டும், என்று நிபந்தனை விதித்தாள். எல்லாரும் பின் வாங்கிய நேரத்தில், ஒரு இளைஞன் மட்டும் கங்கையில் குதித்து முதியவரான சிவனை துõக்கி வந்தான். அப்பா! நீ பாவமே செய்யவில்லையா? என்று பார்வதி கேட்டாள். பாட்டி! நான் பாவம் செய்தவன் தான். ஆனால் கங்கையில் என் உடல் பட்டவுடன் தான் பாவங்கள் பறந்திருக்குமே! அதுதானே நம் காலம் காலமான நம்பிக்கை!என்று சொல்லி விட்டு போய் விட்டான். பார்த்தாயா பார்வதி! அந்த இளைஞன் கங்கையைப் பற்றி கொண்டிருந்த நம்பிக்கை மற்றவர்களுக்கு இல்லை. அவர்கள் கடமைக்கு இதில் நீராடுகிறார்கள். நம்பிக்கை கொண்டவர்களே சொர்க்கம் வர முடியும், என்றார். ஆன்மிகத்தில் மட்டுமல்ல... எதிலுமே நம்பிக்கை வையுங்கள். வெற்றிக்கனியைப் பறியுங்கள். |
|
|
|