|
ராமாயணம் படித்த பல பேருக்கு, ஊர்மிளா பற்றி அதிகம் தெரியாது, ஆனால், அந்த இதிகாசத்தில் மிக அதிக மனத்துயர் அடைந்த பெண் யார் என்று பார்த்தால், ஊர்மிளா தான். இவள் லட்சுமணனின் மனைவி. ராமன் காட்டுக்கு போக வேண்டும் என்பது ஆணை. ஆனால், அவரை விட்டு எப்போதும் பிரியாத தம்பி லட்சுமணனும் உடன் கிளம்புகிறான். இதை அவனது தாய் சுமித்திரையும் ஆதரிக்கிறாள். அவனது மனைவி ஊர்மிளா, நானும் வருகிறேன் என்றாள். அதற்கு லட்சுமணன், “நான் செல்வது காவல்காரன் வேலை பார்க்க, ராமன் ஒன்றும் இன்னொரு நகருக்கு செல்லவில்லை, அவன் செல்வது கானகம், கொடிய மிருகங்கள் வாழும் காடு, அவர்கள் நலமாய் இருக்க வேண்டும் என்றால், நான் எப்போதும் கண் விழித்திருக்க வேண்டும். அவர்களைப் பாதுகாக்கும் பணியில் இருக்கும் போது, உன்னையும் சேர்த்து பாதுகாப்பது சிரமமல்லவா... எனவே நீ நாட்டில் இரு,” என்று சொல்லி விட்டான். ஊர்மிளா கணவன் வார்த்தைக்கு மறு வார்த்தை சொல்லவில்லை, சரி என்று சம்மதித்து விட்டாள், லட்சுமணன் காட்டுக்குப் போய் விட்டான்.
காட்டில் இருந்த போது அவனது மனம் கலங்கியது, பாவம் என் ஊர்மிளா....என்ன செய்கிறாளோ...என் நினைவைத் தவிர வேறு எதுவும் இருக்காதே...கண்ணில் உறக்கம் வராதே, என்று நினைத்தவன், நித்ரா தேவதையை வேண்டுகிறான். நித்ரா என்பவள் துõக்க தேவதை. “தேவதையே! என் மனைவியை நினைக்கும் போது என் மனம் வெடிக்கிறது, அவளது இளமைக் கனவுகளை சிதைத்து விட்டேன், இந்த வனவாச காலம் முடியும் வரை ,நீ அவள் தோழியாக மாறு, அவளுக்கு நல்ல துõக்கத்தைக் கொடு, அது மட்டுமே அவளைக் காக்கும். எனக்காக நீ இதைச் செய்ய வேண்டும், என்றாள். அப்போது நித்ராதேவியின் குரல் ஒலித்தது. “லட்சுமணா! உன் மனைவி மீது நீ வைத்துள்ள பாசம் புரிகிறது. உன் அண்ணனுக்காக, நீ செய்யும் உதவிக்கு, நானும் பக்க பலமாய் இருக்கிறேன், நீ கானகவாசம் முடிந்து ஊர் செல்லும் வரை, நான் உன் மனைவியைப் பார்த்துக் கொள்கிறேன்,” என்றாள். அடுத்து ஊர்மிளாவிடம் சென்றாள் நித்ராதேவி.
அவளது கணவனின் வேண்டுதலைச் சொன்னாள். “ஓ என் மேல், அவர் இவ்வளவு அக்கறை வைத்திருக்கிறாரா!” என்று சொல்லவும், துõக்கம் வந்து விட்டது. அயர்ந்து உறங்கி விட்டாள். எல்லாம் முடிந்து, லட்சுமணன் அரண்மனை வருகிறான். முதலில் சீதா தான் சொல்கிறாள், “லட்சுமணா, முதலில் ஊர்மிளாவைப் போய்ப் பார்,” என்று. அவளை அரண்மனை அந்தப்புரம் தேடிச் சென்று மெல்ல எழுப்புகிறான், அவள் பயந்து போகிறாள், யார் தன்னை எழுப்புவது என்று, பின்பு வந்திருப்பது கணவன் என்பதை அறிந்து, மகிழ்ச்சி கொள்கிறாள், அப்போது லட்சுமணன் கூறினான்,“ஊர்மிளா, மன்னித்து விடு, நான் இது வரை துõங்கவே இல்லை, இந்த பதினான்கு ஆண்டுகளும், விழித்தே இருந்தேன், எனவே நானும் துõங்க வேண்டும்,”என்று கூறி நித்ரா தேவியை அழைக்க, அவளும் லட்சுமணனுக்கு துõக்கத்தைக் கொடுக்கிறாள். கணவனின் நல்ல திட்டங்களைச் செயல்படுத்த மனைவியின் ஒத்துழைப்பும் தியாகமும் அவசியம். ஊர்மிளாவைப் போல எல்லாப் பெண்களும் தங்கள் குடும்ப நலன் கருதி தியாகம் செய்வார்களா! |
|
|
|