|
பகவான் கிருஷ்ணர் தியானத்துக்குரிய ஸாதனங்களையும், தியானத்தின் பலனையும் அர்ஜுனனுக்கு உபதேசித்தார். அர்ஜுனன் தன்னுடைய உள்ளக்கிடக்கையை இவ்வாறு வெளிப்படுத்தினான். ஹே... கிருஷ்ணா! மனமானது, மிகுந்த சஞ்சலம் மிக்கதாக இருக்கின்றதன்றோ! உடலையும் இந்த்ரியங்களையும் கூட கடைந்து உருக்குலையச் செய்வதும், மிகுந்த வலிமை படைத்ததும், பிடிவாதம் மிக்கதுமான இந்த மனதை அடக்குவது என்பது, காற்றை அடக்குவதைப்போல் கடினமானது என்று நான் கருதுகிறேன். இவ்வாறு அர்ஜுனன் கூறியவுடன், பகவான், அவனுக்கு பதில் கூறுகிறார்.
பகவாநுவாச அஸம்ஸயம் மஹாபாஹோ மநோதுர்நிக்ரஹம் சலம் அப்யாஸேந து கௌந்தேய வைராக்யேண ச க்ருஹ்யதே பெருந்தோளுடையாய்! அலைபாய்ந்து கொண்டிருக்கும் தன்மையுடைய மனம் அடக்குதற்கரியது என்பதில் யாதொரு ஐயமுமில்லை. குந்தியின் புதல்வனே! பகுத்தறிவோடு கூடிய பயிற்சியினாலும், பற்றற்ற தன்மையினாலும் மனதை நெறிப்படுத்த இயலும். பகவான், அர்ஜுனன் கூறும் பிரச்னையை முதலில் ஏற்றுக்கொள்கிறார். புறநோக்குடைய மனதின் அலைபாயும் தன்மை அர்ஜுனனுடைய பிரச்னை மட்டுமல்ல, உலகில் உள்ள அத்தனை மனிதர்களின் நிலையும் இதுதான். மனதை அடக்குவது, நெறிப்படுத்துவது என்பது மிகக்கடினம். ஆனால், இயலாத காரியமல்ல. இரண்டுக்கும் இடையே உள்ள வேற்றுமையைப் புரிந்து கொள்ள வேண்டும்.
பகவான் அர்ஜுனனை, பெருந்தோளுடையாய் என்று அழைக்கிறார். அர்ஜுனன் புறத்தில் உள்ள பகைவர்களை அழிப்பதில் வல்லவன். ஆனால் அகத்தில் உள்ள பகைவர்களை எப்படிக் கையாளுவது என்று தெரியவில்லை. மனதை நெறிப்படுத்தி, செம்மைப்படுத்துவது என்பது அத்தனை எளிய காரியமல்ல. ஆனால், அது முடியாத ஒன்றுமல்ல. மனதை நெறிப்படுத்துவதற்கு பகவான் இரண்டு வழிமுறைகளைக் கூறியருளுகிறார். அப்யாஸம், வைராக்யம் இவ்விரண்டும் பதஞ்ஜலி யோக ஸூத்திரத்திலும் கூறப்பட்டுள்ளன. அப்யாஸம் -பகுத்தறிவுடன் கூடிய முயற்சி:
நம் எல்லோருக்கும் வாழ்வில் பிடித்த விஷயங்கள் இருக்கின்றன. அவற்றில் நம்மை அறியாமலேயே மனம் ஆழ்ந்துவிடுவதை நாம் அனைவரும் உணர்கிறோம். மனதுக்கு நல்ல பழக்கங்களைக் கொடுப்பதே முதல் படி. ஒரு தீய பழக்கத்திலிருந்து விடுபட வேண்டுமானால், அதற்கு மாறான நல்ல பழக்கத்தைக் கடைப்பிடிக்க முயல வேண்டும். ஸத்ஸங்கம் எனப்படும் நல்லாரிணக்கத்தை நாடுதல் மிக முக்கியம். ஒரு விஷயத்தின் மேன்மையைப் புரிந்து கொள்ள வேண்டுமானால், இடையறாது அதன் மதிப்பைக் குறித்து மனதில் சிந்தித்துக்கொண்டே இருக்க வேண்டும். ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்கு நாம் அளிக்கும் மதிப்பே, நம்மை அதன்கண் கொண்டு செல்கிறது. பற்று என்பது மனப்பழக்கம். உலகில் பற்று வைப்பதால், மேலும் மேலும் துன்பமே அதிகரிக்கிறது. உலகப் பொருட்கள், மனிதர்கள், சூழ்நிலைகள் அனைத்தும் நிலையற்றவை என்பதை உணர்ந்து, உலகப் பற்றை நீக்க வேண்டும். அதற்கு அறத்தைக் கடைப்பிடித்து ஆண்டவனைச் சார்ந்திருக்க வேண்டும்.
பிறகு, மெய்யறிவைப் பெற்று, தன்னுடைய உண்மை இயல்பை உணர்ந்து, எதையும் சாராத தன்மையில் நிலைத்திருக்க இயலும். நிலையற்ற பொய்ப்பொருட்களை விடுத்து, நிலையான மெய்ப் பொருளை நாடுதலாகிய பயிற்சியை இடையறாது மேற்கொள்ள வேண்டும்.
வைராக்கியம் - பற்றற்ற தன்மை: நிலையற்றவை என்று பகுத்தறிந்தவற்றில் உள்ள பற்றை நீக்கி விடுதலே வைராக்யம். உலகப் பொருட்களின் நிலையற்ற தன்மையை மீண்டும் மீண்டும் எண்ணிப் பார்க்க வேண்டும். நிலையற்ற தன்மையை நன்குணர்ந்தாலே பற்றானது படிப்படியாகக் குறையத்தொடங்கும். பற்றற்ற கண்ணே பிறப்பறுக்கும் என்றார் திருவள்ளுவர். பற்றினை நீக்கிக் கொள்ள பற்றற்றான் பற்றினைப் பற்ற வேண்டும் என்று உணர்த்தியருளினார். அப்யாஸம், வைராக்யம் ஆகிய இரண்டினாலும் மனதை நெறிப்படுத்த இயலும் என்று பகவான் கூறிய கருத்துக்கள் ஆழ்ந்து சிந்தித்துக் கடைப்பிடிக்கத் தக்கவையாகும்.
|
|
|
|