|
பால் நினைந்தூட்டும் தாயினும் சாலப்பரிந்து என்பது அமுத வாக்கல்லவா! நாம் அனைவரும் இறைவனுக்குக் குழந்தைகள்தாம். அவனிடம் அழுது கேட்பதில் தவறேதும் இல்லை. பக்தி ஒன்றுதான் இறைவனை அடையும் மார்க்கம். எதை எப்பொழுது எங்கே கொடுக்க வேண்டும் என்பது அவனுக்குத் தெரியும். இறைவனிடம் கேட்டுப் பெற்றவர் தேவாரப் பாடல்களை இயற்றிய மூவருள் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயனார். இவர் இறைவனுடைய தோழர். அதனால், தம்பிரான் தோழன் என்று பெயர் பெற்றார். அந்த உரிமையில் இறைவனிடம் பொன், பொருள் கேட்டுப் பெறுவார். அத்தனை நாயன்மார்களுக்கும் அடியேன் என்று தன்னைப் பிணைத்துக் கொண்டவர் இவர். சிவனடியார்களுக்கு அன்னம், ஆடை, கமண்டலம் என்று அளிக்கு இவருக்குப் பொருள் தேவைப்பட்டது. அதிலும் சிவராத்திரி, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்களுக்கு அன்னதானம் செய்வது அவர் வழக்கம். அதற்குத் தேவையான பொருளை யாரிடம் கேட்டுப் பெறுவது?
பரவையார் நாச்சியார், சுவாமி, நாம் இருப்பது திருவாரூர். அருகில் உள்ளார் திருப்புகலூர் ஈசன். அவரிடமே பொன், பொருள் கேட்டுப் பாருங்களேன் என்றார். புறப்பட்டு விட்டார் சுந்தரர் திருப்புகலூருக்கு. தம்மையே புகழ்ந்து என்ற பதிகம் பாடினார். கொடுக்காதவனை பாரி என்றேன். அவன் கொடுக்கவில்லை. தோள் தளர்ந்தவனை வீரன் என்றேன். கல்லாதவனைக் கற்றவன் என்றேன். கருமியை வள்ளல் என்றேன். வீரமே இல்லாதனை வில்லுக்கே விஜயன் என்றேன். யாரும் கொடுக்கவில்லை. நீயும் கொடுக்காவிட்டால் போ என்று கோபம் கொண்ட மனத்தினராக செங்கற்களைத் தலைக்கு வைத்துக் கொண்டு படுத்து விட்டார். என்ன ஆச்சர்யம்! மறுநாள் காலை அத்தனையும் பொன் செங்கற்களாகப் பளபளத்தன. திருப்புகலூராரே, என்னால் எப்படி திருவாரூர் வரை இதை தூக்கிச் செல்ல முடியும்? என்று இறைவனிடமே கேட்டார். இங்கு நதியில் போட்டு திருவாரூர் கமலாலயத்தில் எடுத்துக்கொள் என்றார் ஈசன்.
அதன்படியே செய்தார். ஆனால், கமலாலயத்தில் பாசி படிந்த பொன் கற்கள் கிடைத்தன. ஆரூர் ஈசனிடம் முறையிட்டார் ஆரூரன். ஆரூர் இறைவன் கடைத்தெருவில் இருக்கும் சிவாச்சாரியார் கடையில் கொடுத்து மாற்று வைத்துக் கொள்ளச் சொன்னார். அங்கு கடையில் இருந்த சிறுவன் மாற்று வைத்து நல்ல பொன்னாக்கிக் கொடுத்தார். அச்சிறுவன்தான் கமலாலயத்து வடகரையில் மாற்றுவைத்த பிள்ளையாராக அமர்ந்து அருள்பாலிக்கிறார். கேட்காமலேயே இறைவனிடம் பெற்றவர் குசேலர். புராணப்படி இவருக்கு இருபத்தேழு குழந்தைகள் வீட்டிலோ சதா ஏகாதசி விரதம்தான். அவர் மனைவி சுசீலையோ, எதையும் புலம்பவே மாட்டாள். வறுமை தாங்காத ஒரு சமயம் சுசீலை இதமாகக் கணவனிடம் கேட்கிறாள், உங்கள் நண்பர் தானே கண்ணபிரான். அவரிடம் போய் ஏதேனும் உதவி பெற்று வரலாமே? என்று. சரி என்று புறப்படுகிறார் குசேலர். வெறும் கையுடன் போகக்கூடாது என்று சுசீலை அவரது மேற்துண்டின் ஓரத்தில் கொஞ்சம் அவலை கட்டித் தருகிறாள்.
குசேலர் வந்திருக்கிறார் என்பதைக் கேட்ட கண்ணன், மாளிகை வாயிலுக்கே வந்து அவரை அழைத்துப் போகிறார். கண்ணனின் நட்பு அணைப்பில் கட்டுண்டு போகிறார் குசேலர். அவரை சரியாஸனத்தில் அமர்த்தி மனைவியர்களுடன் அதிதி பூஜை செய்கிறான் கண்ணன். அறுசுவை உணவு கொடுக்கிறான். குசேலருக்கோ தம் குழந்தைகள் பட்டினி கிடக்க, தான் மட்டும் உண்பதா என்ற ஏக்கம். கண்ணனோ, குசேலருடன் குருகுல வாழ்க்கை பற்றியெல்லாம் குளிரக் குளிரப் பேசுகிறான். குசேலரோ, தம் வறுமை பற்றிச் சொல்லாமல் வந்தேன். பார்த்து விட்டேன். புறப்படுகிறேன் கண்ணா என்றார். கிளம்பும் சமயம் கண்ணன், அண்ணி எனக்கொன்றும் கொடுத்து விடவில்லையா? என்று கேட்கிறான். ஐயோ மறந்து விட்டேன் என்றவர் முடிச்சை அவிழ்த்து அவலைத் தர, கண்ணன் அள்ளி அள்ளி அதை ருசிக்கிறார். குசேலர், எதையும் கேட்டுப் பெறாமலேயே வந்து விட்டோமே, சுசீலை என்ன சொல்லுவாளோ என்ற படபடப்புடன் நடந்தார். ஆனால், அவரது இடிந்த வீடு மாளிகையாக, செல்வத்தில் மனைவி, மக்கள் புரளுவதைக் கண்டு புரிந்து கொண்டார். கண்ணனின் அருட்திறத்தை. ஒருவரின் மனநிலையை புரிந்து கொண்டு கேட்காமலேயே அள்ளிக் கொடுப்பவன் பரந்தாமன். இறைவன் கொடுக்கிறான். எதை வேண்டுமானாலும் கேட்கலாம். நம்மைக் கேட்காமலேயே பூமியில் பிறக்க வைத்த இறைவனுக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது தெரியும். நாம் யாசகன் என்பதால் மாணிக்கவாசகர், வேண்டத்தக்கது அறிவோய் நீ; வேண்ட முழுதும் தருவோய் நீ என்கிறார். இந்த உண்மை தெரிந்தாலும், அப்பா என் வேண்டுதல் கேட்டு அருள் புரிதல் வேண்டும். ஆரூயிர்க்கட்கெல்லாம் அன்பு செய்ய வேண்டும் என்று உயிர்கள் வாழ, உலகம் வாழ இறைவனை யாசிப்போம் வள்ளலார் போல். |
|
|
|