|
வெற்றி வீரனாகத் திகழ்ந்த மன்னன் ஒருவனுக்கு ஆட்சியையும், அரண்மனையையும், சுகபோகங்களையும் விட்டுவிட்டு, மற்றவர்களைப் போல் தானும் ஒருநாள் மாளவேண்டுமே என்று கவலை ஏற்பட்டது. இறவாதிருக்க வரம் பெற என்ன வழி? என தன் குலகுருவிடம் கேட்டான். ஒரு குகைக்குள் அமிர்த நீர் வருகிறது. அதை உண்டால் அமரராகலாம். ஆனால் ஏதோ காரணத்தால் அமரனாக ஆசைப்பட்டு சென்றவர்கள் மனம் மாறி திரும்பி வந்து விடுகிறார்கள். நீங்கள் அங்கு சென்று பாருங்கள்! என குரு வழிகாட்ட, மன்னன் அந்த குகையைத் தேடிச் சென்றான். நீண்ட தொலைவு சென்றவுடன் குரு சொன்ன குகையைக் கண்டான். அமிர்த நீரைப் பருக கையில் எடுத்தான். அப்போது ஒரு குரல் கம்பீரமாக மன்னவரே, ஜாக்கிரதை! என்றது. திரும்பிப் பார்த்தால் அங்கு ஒரு காகம், மன்னவா! நான் ஒன்று சொல்கிறேன். அதைக் கேட்ட பிறகு நீ இதைப் பருகு! நானும் தங்களைப் போல் ஒரு அரசனாகத்தான் இருந்தேன். எனக்கும் உங்களைப் போல் அமரத்துவம் பெறவேண்டும் என்று ஆசை. இந்த நீரைத் தேடி வந்து பருகினேன். அதன் பின் நான் அனுபவிக்காத இன்பம், செல்வம், புகழ் எதுவுமே இல்லை.
நான் எந்த உருவம் வேண்டுமென்றாலும் எடுக்கலாம். எங்கு வேண்டுமாயினும் செல்லலாம். ஆனால் எனக்கு ஒரு பெரிய துயரம் என்றது சோகமாக. அதையும் சொல்லேன்! என்றான் அரசன் சற்று அலட்சியமாக. மன்னா! எனது உற்றார், உறவினர், என் நண்பர்கள் அனைவரும் என் கண் முன்னேயே இறந்தார்கள். நான் ஆண்ட பல ராஜ்யங்களும் காலப்போக்கில் அழிந்து போயின. எல்லாம் சுகங்கள்தான். ஆயினும் எனக்கு திகட்டிவிட்டது. நிலைத்த உறவு எதுவுமின்றி தனிமையில் தவிக்கிறேன். போதும் போதும் என்று பலமுறை நினைத்தும் என்னால் சுமப்பது போலிருக்கிறது. இந்த அவலம் உங்களுக்கு வேண்டுமா? ஆழ்ந்த குரலில் கேட்டது காகம். காகம் சொன்னதைக் கேட்ட மன்னன், உரிய நேரத்தில் உயிர் போவதும் வரமே என உணர்ந்து அரண்மனை திரும்பினான். |
|
|
|