|
கால யவ்வனன் பிறக்க காரணமே ஒரு சாபம் தான்! இவனைக் குறித்த கதை விஷ்ணு புராணத்தில் உள்ளது. யதுகுலத்தின் குருவாக போற்றப்பட்டவர் கர்கமுனிவர். இவர் ஒருமுறை ஆற்றில் குளித்து விட்டு வரும் சமயம் இவரது தலையில் பறவை ஒன்று எச்சமிட்டது. அந்த எச்சம் ஒழுகி நெற்றியில் திலகம் போல காட்சியளித்தது. தன்னை மறந்த நிலையில் இறை சிந்தனையில் வந்த முனிவருக்கு, இதைப் பற்றிய உணர்வே இல்லை. முனிவரின் மைத்துனன், “என்ன இது எச்சில் திலகம்?” என்று கேட்டு சிரித்தான். பிறகு தன் நிலையை உணர்ந்த கர்கர், கையால் எச்சத்தை துடைக்க முற்பட, அது முகம் முழுவதும் பரவியது. அப்போது அருகில் இருந்த யதுகுல மன்னர்கள் முனிவரைப் பார்த்துக் கைகொட்டிச் சிரித்தனர். இதைக் கண்ட முனிவருக்கு கோபம் தலைக்கேறியது. முனிவர்களுக்கு கோபம் சுலபமாக வராது. வந்தால் அதன் விளைவு கடுமையானதாக இருக்கும். “யாதவ மன்னர்களே! நான் உங்களின் குலகுரு என்பதையும் மறந்து என்னை பரிகாசம் செய்து விட்டீர்கள். இதை என் வாழ்நாளில் மறக்கவே முடியாது. மன்னர் என்ற மமதையே நீங்கள் பரிகாசம் செய்ய காரணம். அதிகாரமும், ஆட்சியும் உங்களின் கையில் இருக்கும் திமிர். இப்போது சொல்கிறேன்...! உங்களை பூண்டோடு அழிக்க ஒருவன் வருவான்.
அதுவும் என் மூலமாகவே..... எனக்கு நேர்ந்த அவமானத்தை துடைப்பான்....இது சத்தியம்,”என்று சாபமிட்டார். பின், அவர் ஒரு யவ்வனப் பெண்ணை சந்திக்க நேர்ந்தது. அவள் அவரை மணந்து கர்ப்பமானாள். பின் முனிவர் சிவனை நோக்கி தவத்தில் ஆழ்ந்தார். சிவன் காட்சியளிக்கும் சமயம், முனிவரின் மனைவி பிரசவிக்க தயாராக இருந்தாள். சிவன் என்ன வரம் வேண்டும் என்று கேட்க, தனக்கு பிறக்கப் போகும் பிள்ளை மாவீரனாக உலகத்தவர் கண்டு அஞ்சும் பலசாலியாக திகழ வேண்டும் என்று கேட்டார். சிவனும் அவ்வாறே வரம் அளித்தார். அவனே காலயவ்வனன். முனிவர் மகனிடம்,“ யாதவ மன்னர்களை அழிக்கப் பிறந்தவன் நீ,” என்று சொல்லி வளர்த்தார். பிறரைப் பரிகாசம் செய்வது கடும் பின் விளைவைத் தந்து விடும். அன்று கர்க முனிவரிடம் மன்னிப்பு கேட்டிருந்தால் கூட பரவாயில்லை. சாப விமோசனம் ஒன்றை கர்கர் சிந்தித்திருப்பார். ஆனால், அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. “நீங்கள் நின்ற கோலத்தை யார் பார்த்தாலும் சிரிக்கத்தான் செய்வர்,” என்று நியாயம் வேறு கற்பித்தனர். இதைத் தான் விநாசகாலே விபரீத புத்தி’ (கெட்ட நேரம் வரும் போது புத்தி பேதலிக்கும்) என்பர். காலயவ்வனன் தன் தந்தை கர்க முனிவரின் விருப்பப்படி, யாதவர்களை ஒட்டு மொத்தமாக அழிக்க தருணம் பார்த்துக் கொண்டிருந்தான். ஒருநாள் நாரதர் அவனைச் சந்திக்க வந்தார். அவரிடம் காலயவ்வனன்,“யாதவர்களில் மேலான அரசன் யார்?” என்று கேட்டான்.
“எவ்வளவோ பேர்கள் உண்டு. இப்போது யார் என்றால் அது கிருஷ்ணர், பலராமர் இருவரும் தான்,” என்றார் நாரதர். “அவர்கள் என்னையும் விட பெரிய பலசாலிகளா?” “அது எனக்கு தெரியாது. ஆனால் மகாபலசாலியான ஜராசந்தனால் கூட இவர்களை வெல்ல முடியவில்லை என்றால் பார்த்துக் கொள்ளேன்,” என்றார் நாரதர். “அப்படியானால் ஜராசந்தன் என்னைவிட பலசாலியா?” “இப்படி கேட்டால் எப்படி?” நீ போரிட்டு வெற்றி கொண்டால் அல்லவா அதை முடிவு செய்ய முடியும்!” “அதுவும் சரி தான்....நான் இந்த கிருஷ்ணர், பலராமர் இருவரையும் அழிக்கிறேன். இவர்கள் யதுகுலத்தவர் தானே?” “ஆம்... கிருஷ்ண, பலராமர் இருவருக்கும் தங்களை விட தங்களின் இனம் பெரிது. குறிப்பாக தங்களின் செல்வமாக கருதும் பசுக்களும், காளைகளும் பெரிது” “அப்படியானால் இவர்களை அழித்தால் யதுகுலத்தையே அழித்தது போல் தான் அல்லவா?” “அப்படித்தான்.... ஆனால் அது சுலபமான விஷயமில்லை” “எதனால்?” “கிருஷ்ணர், பலராமர் இருவரும் அவதார புருஷர்கள். அதிலும் கிருஷ்ண பிரபு 32 சாமுத்ரிகா லட்சணங்களும் உடையவர்.
பாலகனாக இருந்தபோதே அசுர சக்திகளை அழித்தவர். குறிப்பாக கம்சனை அவர் கொன்றது வீரத்தின் உச்சம்.” “என்னால் கிருஷ்ணனை வெல்ல முடியாது என்று கூறுகிறீரா நாரதரே...” “அப்படித் தான் தோன்றுகிறது...” “ என் வரம் பற்றி உமக்குத் தெரியும் அல்லவா?” “ஆமாம்... ஒருவேளை முடிந்தாலும் முடியலாம்” “ஒருவேளை என்ன ஒருவேளை... இருவர் கதையையும் முடித்து விட்டு மறுவேலை பார்க்கிறேன்.” “அப்படி அவர்கள் உனக்கு என்ன கெடுதல் செய்தனர்?” “எனக்கு செய்தால் என்ன? என் தந்தைக்குச் செய்தால் என்ன?” “அதுவும் சரி தான். ஆனாலும் யாரோ சிலர் பரிகாசம் செய்ததற்காக, அவர்களின் குலத்தையே அழிக்க நினைப்பது சரிதானா?” “அதற்காகவே நான் பிறந்திருக்கிறேன். இதில் சரி, தவறு என்று சிந்திப்பதெல்லாம் அறிவீனம்” “அப்படியானால் போர் செய்வதே சரியானது...” என்று நாரதர் ஒதுங்கிக் கொண்டார். உடனடியாக கிருஷ்ணரை சந்தித்த அவர், காலயவ்வனன் படையெடுத்து வரவிருப்பதைத் தெரிவித்தார். அந்த நேரத்தில் ஜராசந்தனும், படை திரட்டிக் கொண்டு போருக்கு வந்தான். ஜராசந்தன் கெட்டிக்காரன்! காலயவ்வனன் மூன்று கோடி வீரர்களுடன் மதுராவிலுள்ள கிருஷ்ண, பலராமரை அழிக்க தயாராகி விட்டதை அறிந்து கொண்டான்.
அந்தப் படையுடன், தன் படையும் சேர்ந்தால், அது பெரிய படையாகி விடும். கிருஷ்ணன் தோற்பதும் உறுதி என்று மனதிற்குள் கணக்கு போட்டான். இதற்கு முன் பதினேழு முறை கிருஷ்ணனிடம் தோற்றாலும், இந்த முறை வென்றாக வேண்டும் என்ற வெறி அவனுக்குள் இருந்தது. இந்நிலையில் யாதவர்களை பாதுகாக்கும் நோக்கத்தில் கிருஷ்ணர், துவாரகையில் ஒரு கோட்டையை மயன் மூலம் கட்டினார். மதுரா நகர யாதவர்கள் அனைவரையும் கோட்டையில் பாதுகாப்பாக தங்க வைத்து விட்டு, ஜராசந்தனையும், காலயவ்வனனையும் காணப் புறப்பட்டார் கிருஷ்ணர். இவர்கள் இருவருக்கும் கிருஷ்ணரால் எந்த பாதிப்பும் உண்டானதில்லை. போர் என்ற பெயரில் வம்புச் சண்டைக்கு வருகிறார்கள். எனவே, இவர்களை யுத்த தர்மத்தின் படி சந்திக்க தேவையில்லை. தந்திரங்களால் வெல்வதே சரி என்ற முடிவுக்கு வந்தார் கிருஷ்ணர்.
|
|
|
|