|
மதுரையை ஆட்சி செய்த குலபூஷண பாண்டியன் தற்பெருமை மிக்கவனாக இருந்தான். தான் மட்டுமே புத்திசாலி என்று கருதி, அந்தணர்களையும், சான்றோர்களையும் அவமதித்தான். எனவே அவர்கள் மன்னரைப் புறக்கணித்தனர். நல்லவர்களை மதிக்காத நாட்டில் மழைவளம் இருக்காது. பாண்டியநாட்டில் பஞ்சம் ஏற்பட்டதால், மக்கள் பிழைப்பு தேடி மற்ற நாடுகளுக்குச் சென்றனர். செய்வதறியாத மன்னன், மதுரை சுந்தரேஸ்வரரை வழிபாடு செய்தான். மன்னனின் கனவில் தோன்றிய சிவன், “குலபூஷணா! வேதம் ஓதும் அந்தணர்களையும், சான்றோர்களையும் அவமதித்த பாவத்தால் உன் நாட்டில் மழைவளம் குன்றியது. உன் தவறைத் திருத்திக் கொண்டால் மீண்டும் நாடு வளம் பெறும். இருப்பினும் மக்களின் துன்பம் தீர பொற்கிழி ஒன்றைத் தருகிறேன். அதில் தங்கக்காசுகள், அள்ள அள்ளக் குறையாமல் வந்து கொண்டேயிருக்கும்” என்றார். திடுக்கிட்டு விழித்த மன்னனின் எதிரில், ஒரு பொற்கிழி இருந்தது. சிவனருளை எண்ணி வியந்த மன்னன், அரியணையில் பொற்கிழியை வைத்து வழிபட்டான். அதிலிருந்த காசுகளை அந்தணர்களுக்கும், ஏழைகளுக்கும் தானம் அளித்தான். மன்னரின் மனமாற்றம் கண்ட அனைவரும் மகிழ்ந்தனர். நாட்டில் மழையும் பொழியத் தொடங்கியது. |
|
|
|