|
தர்மமிகு சென்னை’ என்று வள்ளலார் சுவாமிகள் பாடிச் சிறப்பித்த சென்னை, திருவொற்றியூரில் வடிவுடையம்மன் சமேத ஆதிபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. தேவார மூவரால் பாடல் பெற்ற இந்தத் திருத்தலம், நினைத்தாலே முக்தி தரக்கூடியது. ஒருமுறை வெள்ளத்தால் உலகம் அழிந்த போது, அந்த நீரை ஒற்றி எடுத்து, படைப்புத்தொழில் தடையின்றி நடக்க, நான்முகனான பிரம்மாவுக்கு சிவபெருமான் உதவிய தலம் இது. எனவே, ஒற்றியூர் என வழங்கப்பட்டு, திருவொற்றியூர்’ ஆகியுள்ளது. இங்குள்ள ஒற்றீசர் தான் ஆதி. இவர் ஆதிபுரீஸ்வரர் என வழங்கப்படுகிறார். ஒரு கவசத்தால் மூடப்பட்டிருக்கும் ஆதிபுரீஸ்வரர் திருமேனி (விக்ரகம்), புற்று மண்ணால் ஆனது. லிங்க வடிவம் கொண்டது. இங்கு தியாகராஜர் சன்னிதி இருப்பது சிறப்பு. இங்கு அருளும் அம்பாளை வடிவுடையம்மன் என்று சொல்வர். பெயருக்கேற்றாற் போல் அதி அற்புத அழகுடன், திருக்காட்சி தருகிறாள். இந்த அன்னையைப் போற்றி சங்கீத மேதைகள் திருவையாறு தியாகராஜரும், முத்துசுவாமி தீட்சிதரும் கீர்த்தனைகள் இயற்றி இருக்கின்றனர். வடலுõர் வள்ளலாரான ராமலிங்க அடிகளார், ஸ்ரீவடிவுடை மாணிக்க மாலை’ என்ற பெயரில், 101 பாடல்கள இயற்றி அன்னையின் பெருமையைப் போற்றி இருக்கிறார்.
வடிவுடையம்மனின் பரிபூரணமான அருளைப் பெற்ற இவர் சிறுவனாக இருந்த காலத்தில், திருவொற்றியூரில் தங்கியிருந்தார். தினமும் கோவிலுக்குச் சென்று வடிவுடையம்மனைத் தரிசிப்பார். ஒரு நாள் அன்னையின் தோற்றத்தில் லயித்து, பக்தியில் பூரித்து, வெகு நேரம் அவளது சன்னிதியிலேயே இருந்து விட்டார். இரவு நெருங்கியதையும் வள்ளலார் கவனிக்கவில்லை. திடீரென்று சுய நினைவுக்கு வந்தவர், நடை சாத்தப்படும் நேரம் நெருங்கிக் கொண்டிருப்பதை உணர்ந்தார். கோவிலில் இருந்து விறுவிறுவென்று கிளம்பி, தன் இல்லம் வந்தார். அன்று இரவு சாப்பிடாததால் வள்ளலாருக்குக் கடும் பசி. உரிய நேரத்தில் வீட்டுக்கு வந்திருந்தால், அண்ணியார் அன்புடன் உணவு தந்திருப்பார். நேரம் ஆகி விட்டதால், இனி வீட்டுக் கதவைத் தட்ட முடியுமா... அண்ணியாரைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று தீர்மானித்து, திண்ணையிலேயே படுத்து விட்டார். திடீரென்று யாரோ தன்னைத் தட்டி எழுப்புவது போல் உணர்ந்தவர், துõக்கக் கலக்கத்தில் எழுந்து உட்கார்ந்தார். எதிரில் ஒரு தட்டில் உணவோடு அண்ணியார் புன்னகைத்த முகத்துடன் நின்றிருந்தார். உணவின் மணம் வள்ளலாரின் பசியைத் துõண்டியது. ஒரு இலையை விரித்தவர், அதில் உணவை இட்டு, சாப்பிடு... பசியோடு படுத்திருக்கிறாயே...’’ என்றார் கரிசனத்துடன்.திருப்தியாக சாப்பிட்டு முடித்த வள்ளலார், மீண்டும் திண்ணையிலேயே படுத்து உறக்கத்தைத் தொடர்ந்தார்.
சிறிது நேரம் கழிந்திருக்கும்... யாரோ தன்னை மீண்டும் எழுப்ப... கண் விழித்தார் வள்ளலார். எதிரே அண்ணியார். ஏனப்பா... இரவில் தாமதமாக வந்தாயா? கதவைத் தட்டி என்னை எழுப்பி இருக்கலாமே... இரவில் வெறும் வயிற்றுடன் படுத்திருக்கக் கூடாது. உள்ளே வா... சாப்பிட்டு விட்டு பின் துõங்கு’’ என்று கண்டிப்புடன் சொல்ல... குழம்பினார் வள்ளலார். அப்படியென்றால், சற்று முன் வந்து என்ன எழுப்பி உணவிட்டது யார்?’’ யோசித்தபோது, அன்னை வடிவுடையம்மனின் திருமுகம், அவர் மனக்கண் முன் வந்து விட்டுப் போனது. அப்போதுதான் புரிந்தது, பசித்திருக்கும் தனக்கு உணவிட்டது, சாட்சாத் வடிவுடையம்மனே என்று! அன்னை தந்த உணவே வள்ளலாருக்கு ஞானத்தையும், மொழிப் புலமையையும் தந்தது. திருவொற்றியூர் கோவிலின் கிழக்குச் சுற்றின் வெளிப்பிரகாரத்தில் வடிவுடையம்மனின் சன்னிதி அமைந்துள்ளது. கருவறையில் காணப்படும் சர விளக்குகளின் ஒளியில் அன்னையின் திருமுகம் புன்னகையோடு பிரகாசிக்கிறது. தென் திசை நோக்கி நின்ற திருக்கோலம். நான்கு திருக்கரங்கள். பின்னிரு கரங்களில் மலர்கள் ஏந்தியிருக்கிறாள்.
முன்னிரு கரங்களில் இடதுகரம் திருப்பாதங்களை நோக்கி உள்ளது. வலதுகரம் இந்தப் பாதங்களில் சரணடை... காப்பாற்றுகிறேன்,’’ என்று அபயம் அளிக்கிறது. திருவொற்றியூர் கோவிலில் மூன்று கொடிமரங்கள். ஒன்று சிவனுக்கு... மற்ற இரண்டு வடிவுடையம்மனுக்கும், வட்டப்பாறை அம்மனுக்கும்! கல்வியையும், ஞானத்தையும் வழங்கும் தேவியாகத் திகழ்கின்றாள் வடிவுடையம்மன். சொல்லாட்சி, தேர்ந்த அறிவு, கலைகளில் தேர்ச்சி போன்றவற்றை வழங்குகிறவள் இவளே. பக்தர்களின் மனதில் பரிபூரணமான ஓர் இடத்தைப் பிடித்து, அங்கேயே நிரந்தரமாகக் குடிகொண்டிருக்கிறாள். சென்னை மாநகரை பாதுகாக்கக் கூடிய ஒப்பற்ற தேவியருள் இவளும் ஒருத்தி. நிறைந்த சக்தி கொண்டவள். நெய் தீபம் ஏற்றி, குங்கும அர்ச்சனை செய்து வடிவுடையம்மனை வழிபடுகின்றனர். வெள்ளிக்கிழமைகளிலும், பவுர்ணமியன்றும் இவளது சன்னிதியில் ஏராளமான பக்தர்கள் கூடுவர். திருவொற்றியூர் வடிவுடையம்மனோடு மேலுõர் திருவுடையம்மனையும் (இச்சா சக்தி), ஆவடி அருகேயுள்ள திருமுல்லைவாயிலில் அருள்புரியும் கொடியிடையம்மனையும் (கிரியா சக்தி) ஒரே நாளில் வழிபடுவது மிகுந்த புண்ணியம் தரும். இந்தக் கோவிலுக்கு ஏராளமான சிறப்புகள் இருக்கின்றன. சங்கிலி நாச்சியார் என்பவரை விரும்பிய சுந்தரமூர்த்தி சுவாமிகளின் காதலுக்காக துõது போன சிவன் இங்குள்ளவரே. இங்குள்ள மகிழ மரத்தடியில்தான், இருவருக்கும் திருமணத்தை நடத்தி வைத்தார். கண்ணகி, இங்கு வட்டப்பாறை அம்மன் என்ற பெயரில் சன்னிதி கொண்டிருக்கிறாள். வரங்களை அருளும் அற்புத தேவியான இவள், கவிச்சக்கரவர்த்தி கம்பருக்கு அருள் புரிந்தவள். பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளும், ஒரே வடிவமாக அருளும் ஏகபாத மூர்த்தியை இங்கே தரிசிக்கலாம். ஆதிசங்கரரின் ஸ்ரீசக்ர பிரதிஷ்டை இங்கே உண்டு. 27 நட்சத்திரங்களுக்கு, லிங்க வடிவில் அமைந்துள்ள சன்னிதி இங்கு இருப்பது கூடுதல் விசேஷம். |
|
|
|