|
இந்தியாவின் தெற்கு எல்லையாக விளங்குவது கன்னியாகுமரி. கிழக்கே வங்காள விரிகுடா, மேற்கே அரபிக்கடல், தெற்கே இந்தியப் பெருங்கடல் என்று மூன்று கடல் சங்கமிக்கிற இடம். அதிகாலையில் சூரிய உதயத்தையும், மாலையில் அஸ்தமனத்தையும் கண்டு ரசிப்பதற்கு ஏராளமானவர்கள் கூடுவர். இந்தக் கடற்கரை ஓரத்தில் தவக்கோலத்தில் அருள்பாலித்து வருகிறாள் குமரி அம்மன். பகவதி அம்மன், துர்கா தேவி என்றெல்லாம் அழைக்கப்படும் இவள் குடிகொண்டிருக்கிற ஆலயம், குறுகிய சந்நிதியைக் கொண்டது. மூன்று பிரகாரங்கள். பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் பரசுராமர் இந்த ஆலயத்தை பிரதிஷ்டை செய்தார். சங்க இலக்கியங்களும், புராணங்களும் கன்னியாகுமரியின் தொன்மையைப் பற்றி விரிவாகச் சொல்கின்றன. சீதையைத் தேடி ராமபிரான் இலங்கை செல்ல வழித்தடத்தை ஆராய்ந்து கொண்டே வந்தார். கன்னியாகுமரிக்கு வந்தவர், இங்கிருந்து இலங்கை செல்ல பாலம் அமைக்கலாம் என்று முதலில் கடலில் நீராடி, பகவதி அம்மனை வணங்கினார். பிறகு, வானர சேனைகளைக் கொண்டு பாலம் அமைக்க முற்பட்டார். ஆனால், பாலம் சரிவர அமையவில்லை.
அதன் பின் அம்மனின் உத்தரவுப்படி பாலம் அங்கே அமையாது என்பதை உணர்ந்து, அவளது அருளாணைப்படியே ராமேஸ்வரம் சென்றார். முதலில் பாலம் அமைக்க முயற்சி எடுக்கப்பட்ட இடம் என்ற காரணத்தால் கன்னியாகுமரியை ஆதிசேது என்றும் அழைப்பதுண்டு. இதற்கு ஆதாரமாக, கன்னியாகுமரி கடலில் நீராடும்போது சொல்கிற சங்கல்ப மந்திரத்தில் ஆதிசேது என்ற வார்த்தை வரும். அட்சர சக்திகளின் 51 சக்தி பீடங்களுள், இந்தத் திருத்தலம் தேவியின் முதுகுப்பகுதியாகச் சொல்லப்பட்டுள்ளது. 1892ல் சுவாமி விவேகானந்தர் யாத்திரையாக கன்னியாகுமரிக்கு வந்தார். குமரி அம்மனை வழிபட்ட பின் கடலில் நீந்தி, ஆலயத்துக்கு நேர் எதிரே தென்பட்ட பிரம்மாண்ட பாறையில் அமர்ந்து தவம் புரிந்தார். இந்தப் பாறையில் அம்மனின் திருப்பாதம் காணப்படுகிறது. அந்தப் பாதத்தைத் தரிசித்து, தவம் மேற்கொண்டு அன்னையை ஆராதித்தார். அதன் நினைவாகத்தான் இங்கு விவேகானந்தர் நினைவு மண்டபம் எழுப்பப்பட்டது. இந்தப் பாறையில் காணப்படும் அம்மனின் பாதத்துக்கு என்ன சிறப்பு தெரியுமா? சர்வேஸ்வரனான சிவனை மணந்து கொள்ள வேண்டும் என்று ஒற்றைக்காலில் நின்று பார்வதிதேவி இந்தப் பாறையில் தவம் புரிந்தாள். அப்போது அவளது திருப்பாதத்திலுள்ள ஐந்து விரல்களும் பதிந்தன. அதைத் தான் நாம் இப்போது காண்கிறோம். கன்னியாகுமரி அம்மனின் ஒற்றைக் கால் தவம் எதற்காக? பாணாசுரன் என்ற அரக்கன் மூவுலகங்களையும் தனக்கு அடிமையாக்கி தேவர்களைக் கொடுமைப்படுத்தி வந்தான். சாகா வரம் கேட்ட இவனுக்கு அது வழங்கப்படவில்லை. இறுதியில், ஒரு பெண்ணால் தன்னை என்ன செய்து விட முடியும்? என்ற இறுமாப்போடு எனக்கு அழிவு என்கிற ஒன்று இருந்தால், அது ஒரு கன்னிப் பெண்ணால் மட்டுமே நேர வேண்டும் என்கிற வரத்தைப் பெற்றான். வரம் பெற்ற மமதையில், பாணாசுரனது அட்டகாசம் தொடர்கதையாகிப் போனது. பொறுக்க முடியாத தேவர்கள் ஒரு கட்டத்தில் சிவனிடம் போய் கண்ணீர் மல்க புகார் செய்தனர்.
பாணாசுரனை சம்ஹாரம் செய்கிற பொறுப்பை அன்னை பார்வதிதேவியிடம் வழங்கினார் ஈசன். பார்வதி! நீ பூலோகத்திலுள்ள குமரிக் கடலுக்கு மானிடப்பிறப்பெடுத்துச் சென்று தவம் செய்து கொண்டிரு. ஒரு அசுர வதம் உனக்காக அங்கே காத்துக் கொண்டிருக்கிறது. உரிய வேளையில் வந்து உன் மணம் புரிந்து கொள்கிறேன், என்றார். எனவே, கன்னிப் பெண்ணாக குமரியில் எழுந்தருளினாள் பார்வதிதேவி. கடல் நடுவிலுள்ள ஒரு பாறையில் ஒற்றைக் காலில் நின்று தவத்தைத் தொடங்கினாள். இப்போது பாணாசுரனின் வாழ்வில் விதி விளயாடியது. அழகே உருவான பார்வதிதேவியைப் பார்த்து மயங்கிய அந்த அசுரன், அவளைக் கவர்ந்து செல்ல முடிவெடுத்தான். பிறகென்ன... இவன் பெற்ற வரப்படி கன்னிப் பெண்ணான பார்வதிதேவி ஒரு வாளால் இவன் தலையை கொய்து சம்ஹாரம் செய்தாள். கையில் வாளோடு பாணாசுரனை பார்வதிதேவி அழிக்க முற்படும் காட்சி, ஆலயக் கருவறையின் கிழக்குச்சுவரில் ஒரு புடைப்புச் சிற்பமாக அமைந்துள்ளது. தவிர, இந்த நிகழ்வை நவராத்திரி திருவிழாவின்போது தத்ரூபமாக நடத்திக் காட்டுகின்றனர். சம்ஹாரம் முடிந்த பின் ஈசன் வருவான்... தன்னை மணந்து கொள்வான் என்று ஒற்றைக்காலில், இன்றும் அம்மன் தவம் புரிந்து வருகிறாள். அமாவாசை போன்ற தினங்களில் கன்னியாகுமரி கடலில் நீராடி, பித்ரு காரியங்களை செய்து விட்டு, அம்மனைத் தரிசிக்க ஆலயம் வரும் பக்தர்கள் அதிகம். இதில் ஆடி, புரட்டாசி மகாளயம், தை அமாவாசைகள் மிக விசேஷம். ஆடி அமாவாசை தினத்தன்று அதிகாலையிலேயே ஆலயத்தின் நடை திறக்கப்பட்டு விசேஷ வழிபாடுகள் நடைபெறும். அதன் பின் தங்கக் கவசம், வைரக் கிரீடம், வைரக்கல் மூக்குத்தி, தங்க ஆபரணங்கள் போன்றவை எல்லாம் கன்னியாகுமரி அம்மனுக்கு அணிவிக்கப்படும். சந்தனக்காப்பு அலங்காரம் செய்யப்படும். இரவில் வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதி உலா வரும் காட்சி காணக் கிடைக்காத ஒன்றாக அமையும். இதன்பிறகு முக்கடல் சங்கமத்தில் அம்மனுக்கு ஆராட்டு வைபவம் நடைபெறும். கன்னியாகுமரி அம்மன் கிழக்கு நோக்கி தரிசனம் தருகிறாள். ஆனால், கிழக்குப் பக்கம் இருக்கிற வாசல் எப்போதும் மூடப்பட்டே இருக்கிறது. பக்தர்கள் வடக்கு வாசல் வழியாகத்தான் ஆலயத்தினுள் அனுமதிக்கப்படுகிறார்கள். பல வருடங்களுக்கு முன் கிழக்கு வாசல் திறந்தே இருந்ததாம். அதாவது கடலைப் பார்த்தபடி கன்னியாகுமரி அம்மன் திருக்காட்சி தந்து கொண்டிருப்பாள். ஒருமுறை கப்பல் ஒன்று கடலில் சென்று கொண்டிருந்தது. அப்போது கரையில் ஏதோ ஒளி தெரிந்தது. அதை கலங்கரை விளக்கம் என நம்பிய மாலுமி, கப்பலைத் திருப்பினார். சற்று நேரத்தில் தரை தட்டி, கப்பல் கவிழ்ந்து விட்டது. உண்மையில் அம்பாளின் மூக்குத்தி ஒளி தான் அவருக்கு கலங்கரை விளக்கம் போல் தெரிந்துள்ளது. அந்தளவுக்கு பளிச்சென்ற கல் மூக்குத்தியை அம்பாள் அணிந்திருப்பாள். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்களைத் தவிர்க்கும் விதத்தில் கிழக்கு வாசல் மூடப்பட்டு விட்டது. |
|
|
|