|
கோவில் நகரம் என்கிற பெருமை காஞ்சிபுரத்துக்கு உண்டு. காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சங்கரமடம் செல்லும் வழியில் முருகப் பெருமானுக்கு கோவில் உள்ளது. இதைக் குமரக்கோட்டத்து முருகன் கோவில் என முருகனடியார்கள் அழைப்பர். முருகனின் புகழ்பாடும் கந்தபுராணம் அரங்கேறிய கோவில் இது. கச்சியப்ப சிவாச்சாரியார் என்பவர், இங்கு அர்ச்சகராக இருந்தார். ஒருநாள் அவரது கனவில் தோன்றிய முருகன், திகடச் சக்கரச் செம்முகம் என்று அடி எடுத்துக் கொடுத்து கந்தபுராணத்தைப் பாடுக என்று பணித்தார். முருகன் அருள் கிடைத்தாயிற்றே! பிறகு பாடல் எழுதுவதில் என்ன தயக்கம்..! தினமும் நுõறு பாடல்கள் எழுதி, அவற்றை முருகன் சன்னிதியில் வைத்து விடுவார் கச்சியப்பர். முருகனே அவற்றை எடுத்துப் படித்துத் திருத்திக் கொடுத்தார். தினமும் இந்தத் திருவிளையாடல் நடந்தது. கந்தபுராணம் அரங்கேறும்போது, கச்சியப்பரின் புலமையில் சந்தேகம் கொண்டு பலரும் விளக்கங்கள் கேட்டனர். எழுதச் சொன்ன முருகன் ஏமாற்றி விடுவாரா? முருகனே ஒரு தமிழ்ப்புலவராக எழுந்தருளி புலவர்களின் சந்தேகங்களுக்கு விடை கொடுத்தார்.
ஐயமெல்லாம் தீர்ந்த பின் அங்கிருந்து மறைந்தார். இவை எல்லாம் குமரக் கோட்டத்து முருகப்பெருமானின் திருவிளையாடல்கள். கந்தபுராணம் அரங்கேறிய கல் மண்டபத்தை இன்றும் கோவிலில் காணலாம். இங்கு பிரம்ம சாஸ்தா வடிவில் முருகன் அருள்பாலித்து வருகிறார். யார் அந்த பிரம்ம சாஸ்தா? பிரம்மனுக்குப் ஓம் என்ற பிரணவ மந்திரத்தின் பொருள் தெரியாததால் அவரை முருகப்பெருமான் சிறையில் அடைத்தார். அதன் பின் படைப்புத்தொழில் தடைபடக்கூடாது என்று பிரம்மனின் ருத்திராட்ச மாலை மற்றும் கமண்டலத்தைத் தானே கைகளில் ஏந்தி சில காலம் படைப்புத் தொழிலை மேற்கொண்டார். இத்தகைய திருக்கோலம்தான் பிரம்ம சாஸ்தா. தொண்டை மண்டலத்தை ஆண்ட பல்லவர்கள் எண்ணற்ற கோவில்களில் இந்த பிரம்ம சாஸ்தாவை பிரதிஷ்டை செய்தார்கள். காஞ்சிபுரம் குமரக்கோட்டத்தில் அருள்பாலித்து வரும் முருகனும் இதே வடிவம் தான். கருவறையில் மூலவரான சுப்பிரமணிய சுவாமிக்கு நான்கு திருக்கரங்கள். மேல் வலக்கரம் மற்றும் இடக்கரத்தில் ருத்திராட்ச மாலை மற்றும் கமண்டலம், கீழ் வலக்கரம் அபயம் தருவதாக உள்ளது.
கீழ் இடக்கரத்தை தொடை மீது வைத்திருக்கிறார். இடுப்பில் மான் தோலும், தர்ப்பையால் ஆன அரைஞாண் கயிறும் உள்ளது. மேற்கு நோக்கித் காட்சி தரும் இவரைத் தரிசித்தால், மும்மூர்த்திகளை வணங்கிய பலன் கிடைக்கும். கருவறைக்கு வெளியே இருபுறமும் தனித்தனி சன்னிதிகளில் வள்ளி மற்றும் தெய்வானை குடி கொண்டுள்ளனர். வரசித்தி விநாயகர், சந்தான கணபதி, தண்டபாணி, சண்முகர், பரவர், சோமாஸ்கந்தர், நவவீரர்கள், முத்துக்குமார சுவாமி உள்ளிட்ட தெய்வங்களுக்கும் சன்னிதிகள் உண்டு. இங்கு நாக சுப்பிரமணியர் உற்ஸவர் விக்ரகம் உள்ளது. இதை ஐந்து தலை நாகம் ஒன்று குடை பிடித்திருக்கிறது. கால சர்ப்ப தோஷம், ராகு, கேது தோஷம், திருமணத் தடை இருப்பவர்கள் இந்த முருகப்பெருமானைப் பிரார்த்தித்து, பாலபிஷேகம் செய்தால் அந்த தோஷங்கள் நீங்கி விடும். காஞ்சிபுரம் வருகிற பக்தர்கள் காஞ்சி காமாட்சி அம்மனைத் தரிசித்தால் மட்டும் போதாது. சிவன் அருளும் ஏகாம்பரேஸ்வரர் கோவிலையும், குமரன் அருளும் குமரக் கோட்டத்து முருகனையும் தரிசித்த பின் தான் புறப்பட வேண்டும். அப்போது தான் தரிசனம் முழுமை பெற்று பலன் கூடுதலாகக் கிடைக்கும்.
சரி, மேலே சொன்னபடிதான் தரிசனம் செய்ய வேண்டும் என்று யார் சொன்னது? சாட்சாத் பாம்பன் சுவாமிகள் தான்! அவர் ஒரு முறை காஞ்சிபுரம் வந்திருந்தார். காமாட்சி, ஏகாம்பரேஸ்வரர் மற்றும் சில கோவில்களில் சுவாமியை வணங்கி விட்டு ஊருக்குப் புறப்பட்டார். குமரக்கோட்டத்துக்கு செல்லவில்லை. தனது அடியவரான பாம்பன் சுவாமிகள் தன்னைத் தரிசிக்காமல் காஞ்சியை விட்டுச் செல்ல முருகன் அனுமதிப்பாரா? ஒரு சிறுவன் வடிவில் சென்று, அவரை எதிர்கொண்டார். தன்னை வழி மறித்து நின்ற சிறுவனை ஒன்றும் புரியாமல் பார்த்தார் பாம்பன் சுவாமி. அந்தச்சிறுவன் சுவாமியிடம், காஞ்சிபுரத்தில் எல்லா கோவில்களையும் தரிசித்து விட்டீரா? என்று கேட்டான். ஆமாம் என்றார் சுவாமி. இங்குள்ள முருகப் பெருமான் கோவிலைத் தாங்கள் தரிசிக்கவில்லையே! என்று சிறுவன் ஞாபகப்படுத்தவும், அப்படியா... அந்தக்கோவில் எங்கு இருக்கிறது? எனக்குத் தெரியாதே, என்றார் பாம்பன் சுவாமி. உடனே முருகன், வாருங்கள் என்னுடன்... நானே கொண்டு போய் குமரக்கோட்டத்தில் விடுகிறேன், என்று சொல்லிவிட்டு நடந்தான். சுவாமிகள் அவனைப் பின்தொடர்ந்தார். கோவிலுக்குள் சிறுவன் நுழைந்ததும், கோவிலை வியந்து பார்த்தபடியே, பாம்பன் சுவாமியும் உள்ளே சென்றார். அவரைக் கூட்டி வந்த சிறுவன், சட்டென்று கருவறைக்குள் புகுந்து மறைந்து விட்டான். அப்போதுதான் தன்னை அழைத்து வந்தது சாட்சாத் முருகன் என்று உணர்ந்து மெய் சிலிர்த்துப் போனார். இந்த முருகனைப் பற்றி அருணகிரிநாதர் திருப்புகழில் பாடியுள்ளார். வைகாசி பிரம்மோற்ஸவம், கந்தசஷ்டி, திருக்கார்த்திகை உற்ஸவம் ஆகிய திருவிழாக்கள் இங்கு நடக்கும். பிரம்மோற்ஸவத்தின் பதினோராம் நாள் விழாவில் வள்ளியுடன் திருக்கல்யாணம் நடைபெறும். கந்தசஷ்டி திருவிழா காலத்தில், தெய்வானையுடன் திருக்கல்யாணம் நடைபெறும். இந்த திருவிழாவின் போது, பிரகாரத்தை 108 முறை வலம் வந்து வணங்குவது நல்லது. தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது. செவ்வாய், வெள்ளி, பரணி, கார்த்திகை நட்சத்திரம் மற்றும் சஷ்டி திதி நாட்களில் ஏராளமான பக்தர்கள் வருவர். |
|
|
|