|
கடவுளின் தரிசனம் வேண்டி பலகாலம் மலையில் தவமிருந்து மன்னர் ஒருவருக்கு கடவுள் தரிசனம் கிடைத்தது. மன்னரிடம், என்ன வரம்வேண்டும்? என்று கேட்டார், கடவுள். எப்படி எனக்கு தரிசனம் தந்தீர்களோ அதுபோல ராணி மந்திரி, எனது நாட்டு மக்களுக்கும் காட்சி தரவேண்டும் என்று தன் விருப்பத்தை வரமாகக் கேட்டார் மன்னர். இது அவரவர் கர்மவினையைப் பொறுத்தே அமையும். இருந்தும் மன்னரின் வரத்திற்கு இறைவன் அருள் தந்து மறைந்தார். நாட்டுக்கு வந்து மக்களிடம் தண்டோரா போட்டு தகவலை தெரிவிக்கச் செய்தார் மன்னர். மக்கள் கூடினர். கடவுளைக் காண மலையை நோக்கி அவர்களுடன் புறப்பட்டார், மன்னர். மலையில் சிறிது தூரம் ஏறியவுடன் செம்புப் பாறைகள் தென்பட்டன. உடனே மக்கள் அதனை உடைத்து தலையில் சுமந்துகொண்டு சென்றனர். அதைக் கண்ட மன்னர், கடவுளின் அரிய காட்சிக்கு முன் இப்பொருளுக்கு மதிப்பு கிடையாது என்றார். அதற்கு மக்கள், கடவுளின் காட்சியை வைத்து என்ன செய்யமுடியும்? என உரக்கக் கூறினார்கள். மீண்டும் சில மைல் தூரம் நடந்தவுடன் வெள்ளிப்பாறை, தங்கப் பாறை, வைரப்பாறை என தென்பட, மன்னரைத் தவிர அனைவருமே போட்டி போட்டுக்கொண்டு அதனை எடுத்துக்கொண்டு தங்கள் இல்லங்களுக்குத் திரும்பிவிட்டனர். இறுதியில், மலையின் உச்சியில் தன்னந்தனியாக போய் நின்ற மன்னரிடம், எங்கே உன் மக்கள்? என்று கேட்டார், கடவுள். மன்னர் தலைகுனிந்தவாறு, அவர்களது வினைப்பயன் அவர்களை அழைத்துச் சென்றுவிட்டது, அய்யனே! என்றார். அதற்கு கடவுள், உலகப் பொருள்களின் மீது பற்றற்ற நிலை உள்ளவர்களுக்குத்தான் எனது அருட்காட்சி கிடைக்கும் என்றார். |
|
|
|