|
ஒருமுறை கருடனுடன் வானவீதியில் மகாவிஷ்ணு சஞ்சரித்துக்கொண்டிருந்தபோது பூலோகத்தில் மனிதர்கள் பலவிதமான வேலைகளிலும், கவலைகளிலும் ஆழ்ந்திருக்கக் கண்டார். கருடாழ்வாரிடம், இவ்வுலகில் எத்தனை விதமான மனிதர்கள் உள்ளனர்? என கேள்வி எழுப்பினார். விஷ்ணு. அனைத்தையும் அறிந்திருந்தாலும், அறியாதவன் போல் விளையாடும் பெருமாளை எண்ணி புன்னகைத்த கருடாழ்வார், மூன்று வகையான மனிதர்கள் இருக்கிறார்கள். பறவைகள், அதன் குஞ்சுகள் போல் சிலர்; பசுவும், அதன் கன்றும் போல் வேறு சிலர்; கணவரும், மனைவியும் போல் ஏனையர் என சுருக்கமாகக் கூறினார். கருடனிடம் விளக்கமாகக் கூறவேண்டும் எனப் பணித்தார் பகவான். பறவையானது தன் குஞ்சுகளை மரத்திலேயே விட்டுவிட்டு, அவற்றிற்கு உணவு தேடிச் செல்கிறது. உணவு கிடைத்ததும், அதைக் கொண்டு சென்று, குஞ்சுகளுக்கு ஊட்டுகிறது. முட்டையிடுவதும், குஞ்சு பொரிப்பதும், குட்டிகளைப் பேணுவதுமே அவற்றின் தலையாய கடமையாய், வாழ்க்கை முறையாய் இருக்கிறது. வேறு சிந்தனைகளோ அவற்றிற்கு சிறிதும் இருப்பதில்லை.
இவைபோலவே சிலர் தன்னைப் படைத்தவரை முற்றிலும் நிராகரித்து தான். தன் குடும்பம், மனைவி, குழந்கைள் என உலகாய சிந்தனைகளிலேயே காலத்தை ஓட்டி விடுகிறார்கள். இவர்கள் பக்தியை அறியாதவர்கள். அடுத்த வகையினர், பசுவும் கன்றும் போன்றவர்கள். கொல்லையில் ஒரு மூலையில் பசுவையும், மற்றொரு மூலையில் கன்றையும் கட்டி வைத்துள்ளார்கள். கன்றின்பால் அருள் சுமந்து நிற்கும் பசு; பசுவிடம் ஓடிவிட பரிதவிக்கும் கன்று ஆனால், அவ்வாறு போகவிடாமல் அதை ஒரு பந்தல்காலுடன் இணைத்துள்ளது சிறிய கயிறு. அந்தச் சிறிய கயிறுதான் இந்த வாழ்க்கையோடு மனிதனைப் பிணைத்து வைத்திருக்கும் பந்தம், பாசம், அதனிடமிருந்து தப்பி, பரமாத்மாவை அடையத் துடிக்கும் ஜீவாத்மாவே அக்கன்று. அது எதிர்பார்க்கும் அருளும், வரமும் பாலாய்ச் சுரந்து பெருக, திருவருள் தர காத்து நிற்கிறது பரமாத்மாவான பசு. பசுவின் பாலாகிய அருளில்தான் தன் மகிழ்ச்சி, உயர்வு, பெருமை அனைத்தும் இருந்தாலும், ஏதோ ஒன்று, தன் ஆன்மிக லட்சியத்தை அக்கன்றாகிய ஜீவாத்மா, அடைய முடியாது அதை உலகத்தோடு கட்டி வைத்துள்ளது. இங்கு பக்தனுக்காக இறைவன் காத்திருக்கிறார். இவர்கள் இறைவனை அறிந்தும் பக்தி செய்யாதவர்கள்.
அடுத்து, புதிதாய் மணம் புரிந்துகொண்ட ஒரு பெண், தன் கணவனுக்கு என்ன பிடிக்கும் என யோசித்து, அந்த வழிகளைத் தொடர்ந்து செயல்படுத்த கொஞ்ச நாளில் ஒருவரில் ஒருவர் லயித்து விடுகிறார்கள். அதுபோல பக்தர்கள், தம் தெய்வத்தை உணர்ந்தவுடன் பூஜை, விரதம் என பல வழியில் பக்தி செய்து, இறைவனை எண்ணி தியானத்தில் ஆழ்ந்து, முடிவில் இறைவன் அவர்கள் பக்தியை அங்கீகரிக்குமாறு நடந்துகொள்கிறார்கள். அந்த பக்தியில் இறைவனிடம் சரணடைய, அதை ஏற்று, அவர்களை தன்னுள் இணைக்கிறான் இறைவன். ஆக, பக்தி அறியாதோர், பக்திபுரியாதோர், பக்தியில் கரைந்தோர் என மூவகை மனிதர்கள் உலகில் இருக்கின்றனர் என கருடன் முடிக்கவும், பகவான் அவரைப் பாராட்டி ஆசி கூறினார். |
|
|
|