|
பகவான் கிருஷ்ணரிடம் அர்ஜுனன் மனதின் அலைபாயும் தன்மையை விவரித்துக் கூறி, அத்தகைய மனதோடு தியானம் பழகுவது மிகவும் கடினம் என்று கூறினான். அதற்கு பகவான், நெறிப்படுத்தாத மனதைக் கொண்டு, தியானத்தில் ஈடுபடுவது கடினம். முறையான முயற்சியாலும் பயிற்சியாலும் மனதை நெறிப்படுத்துபவர்களுக்கு, தியான யோகத்தை அடைவது எளிது என்று பதில் கூறியருளினார். தியான யோகம் எனப்படும் இந்த ஆறாவது அத்தியாத்தில் பகவான் தியானத்தின் ஸ்வரூபம், தியானத்துக்குரிய அக ஸாதனைகள், புற ஸாதனைகள், தியானத்தின் பலன் முதலிய பல்வேறு கருத்துக்களைத் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். இத்துடன் இந்த அத்தியாயமானது நிறைவு பெற்றிருக்க வேண்டும். ஆனால், அர்ஜுனன் மேலும் ஒரு கேள்வி கேட்கிறான்.
அர்ஜுந உவாச:
அயதி: ஸ்ரத்தயோபேத: யோகாச்சலிதமாநஸ: அப்ராப்ய யோகஸம்ஸித்திம் காம் கதிம் க்ருஷ்ண கச்சதி
(ஸ்ரீமத் பகவத்கீதை 6-37)
ஓ.... கிருஷ்ணா! ஒருவன் ச்ரத்தை மிகுந்தவனாக இருக்கிறான். ஆனால், அவனுடைய முயற்சி போதுமானதாக இல்லை. சஞ்சலிக்கின்ற மனதினால், தியான யோகத்திலிருந்து நழுவி விடுகிறான். யோகத்தின் பலனாகிய மோக்ஷத்தை அடையாத அவனுடைய நிலை எத்தகையதாக இருக்கும்? சாஸ்த்ரங்களும் குருமார்களும் எத்தனைதான் உபதேசித்தாலும், நம்மால் இப்பிறவியில் மோக்ஷமடைய முடியாது என்பதே பலரது தீர்மானமான எண்ணமாக இருக்கிறது. இங்கேயே இப்பொழுதே மெய்யறிவைப் பெற்று, மோக்ஷத்தை உணரலாம். மனிதப் பிறவியே இதற்காகத்தான் கொடுக்கப்பட்டுள்ளது என்று சாஸ்த்ரங்களும் பெரியோர்களும் எவ்வளவு வலியுறுத்திக் கூறினாலும், அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள். ஒருசில மஹான்களின் பெயர்களைக் கூறி, அவர்கள் அடைந்த நிலையை நம்மால் ஒரு போதும் அடைய முடியாது என்று கூறுகின்றனர். இதற்குக் காரணம் தன்னம்பிக்கையின்மையே ஆகும். வாழ்க்கையின் அறுதிக் குறிக்கோளை அடைய வேண்டுமானால், அதற்கு குருவருள், இறையருள், மறையருள் (சாஸ்த்ர க்ருபா) தன்னுடைய மனதின் அருள் (ஆத்ம க்ருபா) ஆகிய நான்கும் மிக முக்கியம்.
குருவருள், இறையருள், சாஸ்த்ரங்களின் அருள் ஆகிய அனைத்தும் இருந்தபோதிலும், ஒருவன் மனம் வைக்கவில்லையென்றால், ஆன்மிக வாழ்வில் முன்னேற முடியாது. சுயமுயற்சியின் அவசியத்தை, முக்கியத்துவத்தை பகவான் பல கோணங்களில் உணர்த்தியிருக்கிறார். ஆறாவது அத்தியாயத்தின் துவக்கத்தில்கூட, ஒருவன் தன்னைத் தானே உயர்த்திக் கொள்ள வேண்டும். ஒரு பொழுதும் தன்னைத் தாழ்த்திக் கொள்ளக் கூடாது என்று கூறியருளினார். பலன் கிடைக்கவில்லை என்று பலர் புலம்புகின்றனர். அதற்குக் காரணம், அவர்கள் போதிய அளவு முயற்சி செய்யவில்லை என்ற உண்மையை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். இந்தப் பிறவியில் மோக்ஷம் கிடைக்கப்போவதில்லை என்று எண்ணிக்கொண்டு, அடுத்த பிறவி என்னவாக இருக்கும் என்ற சிந்தனையில் ஆழ்ந்து விடுகிறார்கள். ஞான யோகத்தில் ஒருவன் காலடியெடுத்து வைத்து விட்டான். ஆனால் போதிய முயற்சியில்லாமல், மோக்ஷத்தை உணராமல் அவனுடைய வாழ்க்கை முடிந்து விட்டது. அவனுடைய நிலை என்னவாக இருக்கும் என்பதே அர்ஜுனனின் கேள்வி.
ஞானத்தின் பலனாகிய மோக்ஷம் ஏற்படவில்லை, கர்மத்தின் பலனாகிய ஸ்வர்கலோகமாவது கிடைத்திருக்குமா? என்றால், அதற்கும் வழியில்லை. ஞான யோகத்தின் பொருட்டு, கர்மங்களைத் துறந்துவிட்டு, இதற்கு நேரம் ஒதுக்கியிருக்கிறான். எனவே, கர்மத்தின் பலனும் கிடைக்காமல், ஞானத்தின் பலனும் கிடைக்காமல் த்ரிசங்குவைப் போன்று நடுவில் மாட்டிக் கொண்ட நிலையில் இருப்பவனைப் பற்றித்தான் அர்ஜுனன் கேட்கிறான். ஆன்மிகப் பாதையில் தொடர்ந்து இடைவிடாத முயற்சியில் ஈடுபடும்பொழுது, மூன்றுவிதமான தடைகள் ஏற்படுகின்றன. ஆத்யாத்மிக தடைகள் (உடல் நிலை, மனநிலை போன்று தனக்குள்ளிருந்து ஏற்படுகின்ற தடைகள்), ஆதிபௌதிக தடைகள்(குடும்பம், சமூகம் போன்ற புறச்சூழல்களால் ஏற்படுகின்ற தடைகள்), ஆதிதைவிக தடைகள் (இயற்கைச் சீற்றங்கள், பேரிடர்கள் போன்றவற்றால் ஏற்படும் தடைகள்). எத்தனை தடைகள் வந்தாலும், அவற்றால் கலக்கமடையாது, தொடர்ந்து முயற்சியில் ஈடுபடுவதே அறிவாளியின் செயல். |
|
|
|