|
கிருஷ்ணாவதாரத்தில் நரகாசுர வதத்திற்கு முக்கிய பங்குண்டு. தீபாவளி கொண்டாட காரணமே இந்த நரகாசுரன் தான். இவன் யாரோ அல்ல... சாட்சாத் மகாவிஷ்ணுவின் பிள்ளை. பிள்ளை என்றதும் விஷ்ணுவின் நாபிக்கமலத்தில் தோன்றிய பிரம்மா நம் நினைவுக்கு வருவார். நரகாசுரனை அவரது பிள்ளை என்றால் நம்பத் தோன்றாது. இரண்யாட்சன் என்னும் அசுரன் பூமியை கடலுக்குள் மூழ்கடித்தான். அவனை வதம் செய்ய மகாவிஷ்ணு வராக மூர்த்தியாக பூமியைத் தன் கொம்பில் தாங்கி, கடலில் இருந்து வெளிப்பட்டார். அப்போது வராகரின் கொம்பும், இரு பற்களும் பூமி மீது பட்ட இடம் தான் காமாக்யா. அசாம் மாநிலத்தில் இப்பகுதி உள்ளது. அந்த நாளில் இதற்கு ‘ஜ்யோதிஷபுரம்’ என்று பெயர். ‘பிரகாசமான பட்டணம்’ என்பது பொருள். இங்கிருந்த நரகாசுரன் உலகையே நடுங்க வைத்தான். பூமாதேவி கடலுக்கடியில் மூழ்கிய நேரத்தில் மீட்டெடுத்த மகாவிஷ்ணு, அவளுடன் கூடியதன் காரணமாகப் பிறந்தவன் நரகாசுரன். ‘நரகத்திற்கு இணையாக துன்பம் அளிப்பவன்’ என்பதால் நரகாசுரன் எனப்பட்டான். ஆனால், அவனது உண்மையான பெயர் ‘பவுமன்’. இவன் பிறக்கும் போது தீப்பிழம்பு போல சிவப்பாக இருந்தான். கிரகங்களில் ஒன்றான செவ்வாய்க்கு பவுமன் என்று பெயருண்டு. அது சிவப்பு நிறம் கொண்டது. பெயரிலும், உடலிலும் இருந்த ஒளி அவனது மனதில் இல்லை. மனம் இருளடைந்து காணப்பட்டது. இவனால் மக்களை விட தேவர்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளானார்கள்.
பரம்பொருளான திருமாலின் பிள்ளை ஏன் இப்படி இருந்தான் என்று கேள்வி எழலாம். உலகிலுள்ள அனைத்தும் கடவுளிடம் இருந்தே தோன்றுகின்றன என்பதற்கு இதை எடுத்துக்காட்டாகச் சொல்லலாம். வெளிச்சம் மட்டுமல்ல, இருளுக்கும் கடவுளே காரணம் என்பது இதன் மூலம் உறுதியாகிறது. மற்ற அசுரர்களைப் போல இவனும் விசேஷ சக்தி பெற பிரம்மாவை நோக்கி தவமிருந்தான். பிரம்மாவிடம், பெற்றோரைத் தவிர வேறு எவராலும் தனக்கு அழிவு உண்டாகக் கூடாது என்ற வரத்தைப் பெற்றான். அந்த வரத்தின் பலத்தால் அதிகம் சிரமப்படுத்தியது இந்திரனைத் தான்! தேவலோகம் சென்று, இந்திர சபையில் இருந்த வெண்கொற்றக்குடை, இந்திரனின் தாய் அதிதியின் காதில் அணிந்திருந்த குண்டலங்களைப் பறித்தான். இப்பொருட்களை மீட்க முடியாத இந்திரன், தேவர்களின் முகத்தில் விழிக்கவே வெட்கப்பட்டான். விஷ்ணுவிடம் சென்று முறையிட்டால் நன்மை உண்டாகும் என தேவர்கள் ஆலோசனை கூறினர். இதற்கிடையில், நரகாசுரன் தன்னை ‘தேவர்களின் தலைவன்’ என அறிவித்தான். ‘தந்தையான மகாவிஷ்ணுவிடம் அவரது பிள்ளையைப் பற்றி எப்படி குறை சொல்வது’ என இந்திரன் தயங்கினான். சர்வலோக நாயகனான காவிஷ்ணுவுக்கு, மகன் செய்யும் அக்கிரமம் தெரியாமல் போகுமா என்ன? ஆனால், விஷ்ணு யோக நித்திரையில் இருந்து கொண்டு, அனைத்தையும் கண்டும் காணாதது போல இருந்தார்.
அப்படி இருந்ததன் பின்புலம் வினோதமானது. தவறு செய்யும் பிள்ளையின் அசுர குணத்தை தாய் சகிக்கிறாளா அல்லது தர்மத்துக்காக பாசத்தை விட்டு பிள்ளையை எதிர்க்கிறாளா என்பது முக்கியம். ஆனால், நரகாசுரனின் தாய் பூமிதேவி பிள்ளையின் அட்டகாசத்தைக் கண்டு மனம் வருந்தினாள். தன் சகோதரன், பாவியாக இருக்கிறானே என்று பிரம்மாவும் மனம் நொந்தார். பிரம்மா தன் தந்தையான விஷ்ணுவிடம் முறையிட நினைத்த நிலையில், அவர் பூலோகத்தில் கிருஷ்ணராக அவதரித்திருந்தார். கிருஷ்ணாவதாரத்தின் போது பிரம்மா, ஆயர்பாடியில் இருந்த மாடு, கன்றுகளை மறைத்தது கூட கிருஷ்ணரின் கவனத்தை தன் பக்கம் இழுக்க வேண்டும் என்பதற்காகத் தான். பிரம்மா மறைத்த சுவடே ஆயர்பாடிக்கு தெரியாத விதத்தில், மாடு, கன்றுகள் உள்ளிட்ட அனைவரது போலி வடிவங்களையும் கிருஷ்ணர் படைத்தார். இதைக் கண்ட பிரம்மா ஆச்சரியத்தில் மூழ்கினார். இந்திரன் தனக்குரிய பூஜையை யாதவர்கள் நிறுத்திய போது, அடைமழை பொழியச் செய்தது கூட கிருஷ்ணரின் கவனத்தை தன் பக்கம் திருப்புவதற்காக என்று எடுத்துக் கொள்ளலாம். பிரம்மா, இந்திரன் இருவரும் நரகாசுரனால் கொடுமைகளை அனுபவித்தனர். பொறுமை இழந்த நிலையில், இந்திரன் கிருஷ்ணரிடம் முறையிட்டான். “பிரபு....பவுமனின் அட்டகாசத்தை தாங்க முடியவில்லை. தேவர்களை செயல்பட விடாமல் தடுக்கிறான். தன்னை எதிர்க்கும் மனிதர்களை வதம் செய்கிறான். தாயான பூமாதேவியும் கூட மகனை எண்ணி கண்ணீர் சிந்துகிறாள்” என்றான். கிருஷ்ணனும், “ வருந்தாதே இந்திரா! நான் பார்த்துக் கொள்கிறேன் ” என்று ஜோதிஷபுரம் நோக்கிப் புறப்பட்டார். சத்தியபாமாவையும் தன்னுடன் துணைக்கு அழைத்துச் சென்றார். அவள் யாரோ அல்ல... பூமாதேவியின் இன்னொரு அம்சம். எதிரிகள் நுழைய முடியாதபடி, பவுமன் பல கோட்டைகளை ஜோதிஷபுரத்தில் கட்டியிருந்தான். அந்த கோட்டைகளை அவனது தளபதிகள் கண்காணித்து வந்தனர். அவர்களில் முரன் என்பவனுக்கு ஐந்து தலைகள்!
|
|
|
|