Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஓசை கொடுத்த நாயகி
 
பக்தி கதைகள்
ஓசை கொடுத்த நாயகி

பேச்சு என்பது அவ்வளவு சுலபத்தில் எல்லா மனிதர்களுக்கும் வாய்த்து விடுவதில்லை. சிலருக்கு எந்த நேரத்தில் எதைப் பேசுவது என்று தெரியாமல், இஷ்டத்துக்கு பேசி கஷ்டத்தை விலை கொடுத்து வாங்கிக் கொள்வார்கள். சிலருக்குப் பிறந்ததில் இருந்தே திக்குவாயாகவோ அல்லது சரளமாகப் பேசுகிற ஆற்றலோ இல்லாமல் இருக்கலாம். இதுவாவது பரவாயில்லை. இன்னும் சிலர், பிறப்பிலிருந்தே பேச முடியாதவராகவே இருந்து விடுவது மிகப்பெரிய சோகம். பேச்சுக் குறைபாடு உள்ள அன்பர்கள், தங்களுக்கு வளமான பேச்சுத்திறன் அமைவதற்குத் தரிசிக்க வேண்டிய தலம் தான் திருக்கோலக்கா ஓசைநாயகி கோவில். பேச்சு மட்டுமில்லை...நன்றாகப் பாட வேண்டும், இசைத்துறையில் மிளிர வேண்டும் என்று விரும்புகிறவர்களும் இந்தக் கோவிலுக்குச் சென்று வழிபட்டால், பலன் கைமேல்! சீர்காழியில் இருந்து ஒரு கி.மீ. தொலைவில் திருக்கோலக்கா உள்ளது. இங்கு எழுந்தருளியுள்ள இறைவனின் பெயர்  சப்தபுரீஸ்வரர், இவருக்கு தாளேஸ்வரர், திருத்தாளமுடையார் என்றெல்லாம் பெயர் உண்டு. அம்பாளின் பெயர்  ஓசைநாயகி, இவளுக்கு த்வனி ப்ரதாம்பாள், ஓசை கொடுத்த நாயகி என்றும் பெயருண்டு. இந்தக் கோவில் திருஞானசம்பந்தர், சுந்தரர் ஆகியோரால் பாடல் பெற்றது.

சீர்காழியில் வசித்த ஞான சம்பந்தர், பார்வதிதேவியிடம் ஞானப்பால் அருந்தியதும், அந்த தேவியாலும், சிவனாலும் ஆட்கொள்ளப்பட்டார். அதற்கு அடுத்த நாளே திருத்தல யாத்திரை துவங்கினார். அப்போது அவருக்கு வயது மூன்று தான். திருக்கோலக்கா வந்த அவர் ‘மடையில் வாளை’ என்று துவங்கும் பதிகம் பாடினார். ‘தோடுடைய செவியன்’ பதிகத்துக்கு அடுத்து ஞானசம்பந்தர் பாடிய பதிகம் இது. ஞானசம்பந்தன் குழந்தை ஆயிற்றே! திருக்கோலக்கா கோவிலில் பதிகம் பாடும்போது, ஆர்வ மிகுதியில் தன் கைகளைத் தட்டி வெகுவாக ரசித்துத் தாளம் போட்டார். ஆனால், பிஞ்சுக் குழந்தை என்பதால், சரியாக ஓசை எழவில்லை. அதோடு, கைககளும் வலிக்க ஆரம்பித்தது. வலி தாளாமல் கண்ணீர் முட்டியது. குழந்தை படும் வேதனையைக் காணப் பொறுக்காத சிவன், ஐந்தெழுத்து மந்திரமான ‘நமசிவாய’ என பொறிக்கப்பட்ட தங்கத் தாளத்தை ஞானசம்பந்தருக்கு அளித்தார். அந்தத் தாளத்தைப் பெற்ற குழந்தை அதை தட்டினார். ஆனால், அதில் இருந்தும் ஓசையே வரவில்லை. இந்த நிலையில் அன்னை பார்வதி அந்தத் தாளத்தில் இருந்து ஓசை வர வகை செய்தாள். தாளம் கொடுத்ததால் இந்தக் கோவிலுக்கு ‘திருத்தாளமுடயார் கோவில்’ என அழைக்கப்பட்டது. இசைக்கு ஏழு ஸ்வரங்கள் உண்டு என்பதால் ‘சப்தபுரி’ எனவும் வழங்கப்பட்டது.

‘சப்தம்’ என்றால் ஏழு. இங்கு நடக்கும் சித்திரை மாத உற்ஸவத்தின் போது சீர்காழியில் இருந்து, சம்பந்தர் இங்கு எழுந்தருளி,. தாளபுரீஸ்வரரிடம் பொற்தாளம் பெறும் நிகழ்ச்சி நடக்கும். சூரிய தீர்த்தம், ஆனந்த தீர்த்தம் என இரு தீர்த்தங்கள் இங்குள்ளன. பேச்சு அமையப் பெறாதவர்கள் ஆனந்த தீர்த்த நீரை தலையில் தெளித்துக் கொள்ள வேண்டும். பின், ஓசைநாயகி முன் நின்று, ‘அன்னையே... ஞானசம்பந்தனின் திருக்கரங்களில் வீற்றிருந்த தாளத்துக்கு ஓசையைக் கொடுத்த நாயகியே... எனக்குப் பேசும் சக்தியைக் கொடு. என் பேச்சில் எந்த விதமான தடுமாற்றமும், தயக்கமும் கூடாது’ என்று அவரவர்கள் என்ன நிலையில் இருக்கிறார்களோ, அதற்கேற்றபடி பிரார்த்தித்து அர்ச்சனை செய்து கொள்ள வேண்டும். அர்ச்சனைக்கு வழக்கமான பூஜை பொருட்களுடன் தேன் வாங்கிக் கொடுக்க வேண்டும். அர்ச்சனை முடிந்ததும்,  அம்பாளின் பாதத்தில் வைத்த தேனை அர்ச்சகர் தருவார். குழந்தைகளாக இருந்தால் அவர்களின் நாக்கில் தடவி விடுவார். அதை ஒரு சொட்டு அங்கு சாப்பிட்டு விட்டு, வீட்டுக்கு எடுத்து வந்து அர்ச்சகர் சொல்கிற முறைப்படி சாப்பிட வேண்டும். காலப்போக்கில் பேச்சு கலகலவென வரும். மூன்று வயது முதல் எண்பது வயது வரை உள்ளவர்கள் இந்த பிரார்த்தனையைச் செய்கிறார்கள். தங்கள் குறை நீங்கிய பின், காணிக்கை செலுத்துகிறார்கள். இசைக்கலைஞர்கள் இங்கு வந்து பிரார்த்தித்து, நல்ல குரல் வளம் அமைய வேண்டுவர். ‘வாய் பேச முடியாத தன் மகன் பேசும் ஆற்றலைப் பெற வேண்டும்’ என்று இங்கு வந்த ஒரு தாய் வேண்டினார். அவளது கோரிக்கை ஓசை நாயகியின் அருளால் நிறைவேறியது. மகிழ்ச்சியில் ஒரு தங்கத் தாளத்தை கோவிலுக்கு வழங்கினார். இங்கு பொற்தாளம் ஏந்திய ஞானசம்பந்தரின் உற்ஸவர் விக்ரகம் உள்ளது. தாளபுரீஸ்வரர், சுயம்பு லிங்கமாக இங்கு எழுந்தருளியுள்ளார். சுயம்பு என்றால் தானாகத் தோன்றியது என்று பொருள். பிரகாரத்தில் விநாயகர், சோமாஸ்கந்தர், சுப்பிரமணியர், மகாலட்சுமி, சனி பகவான், பைரவர், சூரியன் ஆகியோரைத் தரிசிக்கலாம். கோஷ்ட மூர்த்திகளாக விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை போன்ற தெய்வங்கள் அருள்பாலிக்கின்றனர். காலை 7:30 – 11:30, மாலை 4:30 – 8:00 மணி வரை கோவில் திறந்திருக்கும்.  தரிசனம் முடிந்தது.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar