Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » ஆன்மீகப் பாதையில் மனம்!
 
பக்தி கதைகள்
ஆன்மீகப் பாதையில் மனம்!

நம்முடைய ஐம்புலன்கள், மெய், வாய், கண், மூக்கு, செவி என்ற ஐந்தும் பஞ்சேந்திரியங்கள் என்பது நமக்குத் தெரியும். நம் கண்களால் காண முடி யாத ஆறாவது இந்திரியம் இந்த மனம் என்னும் புலன். ஆகவே இது சூட்சும இந்திரியம் எனப்படும். மனம் சொன்னபடி புலன்கள் ஆட்டம் ÷ பாடுகின்றன. ஆகவே மனதைக் கட்டுப்படுத்தினால் புலன்களைக் கட்டுப்படுத்தலாம். இதை எப்படி கட்டுப்படுத்துவது? திருவள்ளுவர் ஒரு வழி  சொல்கிறார்.

உரன் என்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்
வரன் என்னும் வைப்புக்கோர் வித்து. (3-24)

என்கிறார்.

தோட்டி என்பது யானையை அடக்கும் அங்குசம். ஐம்பொறிகளையும் ஐந்து மத யானைக்கு ஒப்பிடுகிறார். ஒரு சிறிய அங்குசம் உருவில் பெரிய மத  யானைகளை அடக்கும் ஆற்றல் பெற்றது. அதுபோல மனஉறுதியோடு ஐம்புலன்களையும் அடக்கினால், வீடுபேறு - மோட்சம் இதற்கு வித்திட்டது  போலாகும் என்கிறார் வள்ளுவர்.

பகவான் கண்ணன் கீதையில்.

தஸ்மாத் யஸ்ய மஹாபாஹோ
நிக்ருஹீதானி ஸர்வச,
இந்த்ரியாணி இந்த்ரியார்த் தேப்யஸ்-
தஸ்ய ப்ரஜ்ஞா ப்ரதிஷ்டிதா (2.68)

என்கிறார். எவனுடைய இந்திரிய விஷயங்களினின்று இந்திரியங்கள் முற்றும் அடக்கப் பெற்றனவோ அவனுடைய ஞானம் நிலையானது  என்கிறார். மனதை ஒரு தோணியாக உருவகப்படுத்துவார், நாவுக்கரசு சுவாமிகள்.

மனமெனும் தோணி பற்றி
மதியெனும் கோலை ஊன்றி
சினமென்னும் சரக்கை ஏற்றி
செறிகடல் ஓடும்போது
மதமெனும் பாறை தாக்கி
மறியும்போது அறிய ஒண்ணாது
உனை உணும் உணர்வை நல்காய்
ஒற்றியூர் உடைய கோவே.

சம்சாரக் கடல் கொந்தளிக்கிறது. அதில் மனம் என்னும் தோணியில் ஏறி நாம் செல்கிறோம். ஆசைகளால் சினம் உண்டாகிறது. அதை ஏற்றிக்  கொண்டு இந்த உடல் வாழ்க்கைப் பயணத்தை தொடங்குகிறது. நான் என்ற அகங்காரம் ஒவ்வொரு செயலிலும் தலை தூக்குகிறது. இந்த ஆசை, சி னம் அகங்காரம் எல்லாம் அடங்க வேண்டுமாகில் திருவொற்றியூரானை எண்ணியபடி பயணம் தொடர வேண்டும். அப்போது தான் இந்தத் தோணி  எல்லா தடைகளையும் ஆபத்துகளையும் சமாளித்து கரை சேரும், என்கிறார் நாவுக்கரசர்.

இறைவனைப் பற்றிய நினைப்பு அவனுடன் தொடர்பு - எல்லாச் செயல்களிலும் இருக்க வேண்டும். இறைவனைச் சார்ந்து நின்றால், பிறவிக் கடலை  எளிதாக நீந்தலாம் என்பார் திருவள்ளுவர்.

பிறவிப் பெருங் கடல் நீந்துவர் நீந்தார்
இறைவனடி சேராதார். (குறள் 1-10)

இந்த மனம் இருக்கிறதே, இது மனிதனின் கூடவே இருந்து கழுத்தறுக்கும் நண்பன். திருத்தவே முடியாத நண்பன். அதாவது திருத்துவது அவ்வளவு  சுலபமல்ல.

பகவான் கண்ணன் கீதையில் கூறுவான்.

பந்துராத்மாத் மனஸ் - தஸ்ய யேனாத்மை -வாத்மனா ஜித:
அனாத்மனஸ்து சத்ருத்வே வர்த்தே தாத்மைவ சத்ருவத் (6-6)

எவனால் மனம் ஜெபிக்கப்பட்டதோ அவனுக்கு மனம் நண்பன். ஆனால் மனதை வெல்லாதவனுக்கு மனம் எதிரியாகி விடும். இங்கு ஆத்மா என்பது  சரீரம், மனம், ஆத்மா மூன்றையும் குறிக்கும். மனமே பந்தத்துக்கும் காரணம்; மோட்சத்துக்கும் அதுவே காரணம்.

தன்னையறிய தனக்கொரு கேடில்லை
தன்னையறியாமல் தானே கெடுகின்றான்

(திருமந்திரம் -280) என்பார் திருமூலர்.

தன்னை யார் என்றறியும் அகத்தாய்வு ஒருவன் செய்ய வேண்டும். இதைத்தான் பகவான் இரமணர் போதித்தார். மனம் அதற்கு ஒருமைப்பட ÷ வண்டும். எல்லா எண்ணங்களும் ஓய வேண்டும். மனம் அடங்கியவன் எல்லா கேடுகளிலிருந்தும் நீங்கியவனாகிறான்.

நீ போகின்ற இடமெல்லாம் தொடர்ந்து வருவது இந்த மனம். உன் மனதில் சொர்க்கம் இருக்குமானால் உன்னோடு சொர்க்கம் வரும். உன் மனதில்  நரகம் இருக்குமானால் உன்னோடு நரகம் தான் தொடரும். ஆகவே வாழ்வும் தாழ்வும் உன் மனதைச் சார்ந்ததாக அமைகிறது.

உன் துயரங்கட்கும் தொல்லைகட்கும் தோல்விகளுக்கும் இந்த மனமே காரணம். ஆகவே சுலபமாகத் திருத்த முடியாத, விலக்க முடியாத இந்த  நண்பனை நல்லவனாகவும் உன்னை ஊக்குவிப்பவனாகவும் மாற்ற கடினமான பயிற்சியும் முயற்சியும் அவசியமாகின்றது. அப்போது தான் நீ  புத்திமான். இதைத் தான் வேதாந்தம் உபநிஷத்துக்கள் சொல்கின்றன.

அடுத்து உடல், உடல் தூய்மையாக ஆரோக்கியமாக இருக்க சில கட்டுபாடுகள் தேவை. ஒழுக்கம் தேவை. உடல் ஆரோக்யமாக இருந்தால் தான்  மனம் ஆரோக்யமாக இருக்கும்.

உடல் தூய்மை நீரால் அமையும் என்பார் வள்ளுவர். அதுபோல மனம் தூய்மையடைய வாய்மை முக்கியம்.

உடல் ஆரோக்யமாக இருக்க உணவில் கட்டுப்பாடு தேவை. சாத்வீக உணவே சாதகனுக்குத் தேவை. அதையும் அளவறிந்து உண்க என்கிறது  மற்றொரு குறள்.

மனம் தூய்மையாக இருக்க ஒழுக்கமும் கட்டுப்பாடும் தேவை. அதற்காக மனவளப் பயிற்சிகளான தியானம். பிராணாயாமம் முதலிய பயிற்சிகளை  சாதகன் மேற்கொண்டாக வேண்டும். உயர்வு உள்ளத்தால் வளர வேண்டும். உயர்ந்த எண்ணங்கள் உள்ளத்தில் உதித்தால் அவன் மேன்மை  அடைகிறான். எனவே இந்த மனப்பயிற்சி இளமையிலிருந்தே துவங்க வேண்டும். மனத் தூய்மை எப்படி பெறுவது? அதற்கு தெய்வ சிந்தனையே  வழிவகுக்கும். வயதானவர்களுக்கு மட்டுமே இறை சிந்தனை போதும் என்ற பாவனையோ நாம் பெரியவர்களான பிறகு இந்த பூஜை வழிபாடு,  பக்தி எல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்ற சிந்தனையோ, சித்தாந்தமோ தவறான முடிவாகும்.

இந்த உலகில் எல்லா சுகங்களையும் இப்போதே அநுபவித்து விடவேண்டும் என்று துடிக்கிறது மனம். தெய்வ சிந்தனையெல்லாம் இப்போது எதற்கு  என்று தள்ளிப்போடுகிறது. ஆனால் கடைசியில் மிஞ்சுவது துன்பமாகத் தானிருக்கிறது.

ஆகவே இளமை முதலே பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு தெய்வ சிந்தனை நாம ஜெபம், கோயில் வழிபாடு, பிரார்த்தனை முதலிய நெறிமுறைகளில்  ஒவ்வொரு சாதகனும் தன்னை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும். அப்போது துன்பம் தூசாகும்.

மனிதனின் வாழ்க்கையும் முயற்சிகளும் நான்கு முக்கிய நோக்கங்கள் உடையதாக இருக்கவேண்டும்.

1. தெய்வீக நெறிமுறையில் வாழ்க்கையை நெறிப்படுத்துவது.
2. தரும வழியில் பொருளை ஈட்டுவது.
3. நியாயமான ஆசைகளை நிறைவேற்றிக் கொள்வது.
4. அழியாத ஆனந்த நிலை அடைய சாதனைகளை மேற்கொள்வது.

பக்தி மார்க்கத்திற்குப் பல வழிகள் இருந்தாலும் ஏன் மனிதன் பல அல்லல்களுக்கு ஆளாகிறான்? என்பது பலருடைய கேள்வி. சிலருக்கு வாழ்க்கை யே நரகமாகத் தோன்றுகிறது. வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள், தோல்விகள் அவனைச் சிதற அடிக்கின்றன. மனிதன் ஒன்றை மறந்து விடுகிறான்.  மனிதனின் சுயநலமே எல்லாவற்றுக்கும் காரணம். இன்னும் பல வசதிகள் வாழ்க்கையில் பெருகாதா என்ற ஆதங்கம், பேராசை, இதனால்  கடவுளைப் பற்றிய சிந்தனையே மறந்து போகிறது. மனிதனுடைய நாட்டமெல்லாம் சுகம் தரும் விஷயங்களிலேயே அலைகிறது. மனம் தான்  இத்தனை பாடுபடுத்துகிறது.

இல்லற தர்மத்தைக் கடைப்பிடிப்பதோடு நம் கடமைகளை ஆற்றும் போது கடவுள் சிந்தனையும் வளர வேண்டும் என்று சாத்திரங்கள் நமக்கு  விதிக்கின்றன என்பதை மறந்து விடக்கூடாது. ஆன்மீக சாதகன் இவைகளையெல்லாம் கருத்தில் கொண்டு செயல்பட வேண்டும்.


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar