Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » பக்தியும் கல்வியும்
 
பக்தி கதைகள்
பக்தியும் கல்வியும்

இறைவன் மீது தணியாத காதல் கொண்டு பக்தியால் பரவச நிலைமிகுந்திட பக்திப் பாடல்கள் பற்பல பாடி நிலைத்த புகழ் கொண்டவர்கள் நாயன்மார்கள், ஆழ்வார்கள் என்பதை அறிவோம். இவர்களில் எல்லா இனத்தவரும் அடங்குவர். ஒரு இனத்தவர் என்று இவர்களில் காண முடியாது. பக்திக்கு இனபேதம் கிடையாது. அதுபோல கல்விக்கும், கற்பதற்கும் வேற்றுமை கிடையாது. இரண்டும் பொது உடைமை என்பதை உணர்ந்தால் கல்வியால் உயர்சிறப்புகளும் பக்தியால் நற்சக்தியும் நிலையாகி உலகில் உயர்நிலை பெறலாம்.

நீலகண்ட யாழ்பாணர் ஞானசம்பந்தரோடு இணைந்து ஒவ்வொரு தலமாகச் சென்று பாடல்கள் பாடியும் யாழ்வாசித்தும் இணைந்து செயல்பட்டதும் பெரியபுராணம் வாயிலாக நாம் அறிகிறோம். திருப்பாணாழ்வார் பக்தியால் ஸ்ரீரங்கத்து ரங்கநாதர் சன்னிதிக்கு கோயில் பட்டாச்சார்யார் தோளில் சுமந்து சென்றதை வரலாறு கூறும். பக்திக்கு உள்ள சக்தியை வெளிப்படுத்தியதை உணர்ந்து மனப்பூர்வமாக பக்தி செய்தால் இறைவனே தன் பார்வையை பக்தன் மேல் செலுத்துவது பல்வேறு வரலாறுகள் உணர்த்துகின்றதை நினைவில் கொள்ளலாம். எத்தனையோ பக்திமான்கள் கல்விமான்கள் தோன்றி தத்துவ போதனைகள் தந்துள்ளனர். அவர்களில் ஒருவரை மட்டும் சான்றாகக் கொண்டால், பக்தியும் கல்வியும் இணைந்த ஞானியைப் பற்றி அறிய வேண்டியது அவசியமாகும்.

கேரளத்தில் திருச்சூருக்கு அருகிலுள்ள திருக்கண்டியூரில் காலணிகள் தைக்கும் தொழிலாளி ஒருவர் இறைபக்தியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டவர். அவருக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்த சுமார் இரண்டாண்டுக்குள் தந்தையோ இறைவனடியைச் சேர்ந்துவிட்டார். தந்தையின் பக்தியும் தனயனை விடாது பற்றிக் கொண்டதில் ஆச்சரியமில்லை. அவ்வூரில் உள்ள சிவன் கோயிலில் விட்டுவிட்டு தாயார் வேலைக்குச் செல்வது வழக்கம். அக்கோயிலில் இருந்த குழந்தையை கோயில் பணியாளர்கள் கண்காணித்து தாயார் வந்ததும் ஒப்படைப்பது வழக்கமாக அமைந்தது.

அக்கோயிலில் உள்ள நம்பூதிரிகள் தினமும் வேதபாராயணம் செய்து வந்ததை அக்குழந்தை உன்னிப்பாகக் கவனித்துக்கேட்கும். காலம் உருண்டோடியது. சிறுவன் கேள்விஞானத்தால் சிறந்தவனாக விளங்கினான். ஒரு சமயம் வேத பாராயணம் நடந்தபோது சிலர் பதங்களை தவறாகக் கூறினர். வேதம் ஓதுதலில் சப்தமும், பதமும் மாறியுள்ளதைக் கேட்ட சிறுவன் தவறைக் கூறினன். அவர்கள் உனக்குத் தெரியுமா? அவ்வாறாயின் சரியாகச் சொல் பார்ப்போம் என்றனர். வேதம் ஓதுதலில் பதங்களும், ஒலி ஏற்ற இறக்கமான சப்தமும் மிக முக்கியம். இதை அன்றாடம் அனுபவித்து வந்ததால் கல்வியில் ஞானமுடையவனாகத் திகழ்ந்து தவறைச் சுட்டிக்காட்டிதானே சரியான பதங்களோடு சப்தத்துடன் கூறி அனைவரையும் வியக்க வைத்தான்.

சில நம்பூதிரிகள் பொறாமையால் செருப்புத் தைப்பவனின் மகன் தமது தவறைச் சுட்டிக்காட்டி திருத்துவதா என்றும், ஒருவேளை தம்மைவிட மேலானவனாக அமைந்துவிட்டால் தமக்கு இழுக்கெனக் கருதினர். இதனால் சிறுவனுக்குத் தரும் உணவில் ஒரு மருந்தைக் கலந்து தந்து விட்டனர். அவ்வுணவை உட்கொண்ட சிறுவன் பேசும் திறன் இழந்து ஊமையாகிவிட்டான். மகனின் ஊமை நிலை கண்டு பதறிய தாய் வைத்தியரிடம் கூட்டி வர, அவர் தந்த சிகிச்சையாலும், இறைமீது கொண்ட பக்தியின் தன்மையாலும் தொடர் சிகிச்சை பலனளித்தது. பேச்சாற்றல் கைகூடியது.

இதன்பின் பற்பல தலங்களுக்குச் சென்றும் பல்வேறு மொழி பேசும் தலங்கள் சென்றும் புலமை மிக்க ஆசானாகினான். தாய்மொழியாம் மலையாளம் தவிர்த்து தமிழ், தெலுங்கு, கன்னடம் வடமொழி எனப்படும் சமஸ்கிருதம் போன்ற வற்றை கற்றுத் தேர்ந்தான். நற்கவிஞனாக விளங்க ஒரு குருவிடம் சேர்ந்து கற்று ராமாயணம், மகாபாரதம் முற்றாக கற்றறிந்தான். குருவின் ஆணைப்படி, ஏற்கனவே தெய்வ பக்தியுள்ள அவ்விளைஞன் மிக்க ஆன்மீக உணர்வினால் மிகச் சிறந்த பக்திமானாகி விட்டான். அவனது உள்ளத்து பக்தியை குருவானவர் தூண்டுகோலாக அமைந்து ஞானச்சுடரைத் தூண்டி விட்டு பிரகாசம் அடையச் செய்தார்.

அவ்விளைஞன்தான் பிற்காலத்தில் துஞ்சத்து ராமானுஜ எழுத்தச்சன் எனும் புகழ் பெற்ற கவிஞனாக விளங்கியவர். மகாபாரதம் ராமாயணத்தைத் தனது தாய்மொழியாம் மலையாளத்தில் எழுதினார். இவரது நூல்களை கேரளத்தில் போற்றி வழிபடுகின்ற தன்மை பெற்றது. இவரை கல்விக் குருவாக போற்றி வணங்குகின்றனர். பல கவிதைகள், காவியங்கள் படைத்தார். துஞ்சன் நம்பு என்ற இடத்தில் தங்கி பக்தியால் பல நூல்கள் எழுதினார். அவர் தங்கியிருந்த இடத்தில் இன்றும் மக்கள் அவரைக் குருவாக மனத்திலெண்ணி தங்கள் பிள்ளைகட்கு முதல் கல்விப் பயிற்சியாம் வித்யா ரம்பம் என்ற நிகழ்வை நடத்துவதைக் காணலாம்.

இதன் மூலம் பக்திக்கும் கல்விக்கும் பேதங்களற்ற பொதுவுடைமை மட்டுமே மேலோங்கியிருப்பதை நிதர்சன உண்மையாக உணரலாம். பக்தியும் கல்வியும் எல்லோரும் ஏற்று சிறப்புடைய யாவர்க்கும் நிமலனருள் நிறையட்டும். வல்லமை வளரட்டும்.

வாழ்க வையகம்! வளர்க அன்புநெறி!
பக்தியும் கல்வியும் அமைதிக்கான இரு கண்கள்!!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar