|
இரக்க குணப் பெண்மணி ஒருத்தி தினந்தோறும் இலையில் இரண்டு இட்லிகளை வைத்து யாரேனும் எடுத்துக் கொள்ளட்டும் என்று வீட்டு சுற்றுச் சுவர் மேல் வைப்பாள்.
அவ்வழி திரியும் ஒரு கூனல் முதுகுக் கிழவன் அதை எடுத்துக் கொண்டு, நீ செஞ்ச பாவம் ஒங்கிட்டேயே இருக்கும்; நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும்! என்று தினந்தோறும் சொல்லிக் கொண்டு போனான்.
ஆரம்பத்தில் எந்த நோக்கமும் இல்லாமல் இட்லியை வைத்தவளுக்கு, தினமும் இட்லி வைக்கிறேன்; எடுத்துக்கொண்டு எதையோ முனங்கிட்டுப் போறான்; ஒருநாள்கூட, இட்லி நல்லா இருக்கு! ன்னு பாராட்டவோ, ரொம்ப நன்றி! ன்னு சொல்லவோகூட தோணலையே அவனுக்கு! என்ற எண்ணம் ஒருநாள் எழுந்தது. அதுமுதல் அவள் தினமும் இட்லியை வைத்தாலும் அதனை எடுக்கும் கிழவனின் நன்றிகெட்ட தனத்தை வெறுக்கத் தொடங்கினாள்.
நாளடைவில் அவளது வெறுப்பு கோபமாக மாறி, ஒருநாள் கொலை வெறியாகவே மாறியது!
எனவே, அன்றையதினம் இட்லியில் விஷம் கலந்து வைத்து அவனை சாகடிக்க நினைத்தாள். ஆனால் விஷ இட்லியை வைத்தபோது, அவளது மனம் ஏனோ கலங்கியது; கை நடுங்கியது அவன் அப்படி இருந்தாலும், நாம் ஏன் இப்படியாகணும் னு அந்த விஷம் கலந்த இட்லியை சாக்கடையில் எறிந்துவிட்டு வேறு நல்ல இட்லியை மதில் மேல் வைத்துவிட்டு மனம் அமைதியானாள்.
வழக்கம்போல் கிழவன் வந்தான். இட்லியை எடுத்துக் கொண்டு, எப்போதும் சொல்லும் வார்த்தைகளையே சொல்லிக் கொண்டு சென்றான். அந்தப் பெண்மணிக்கு ஆத்திரம் தலைக்கேறியது!
அன்று மதியம் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு, கதவைத் திறந்தாள். அவள் மகன் கசங்கிய உடையுடன் தள்ளாடியபடி நின்றிருந்தான்.
வேலையோடுதான் திரும்புவேன் என்று சொல்லி விட்டு ஒரு மாதம் முன்பு வேலை தேடி வீட்டை விட்டுச் சென்றவன் அவன். இப்போது அவன் நிலையைப் பார்த்தவள், பதறினாள்.
அம்மா, வீட்டுக்குத் திரும்பி வரும் போது என் பர்ஸ் காணாமப் போயிடுச்சு. கையில வேற காசே இல்ல. தெரிஞ்சவங்க யாரும் கண்ணுல படல, மணிக்கணக்கில் நடந்து வந்துட்டே இருந்தேன். நல்ல வெயில் அகோரப் பசி வேற. அப்படியே மயங்கி விழுந்துட்டேன். கண் விழிச்சுப் பாத்தப்போ, யாரோ ஒரு கூனல்முதுகுக் கிழவன் என்னைத் தூக்கி உட்கார வச்சு, தன்கிட்டே இருந்த இரண்டு இட்லியைக் கொடுத்து என்னை சாப்பிடச் சொன்னான். அதைச் சாப்பிட்ட பிறகுதான் எனக்கு உசுரே வந்தது. அவனுக்கு நன்றி சொல்லிட்டு, அப்படியே தள்ளாடித் தள்ளாடி வந்து சேர்ந்துட்டேன்!
மகன் சொன்னதைக் கேட்டதும், பேயறைந்தது போல் அதிர்ச்சி அடைந்தாள்! விஷம் கலந்த இட்லியை கிழவனுக்குக் கொடுத்திருந்தால்... அது என் மகனுக்கே எமனாக ஆகியிருக்குமே, ஆண்டவா! என்று நினைத்து அவளது உள்ளம் பதைபதைத்தது. கண்கள் பனித்தன.
நீ செஞ்ச பாவம் ஓங்கிட்டேயே இருக்கும். நீ செஞ்ச புண்ணியம் உன்னிடமே திரும்பும் கிழவனுடைய முனகலின் பொருள் இப்போது நன்கு புரிந்தது.
செய்கிற தர்மம் என்று நம்மை ஏதாவது ஒரு ரூபத்தில் காக்கும். ஏதேனும் ஒரு தர்மம் செய்யும் சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள். வாழ்வின் பெரும்பாலான பிரச்னைகளில் இருந்து தப்ப ஒரே வழி, முகம் கோணாத தர்மமே என்பதை உணருங்கள். |
|
|
|