|
உலகில் உள்ள பல பிறப்புகளில் மக்கட் பிறப்பே மாபெரும் சிறப்புடையதாகும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. இதனால் பல புலவர் பெருமக்கள் மானிடப்பிறவியை பற்றி புகழ்ந்து பேசி உள்ளனர். எண்ணரிய பிறிவியதனில் மானிடப் பிறவிதான் யாதினும் இனிதுகாண் எனக் கூறுவர் தவமுனிவராம் தாயுமானவர். எண்ணிலாத நெடுங்காலம், எண்ணிலாத பல பிறவி எடுத்தே இளைத்து இங்கு அவை நீங்கி மானிடத்தில் வந்து உதித்து என்று அருளினார் சிதம்பர ஸ்வாமிகள்.
ஔவை மூதாட்டியார் அரிது அரிது மானிடராதல் என அறிவுறுத்தினார். இங்ஙனம் மானுடப்பிறப்பின் பெருமை குறித்து கூறும் ஔவைப் பெருந்தகை அவ்வுருவில் பிறந்து விட்டால் மட்டும் பயன் இல்லை. தானமும் தவமும் தான் பெறல் அரிது என்று கூறியுள்ளார். இதனால் நாம் அறிய வேண்டுவது முதலில் தானம் புரிந்து பின்னரே தவத்தை மேற்கொள்ள வேண்டும் என்பதாகும்.
இதையுணர்ந்த பொய்யாமொழிப் புலவர் இல்லற இயலிலேயே ஈகையைப் பற்றிய ஓர் அதிகாரத்தை அமைத்துள்ளார். ஈகை எனினும் கொடை எனினும் ஒன்றேயாகும். ஈகையாவது எது என்பதை வறியராய் ஏற்றார்க்கு மாற்றாது கொடுத்தல் என்று பரிமேலழகர் அழகாய் கூறுவார். அதாவது ஏழையாய் வந்தவர்களுக்கு இல்லை என்று கூறாது ஈதல் என்று பொருள் படுவதாகும். ஆதிசங்கரரும் தேயம் தீன ஜனாய சவித்தம் என்று கூறி உள்ளார்.
வறியவர்க்கு ஒன்று ஈவதே ஈகை, என்றார் வள்ளுவர். ஆனால் மற்றவர்க்கு ஈவது ஈகையாகாதோ எனில் ஆகாது. பிறர்க்கு ஈவது என்பது பின்னால் ஏதோ நன்மை நமக்கு ஏற்படக்கூடும் என்ற குறிக்கோளை மனதில் கொண்டு செய்யப்படுவதாகும். இங்ஙனம் திருப்பிக் கொடாதவர்க்குக் கொடுக்காது, திருப்பிக்கொடுப்பார்க்கு கொடுத்தல் கடன் ஆகுமே யன்றி கொடையாகாது. மேலும் இன்னின்னார்க்கு கொடுக்க வேண்டும். இன்னின்னார்க்கு கொடுத்தல் கூடாது எனவும் நம் முன்னோர்கள் கூறிச் சென்றுள்ளார்கள்.
தாய் தந்தையர், ஆசிரியர், புரோஹிதர், மாண்புடையார்கள், நண்பர்கள், தத்தமக்குரிய முறையிலும், ஒழுங்கிலும் தவறாது நடப்பவர்கள், வறுமையுற்று வாடுவோர், தம்மை காப்பவர் இன்றி அநாதையாக உள்ளவர்கள். ஆபத்துக்காலத்தில் உதவி புரிந்தவர்கள், ஆகியவர்கட்குக் கொடுக்க வேண்டும்.
எதிரில் ஒரு பேச்சும், மறைவில் ஒரு பேச்சும் பேசுகின்றவர், ஆசை மிகுந்தவர், பரந்த கேள்வியறிவு இல்லாதவர், பொருளைக் கவரும் திருடர், காமுகர், தீங்கு இழைக்கும் தீயவர், கர்வங்கொண்டு திரிபவர் ஆகியோர்க்கு ஈதல் கூடாது.
இல்லாதவர் நம்மை வந்து அடுத்து வேண்டுவது கூட இழிவு அன்று. அந்த தரணம் ஈயேன் என்று கூறுவதுதான் மிகவும் இழந்ததாகும். இது குறித்தே கர்ணன் கண்ணனிடம் வரம் வேண்டிய போது இல்லை என்று இரப்போர்க்கு இல்லை என்று உரையா இதயம் எனக்கருள் என்றே வேண்டி நின்றான். இது கருதிய வள்ளுவர் இவன் என்னும் எவ்வம் உரையாமை ஈதல் என்று இயம்பினார். இதில் மற்றும் ஒரு உட்பொருள் உள்ளது அதாவது தன்னிடம் வந்த வறியவன் ஐயா, என்னிடம் உண்ண உணவும், உடுக்க உடையும் இல்லையே என்று கூறுவதற்கு முன் அவனது குறிப்பு அறிந்து கொடுத்தலே சிறந்தது ஆகும் என்பதாகும். இன்னமும் இக்கொடை சிறப்பை விளக்க வந்த பெரியோர்கள் நம் முன் வந்து யாசித்தவர்கள் பிறரிடம் போய் இல்லை, எங்கட்கு இடுங்கள் என்று கூறாத வகையில் ஈதல் வேண்டும், அதாவது பொருள் இல்லாத வறுமை நிலையினை அறிந்து தங்கள் இழிநிலையினை எடுத்து இயம்பும் முன் தாராளமாக கொடுத்தல் நல்லது என்பதாகும்.
கொடைச் சிறப்பால் செல்வம் எப்பிறப்பிலும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் என்பது முன்னோர் கருத்தாகும். செல்வத்தையோ ஏனையப் பொருள்களையோ பிறர்க்கு ஈயாது சேமித்துச் சேமித்து நிதி சேமிக்கும் இடங்களில் சேர்த்து வைத்தால் அஃது இம்மைக்கும் மட்டும் தான் பயன் தருமே அன்றி, மறுமைக்கு பயன் தராது. ஆனால் ஏழை, எளியவர்க்குக் கொடுத்து வந்தால் அது நிதி சேமிக்கும் இடத்தில் சேமித்து வைத்தாற்போன்று பாதுகாப்புடன் இருந்து மறுமையிலும் அப்பொருள் நற்பயனைத் தருவதாகும். அற்றார் அழி பசிதீர்த்தல் அஃது ஒருவன் பெற்றான் பொருள் வைப்புழி என்கிறார் வள்ளுவப் பெருந்தகை.
அப்படி பிறர்க்குக் கொடுத்து உதவி வருபவனைத் தீய நோய்கள் தீண்டுவதில்லை, பசியும் அவனைப் பற்றாது. இத்தகைய வாய்ப்பு கொடையால் விளைவதால் மக்கள் மேற்கொள்ள வேண்டியது கொடையேயன்றோ? மக்கள் இங்ஙனம் கொடுக்காமல் பொருளை வைத்து இறுதியில் இழந்து விடுகின்றனரே! பிறர்க்கு ஈவதனால் இன்பம் உண்டு என்பதை உணராமல் இருக்கின்றனரே!
ஈந்து உவக்கும் இன்பம் என்றல்லவோ வள்ளுவர் கூறுகிறார். இதையே அகநானூறு ஈதல் இன்பம் என்று இசைக்கின்றது. செல்வத்தைப் பெற்ற பயன் ஈதலே அன்றோ? அங்ஙனம் ஈயாது நாமே துய்ப்போம் என்று இருந்தால் அதைவிட மடமை இருக்க முடியாது. இதையே பொதுமறை
ஈதல் இசைபட வாழ்தல் அதுவல்லது ஊதியம் இல்லை உயிர்க்கு.
என விளக்குகின்றது. உலகில் யாசிப்பதைப் போன்று துன்பம் தருவது வேறு ஒன்றும் இல்லை. ஆனால் அதைவிட துன்பம் தருவது, பிறர்க்குக் கொடுக்காத நிலையேயாகும். ஈயாத நிலை மிக மிக இழிந்த நிலையாகும். இந்நிலையினை எவரும் வெறுத்து ஒதுக்கியுள்ளனர். ஆகவே நம்மால் இயன்றளவு நாமும் பிறர்க்கு ஈந்து புகழ் அடைதலே மக்கட் பிறப்பின் மாண்பாகும். |
|
|
|