|
யோகங்களில் சிறந்ததான பக்தி யோகத்தை பல வழிகளில் நாம் கடைப்பிடிக்கலாம். இறைவன் மேல் உள்ள தீவிர விசுவாசமே பக்தியாகும். ஆதிசங்கரர் ஆண்டவனை அடையும் சுலபமார்க்கங்களாக நித்ய தெய்வ வழிபாடு செய்வதையும், இறைவன் பெயரை எப்போதும் உச்சரித்து பூஜித்து கொண்டிருப்பதையும் குறிப்பிடுகின்றார்.
அதன்படியே அவர் வாழ்ந்து வழிகாட்டியாக திகழ்ந்தார் என்பது நூல்கள் மூலம் தெரிய வருகின்றது. இவை யாவும் பக்தியின் மார்க்கங்கள்.
நாம் செய்யும் நித்ய கர்ம அனுஷ்டானம், பகவானின் நாமோச்சாரணம் ஆகியவை நம் மனதை மட்டுமே ஒருமுகப்படுத்தி ஆண்டவன் மீது பக்தி செய்ய வைக்கின்றது. ஆனால் பஜனை என்ற இசையால் ஆண்டவனைப் பாடும் போது நம் மனமும் இன்புற்று கேட்பவர் அனைவரையும் இசையில் லயிக்க வைத்து கூடவே அவர்களுக்கு பக்தி பெருக்கத்தையும் அளிக்கின்றது. இவ்வாறு பாடித் தொழுவதால் மற்றவர்களையும் பக்தி மார்க்கத்திற்கு அழைத்து சென்று புண்ணியமும் நமக்கு கிடைக்கின்றது.
ஒருவன் தனியாக தியானிப்பதன் மூலம் அவன் மனது ஒருமுகப்படுகிறது. அவன் பக்தியில் லயித்து இறையுணர்வு எய்துகிறான். ஆயின் அதே ஒருவன் இறைவனை துதித்துப்பாடும் போது அதை கேட்கும் அனைவரது மனமும் ஒருமுகப்பட்டு, அனைத்து உள்ளங்களும் பக்திக் கடலில் திளைக்க வழி ஏற்படுகிறது. இதனால் தாமும் உய்து மற்றவரும் உய்ய ஏதுவாகிறது.
இறைவனே இசை வடிவினன் என்பது நாதமயமான இறைவன் என்பது நம் முன்னோர்கள் வழங்கியதில் இருந்து நன்கு புலப்படும். எனவே தான், நன்குணர்ந்தவர்கள் இறைவனின் அருள் பெற இசையால் அவனைப் பாடி பரவசமுற்றனர்.
ஆழ்வார்களுடைய பாசுரங்களும், தேவார திருவாசகமும், அருணகிரிநாதரின் திருப்புகழும், இராமலிங்க அடிகளின் திருவருட்பாவும், இதற்கு மிகச் சிறந்த எடுத்துக்காட்டுகளாகும். இசையின் பெருமையை நன்குணர்ந்த நாயன்மார்களும், ஆழ்வார்களும் இறைவன் மீதான பாமாலைகளை இன்னிசையோடு வழங்கினர்.
நாலாயிர திவ்யப் பிரபந்தம் எனும் வைணவத் திரட்டு அழகிய இனிய பக்தி பாடல்களை கொண்ட ஓர் அற்புத இசைக் களஞ்சியமாகும். மேலும், நாலாயிர திவ்ய பிரபந்த பாடல்களுக்கு நாதமாக விளங்கக் கூடிய பண்களை அமைத்த காரணத்தினால் இயற்பெயராகவும் வழங்கலாயிற்று.
சுந்திரமூர்த்தி நாயனார் ஏழிசையில் இசைப் பயனாய் என்பதன் மூலம் இறைவன் இசைவடிவினன் என்பதை உணர்த்துகின்றார்.
பக்திக்கு இசை பிரதானமானது. எனவேதான் திருவாய்மொழி பாசுரம்.
ஆடியாடி அகங்கரைந்து இசைப்பாடிப் பாடி கண்ணீர் மல்கி என்று உரைக்கின்றது. இறைவனைப் பற்றி நினைப்பதும், பேசுவதும் இன்பம் என்றால் அவன் புகழை இசையோடு கலந்து பாடுவது பேரின்பமாகும் என இசை அறிஞர்கள் உரைக்கின்றனர்.
ஆண்டவன் மேல் அளவு கடந்த பக்தி செய்ய இசையானது முக்கியமானது என்பதை தியாகராஜர், முத்துசாமி தீட்சிதர், சாமா சாஸ்திரிகள், அன்னமாச்சார்யா ஆகிய இசைமேதைகள் உணர்ந்து இறைவனை நினைத்து உருகி கண்ணீர் மல்கி அழுது பாடிப் பரவசமடைந்து அனைவருக்கும் வழிகாட்டியாய் திகழ்கின்றனர். அவர்களுடைய கீர்த்தனங்கள் பக்தி இசைகளே.
மேலும், மீரா பஜன், புரந்தரதாசர், பக்த ராமதாசனின் கீர்த்தனங்கள் ஆகியவையும் பக்தி பிரவாகங்களேயாகும் என்பது நாடறிந்த உண்மையாகும்.
இசையால் ஆண்டவனை வழிபடும்போது உள்ளமும் எண்ணமும் இணைந்து இறைவன் பால் லயித்து பக்தி பரவசம் ஏற்படுகிறது. இவ்விசையானது அனைவரையும் நெகிழ வைக்கிறது. திருவாசகம் இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாகும்.
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி என ஆண்டாள் தம் திருப்பாவையில் நாராயணனை பாடி பரவசம் எய்தும் முறையை நமக்கு அருளுகின்றார்.
எனவே நாமும் இன்னும் ஒருபடி மேலே சென்று பாதையாத்திரையாகவும், மலைகளில் படியேறியும் பல பஜனைக் குழுவினர்களுடன் பக்திப் பாடல்களைப் பாடிக் கொண்டே சென்று இறைவனை வழிபடுவதால் இடையில் மலைகளில் உள்ள இயற்கை மூலிகைகளால் நமது தேக ஆரோக்கியம் அதிகரிக்கப் பெற்று, நல்ல சுவாசம் ஏற்பட்டு, அதனால் மனமகிழ்ச்சி அடைந்து இறைவனைத் தொழுவதால் பேரானந்தம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.
நாமும் இதனைக் கடைபிடித்து திருமலையேறி மக்களுடன் பாடி இறைவனை தரிசித்து இன்புறுவோமாக.
ஸ்ரீநிவாஸாய மங்களம். |
|
|
|