Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
மேம்படுத்தபட்ட தேடல் >>
 
இன்று எப்படி?
 

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
 

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
 

முதல் பக்கம் » பக்தி கதைகள் » கோபம் தவிர்!
 
பக்தி கதைகள்
கோபம் தவிர்!

கோபமே பாவங்களுக்கெல்லாம் தாய், தந்தை என்கிறது அறப்பளீசுர சதகம். கிட்டத்தட்ட ஒரு வார காலத்துக்கு அமைதி வழியில், பொதுமக்களின் ஆதரவோடு நடந்த ஒரு போராட்டம், எவரோ ஒருவரின் கோபத்தால், அடங்கா வெறியால் திசை மாறிப்போனதை சமீபத்தில் நாம் பார்த்திருக்கிறோம்.

தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால்
தன்னையே கொல்லும் சினம்

என்கிறார் திருவள்ளுவர்.

ஒருவன் தன்னைத்தானே காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்றால், கோபம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையெனில், அவனுடைய கோபம் அவனையே கொன்றுவிடும் என்பது இந்தத் திருக்குறளின் பொருள்.

கோபம் அத்தனை பொல்லாததா? நிச்சயமாக! கோபம் என்கிற கொடும் வசீகரத்துக்குள் விழுந்து தங்கள் அழிவைத் தாங்களே தேடிக்கொண்ட அசுரர்கள் இருக்கிறார்கள்; சாபத்துக்கு ஆளான தேவர்கள் உள்ளனர்; அவ்வளவு ஏன்... கோபவயப்பட்டதால், மாறாப் பழிக்கு ஆளான ரிஷிகளும் உள்ளனர்.

புராணங்களிலும் இதிகாசங்களிலும் இதை நிரூபிக்கும்விதமாக எத்தனையோ கதைகளும் உள்ளன. அப்படி ஒரு நிகழ்வு மகாபாரதத்தில்...

துரோணரின் பர்ணசாலை, காலை இளங்கதிர், உயர்ந்த மரங்களின் இலைகளை எப்படியோ தாண்டி நுழைந்து வந்து, பர்ணசாலையின் மேற்கூரையின் மேல் விழுந்துகொண்டிருந்தது. மாணவர்கள் பர்ணசாலை வாசலில் காத்துக்கொண்டிருந்தார்கள்.

அங்கு நிறைந்திருந்த நிசப்தத்தைக் கலைக்கும்விதமாக பசுங்கிளி ஒன்று கீச்.. கீச்... என ஒலி எழுப்பியபடி பறந்து சென்றது. துரோணர் வெளியே வந்தார். மாணாக்கர்கள் வணங்கினார்கள். அவர் ஆசி கூறுவதுபோல கைகளை உயர்த்தினார்.

துரோணரின் முகம் சிந்தனையில் ஆழ்ந்திருந்தது. மாணவர்கள், குருவின் வாயில் இருந்து உதிரும் வார்த்தைக்கா*க் காத்திருந்தார்கள். முதல்நாள் பத்து தத்துவங்களைக் கற்றுக்கொடுத்திருந்தார்... அவற்றைக் குறித்தே குருநாதர் கேட்கப்போகிறார் என்பதும் அவர்களுக்குத் தெரிந்திருந்தது.

ஹூம்.... பெருமூச்சு ஒன்று துரோணாச்சார்யாரிடம் இருந்து எழுந்தது. சரி.... நேற்று நான் *புத்து தத்துவங்களைக் கூறி படித்துவரச் சொன்னேனே... நினைவிருக்கிறதா?

சிஷ்யர்கள் தலையசைத்தார்கள்.

எங்கே... சொல்லுங்கள் பார்க்கலாம்?
துச்சாதனா.... நீயே முதலில் சொல்!

துச்சாதனன் சற்று முன்வரிசைக்கு வந்து நின்றான். வாயைத் திறந்தாலும், நினைவு திறக்க மறுத்தது. இத்தனைக்கும் இரவெல்லாம் குருநாதர் கற்றுக் கொடுத்திருந்த பத்து விதிகளையும் நன்கு அசைபோட்டு வைத்திருந்தான். ஆனால், ஒரு வார்த்தைகூட ஞாபகத்துக்கு வரவில்லை.

குருதேவரின் முகம் கோபத்தால் லேசாக சிவக்க ஆரம்பித்திருந்தது. ம்.. சொல்! என்று ஓர் அதட்டுப் போட்டார். ஆஜானுபாகுவான தோற்றமுடைய துச்சாதனன், குருவின் முன்பாக கூனிக்குறுகி நின்றான்.

வேறு யாராவது? குருவின் குரல் ஓங்கி ஒலித்தது. நகுலா! நீ சொல்!

நகுலனுக்கு நடுக்கமெடுத்தது. துச்சாதனனுக்கு ஏற்பட்ட அதே சிக்கல். அது... அது...

என்ன அது... அது...? ஏய்.... நீ வா... முன்னால் வா... சொல்!

அடுத்து அவர் அழைத்த அரசகுமாரனோ, குருவின் கடுமையான குரல் ஒலித்ததுமே கலங்கி அழ ஆரம்பித்துவிட்டான்.

இப்போது புரிகிறது. ஒருவருமே நான் சொன்ன தத்துவங்களின் அர்த்தத்தை உள்வாங்கிக்கொள்ளாமல், வெறுமனே மனனம் செய்திருக்கிறீர்கள். நான் கேட்டதும் அசைபோட்ட அத்தனையும் மறந்துபோயிருக்கிறது. சரி.... இறுதியாக.... என்ற துரோணர் மாணவர்கள் அத்தனைபேரையும் அளப்பதுபோல் பார்த்தார். தர்மா... நீ சொல்!

தர்மன் முதல் தத்துவத்தைத் தங்குதடையில்லாமல் சொன்னான். இரண்டாவது தத்துவத்தை ஆரம்பித்த அவன் அதை முழுமையாகச் சொல்லவில்லை; மென்று விழுங்கினான். துரோணரின் முகம் கோபத்தில் உக்கிரம்கொள்ளத் தொடங்கியது. எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்க வேண்டிய குரு துரோணராலேயே தன் கோபத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கீழே கிடந்த மரக்குச்சி ஒன்றை எடுத்து தர்மனை அடிக்க ஆரம்பித்தார். அவர் அடிக்கிற அடிகளை கைகளைக் கட்டிக்கொண்டு, பதில் பேசாமல் அமைதியாக வாங்கிக்கொண்டிருந்தான் தர்மன்.

அடித்துக்கொண்டே இருந்த துரோணருக்கு தர்மனின் அமைதியான முகத்தைப் பார்க்கப் பார்க்க, இதில் ஏதோ தவறு இருக்கிறது எனப்பட்டது. அடிப்பதை நிறுத்திவிட்டு யோசிக்க ஆரம்பித்தார். இவன் எதிர்காலச் சக்கரவர்த்தி, இவன் நினைத்தால் ஒரே ஓர் ஆணையில் எனக்கு மரண தண்டனை வழங்க முடியும். அப்படிப்பட்டவன் என் கோபத்துக்குக் கொஞ்சம்கூட மனக் கலக்கமுறாமல் அமைதியாக இருக்கிறானே... நான் கற்றுக்கொடுத்தவற்றில் முதல் விதி, எப்போதும் உண்மையாக இரு! என்பது, இரண்டாவது கோபத்தைக் கட்டுப்படுத்து!... முதல் விதியைச் சொல்லிவிட்டான். இரண்டாவதும் அவனுக்குத் தெரிந்திருக்கிறது. ஆனால் அதைச் சொல்லாமல் மென்று விழுங்கிறானே.. ஏன்? என்று யோசித்தவருக்கு, சட்டென்று மூளையில் ஏதோ உறைத்தது!

ஆமாம்! தனது அறிவீனத்தை மிக அற்புதமாகச் சுட்டிக்காட்டிவிட்டான் தர்மன் என்பதை உணர்ந்தார். அவனது நேர்மையும், ஒரு தத்துவத்தை அதன் அர்த்தத்தோடு கற்றுக்கொண்ட பாங்கும் அவரை வியப்பில் ஆழ்த்தியது.

தர்மா எந்த விதியையும் பின்பற்றுபவனே அதை மற்றோருக்கு உரைக்கத் தகுந்தவன் என்பதை எனக்கு உணர்த்திவிட்டாய்! என்று கூறி, அவனைக் கட்டியணைத்துக்கொண்டார்; மனதாரப் பாராட்டினார்; பரிசுகள் வழங்கினார்.

அனைத்தும் முடிந்ததும் தர்மன் மெதுவான குரலில் சொன்னான்; குருதேவா.... முதல் தத்துவத்தைப் பொறுத்தவரை என்னால் ஓர் உதாரண மனுஷனாகவே வாழ முடியும். அதாவது, எப்போதும் உண்மையாக இரு! என்ற விதி. ஆனால், இரண்டாவது தத்துவத்தில் நான் இன்னும் முழுமையாகத் தேர்ச்சி பெறவில்லை என்றுதான் நினைக்கிறேன். இப்போது நீங்கள் அடித்தபோதுகூட எனக்குள் சினம் பற்றி எரியத்தான் செய்தது. அதைக் கட்டுப்படுத்த நான் மிகவும் போராட வேண்டி இருந்தது. எப்படியோ கட்டுப்படுத்திக் கொண்டேன்.

எந்தச் சூழ்நிலையிலும் கோபம் கூடவே கூடாது என்பதை மிக அழகாக துரோணருக்கே உணர்த்திய சம்பவம் இது. யாரோ சொன்னதைக் கேட்டு, சட்டென்று கோபப்பட்டு முடிவெடுத்ததால் ஏற்கெனவே அற்புதமான இரு சீடர்களை அவர் இழுந்திருந்தார்.... ஒருவன் கர்ணன்; மற்றவன் ஏகலைவன்.

அருளா! நான் வேண்டுதல் கேட்டருள் புரிதல் வேண்டும்; அணுத்துணையும் சினம் காமம் அடையாமை வேண்டும் என்கிறார் வள்ளலார். உலகிலேயே மிக மிகச் சிறியது அணு. அந்த அளவுக்குக்கூட தனக்குக் கோபம் வரக்கூடாது என்கிறார் வள்ளலார். அதனால்தான் அவரை மகான் எனக் கொண்டாடுகிறோம். கோபம் தவிர் என்பது வெற்றுச்சொல் அல்ல; மனத்தில் இருத்திக்கொள்ளவேண்டிய தத்துவம். மனிதனால் கட்டுப்படுத்த முடியாதது எதுவும் இல்லை. கோபமும் அப்படித்தான். கட்டுப்படுத்துவோம்... அன்புக்குக் கட்டுப்படுவோம்!


 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar