|
ஒருமுறை புத்தர்பிரானிடம் அவருடைய சீடர், மனம் தெளிவடைய என்ன வழி? என்று கேட்டார். புன்னகைத்த புத்தர், அப்போதைக்கு பதிலேதும் சொல்லவில்லை. ஓரிரு நாட்கள் கழித்து புத்தரும் சீடர்களும் பயணம் மேற்கொண்டார்கள். வழியில் ஓரிடத்தில் தங்கி இளைப்பாறினார்கள். அந்த இடத்துக்கு அருகில் சிற்றோடை ஒன்று ஓடியது. புத்தர், தன்னிடம் கேள்வி கேட்ட சீடனை அழைத்து, தனது தாகம் தணிக்க ஓடையில் இருந்து நீரெடுத்து வரும்படி பணித்தார். சீடனும் ஓடைக்குச் சென்றான். அந்தநேரம் பார்த்து மாட்டுவண்டி ஒன்று ஓடையில் இறங்கிக் கடந்து சென்றது. அதனால் தண்ணீர் கலங்கிவிட்டது. ஆகவே, நீர் சேகரிக்காமல் திரும்பிவந்தவன், புத்தரிடன் விஷயத்தைச் சொன்னான். சிறிது நேரம் கழித்து சீடனை மீண்டும் ஓடைக்கு அனுப்பினார் புத்தர்.
இப்போது தண்ணீர் தெளிவாக இருந்தது. சீடனும் பாத்திரம் நிறைய நீர் சேகரித்து வந்தான். அவனிடம் புத்தர் கேட்டார். ஓடை நீர் தெளிவடைய நீ என்ன செய்தாய்? நான் எதுவும் செய்யவில்லை. அதன்போக்கில் விட்டுவிட்டேன் என்றான். இப்போது புத்தர் அவனுக்குப் பதில் சொன்னார்: நம் மனமும் அப்படித்தான். குழப்பம் ஏற்படும்போது அதை அப்படியே விட்டுவிடுவதே நல்லது. சிறிது நேரம் சென்றதும் அது தானே தெளிவடையும். நாம் அதற்காக எந்தப் பயிற்சியும் செய்ய வேண்டியதில்லை. அது, தானே நடக்கும். |
|
|
|