|
முதல் பக்கம் »
பக்தி கதைகள் » நந்தனார் |
|
பக்தி கதைகள்
|
|
சைவ வழிபாட்டில் மிக முக்கியமான சிவபக்தர்களை நாயன்மார்கள் என்று தமிழகத்தில் கூறுவார்கள். அவ்வாறு 63 சிறந்த சிவபக்தர்களை 63 நாயன்மார் என்று அழைப்பர். இவர்களுடைய வரலாற்றை சேக்கிழார் பெருமான் பெரிய புராணம் என்னும் திவ்விய நூலில் எழுதியுள்ளார். இந்த 63 நாயன்மார்களில் ஒருவரே நந்தனார் ஆவார். சோழ தேசத்தில் ஆதனூர் என்ற கிராமத்தில் பிறந்தார். இவர் தாழ்ந்த குலத்தில் பிறந்தாலும் பகவான் சிவபெருமானிடத்தில் மிகுந்த பக்தி கொண்டவர் ஆவார். தோல்களால் ஆன வாத்தியங்கள் செய்து கோயிலுக்கு வழங்குவார். ஒருமுறை திருபுங்கூர் என்ற இடத்தில் உள்ள சிவன் கோயில் வாயிலில் நின்று சிவபெருமானை மனமார வேண்டினார். அவருக்கு கோயிலுக்குள் செல்ல அனுமதியில்லை. ஆனால் அங்குள்ள நந்தி சிவபெருமானின் தரிசனத்திற்கு குறுக்கே உள்ளது. தன் பக்தனின் வேண்டுதலை சிவபெருமான் ஏற்று அந்நந்தியை சற்று விலகி இருக்க ஆணையிட்டார். அதிசயம்! அதேபோல் நந்தியும் சற்று விலகி நின்றது. சிவபெருமானின் திவ்ய தரிசனத்தைப் பெற்றார் நந்தனார். அவ்வூரில் ஒரு குளம் வெட்டினார் நந்தனார். அதற்கு நந்தனார் தீர்த்தம் என்று பெயர் பெற்றது. இக்குளம் வெட்ட பகவான் தன் மைந்தனான பிள்ளையாரை அனுப்பினார் என்று கூறுவார்கள். இக்குளம் கோயிலைச் சார்ந்ததாகும்.
நந்தனார் மிக தீவிர சிவபக்ராய் திகழ்ந்தார். சிதம்பரத்தில் உள்ள நடராஜப் பெருமானை தரிசிக்க ஆவல் தோன்றியது நந்தனாருக்கு. சிவபெருமானின் திவ்ய நடனத்தை காணவும் ஆவல் பெருகியது. தினமும் தான் நாளை சிதம்பரம் போவதாக கூறுவார். ஆனால் அவரால் போக இயலாது. இதனால் அவருக்கு திருநாளை போவார் நாயானார் என்று எல்லோரும் கூறினார்கள். வேதியர் ஒருவரிடம் அவர் அடிமையாக வேளாண்மை செய்து வந்தார். அவ்வேதியர் இவருடைய வேண்டுகோளை ஏற்கவும் மறுத்தார். ஆனால் நந்தனாரோ விடமால் சிறிது காலம் விடுமுறை வேண்டும் என்று சிதம்பர அம்பலத்துநாதனை தரிசிக்க வேண்டும் என்று கூறினார். வேதியர் மிக கடுமையான ஒரு நிபந்தனையை வைத்தார். ஓர் இரவில் பல பயிர்களை பயிர்விக்க வேண்டும் என்று ஆணையிட்டார். அதிசயம்! என்றால் பரமனின் அருளால் ஓர் இரவில் பயிர்கள் வளர்ந்தன. வேதியர் இந்த நிகழ்வு திவ்ய அருள் என்று புரிந்து கொண்டு நந்தனாரை சிதம்பரத்திற்கு அனுப்பி வைத்தார்.
மிகுந்த ஆனந்தத்துடன் சிதம்பரம் கோயிலில் முன் நின்று மனம் மகிழ பிராத்தனை செய்தார். அவருக்கு கோயிலுக்குள் செல்ல அனுமதியில்லை. அவ்வூரில் உள்ள வேத பண்டிதர்களின் கனவில் சிவபெருமான் தோன்றி நந்தனார் கோயிலுக்குள் செல்ல அனுமதிக்கும்படி கூறினார். அதேபோல், நந்தனாரின் கனவிலும் சிவபெருமான் தோன்றி நாளை அக்னி பிரவேசம் செய்து கோயிலுக்குள் வர வேண்டும் என்று ஆணையிட்டார். எல்லோரும் பிரமிக்கும்படி மறுநாள் காலை அக்னி பிரவேசம் செய்து புதிய திவ்ய உடலை பெற்று பொலிவுடன் தோன்றினார் நந்தனார். பகவானின் நாமங்களைப் பாடிக் கொண்டே சிவபெருமானின் திவ்ய தாண்டவ நடனத்தை தரிசித்தார். மிக ஆனந்தம் பெற்று சிவபெருமானின் அருளால் அவர் சிவனடி அடைந்தார்.
இச்சம்பவத்திலிருந்து பெருமான் குலம், பணம் என்று எவ்வித பாகுபாடில்லாமல் எல்லோர்க்கும் அருள்பவர் என்பது திண்ணம். தாய் தன் மகனைக் காப்பது போல் நந்தனாரை சிவபெருமான் காத்தருளினார் என்பதில் ஐயமில்லை. |
|
|
|
|